அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ இன்று (செப்டம்பர் 28) மதுரையில் தொடங்கப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் இத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
தேர்தல் வாக்குறுதி
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அளித்த வாக்குறுதிகளில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ முக்கியமான ஒன்றாகும். தவெக ஆட்சிக்கு வந்த பின்னர், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கான அரசாணை ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 7.80 லட்சம் குழந்தைகள் பிறப்பதாகவும், அவற்றில் சுமார் 4.20 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 15-ல் தொடங்க அறிவிப்பு
இதைத்தொடர்ந்து ஜூலை 10-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் செப்டம்பர் 15-ஆம் தேதி திட்டம் தொடங்கப்படவில்லை. பின்னர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து செப்டம்பர் 18-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28-ஆம் தேதி திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
1.28 லட்சம் மோதிரங்கள் தயார்
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 22 முதல் திட்டம் தொடங்கும் நாள் வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த தகுதியுள்ள குழந்தைகளுக்கு மோதிரங்களை வழங்க 107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் நாளொன்றுக்கு தலா 100 குழந்தைகள் வீதம் மோதிரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மோதிரங்களுக்கு தனித்துவமான வரிசை எண் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பான பேக்கேஜிங்கிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழாவை முதலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரத் துறை அதிகாரிகளும் அங்கு நேரில் ஆய்வு செய்திருந்தனர்.
பின்னர் தொடக்க விழா உசிலம்பட்டியில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின.
இன்று மதுரையில் தொடக்க விழா
இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெறும் விழாவில் முதல்வர் விஜய், ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை’ தொடங்கி வைக்கிறார். தொடக்க நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 30 குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் தங்க மோதிரங்களை அணிவிக்க உள்ளார்.
தாய்மாமன் திட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு, ரூ.10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தையும் முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்.
1 பைசா டெண்டர் சர்ச்சை
முன்னதாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக தங்க மோதிரங்களை கொள்முதல் செய்ய விடப்பட்ட டெண்டர் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இத் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் எடையுள்ள 22 காரட் தங்க மோதிரங்கள் 4,41,667 கொள்முதல் செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஜூலை மாதம் டெண்டர் கோரியது. இதில் 11 நிறுவனங்கள் பங்கேற்றன.
தங்கத்தின் விலையைத் தவிர்த்து, ஒரு மோதிரத்தை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான கட்டணமாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒரு பைசா குறிப்பிட்டு குறைந்த விலைப்புள்ளி (L1) நிறுவனமாகத் தேர்வானது. அடுத்ததாக GRT ஜுவல்லர்ஸ் ஒரு மோதிரத்துக்கு ரூ.410.97 என விலைப்புள்ளி அளித்திருந்தது.
இந்த டெண்டரை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த பொற்கொல்லர் ஜி.ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். ஒரு மோதிரத்தை தயாரித்து, BIS ஹால்மார்க் செய்து, தமிழகம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில் ஒரு பைசா கட்டணம் என்பது வணிக ரீதியாக சாத்தியமற்றது என்றும், இதனால் மோதிரங்களின் தரம் குறித்த சந்தேகம் எழுவதாகவும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், தங்க நகைகளை கொள்முதல் செய்வதற்கான தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் தகுதி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த வழக்கை செப்டம்பர் 10-ஆம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்தது. டெண்டரில் பங்கேற்ற மற்ற நிறுவனங்கள் ஒப்பந்தம் வழங்கப்பட்டதை எதிர்க்காத நிலையில், டெண்டரில் பங்கேற்காத மனுதாரர் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோர முடியாது என்பது உள்ளிட்ட காரணங்களை நீதிமன்றம் தனது தீர்ப்பில் பதிவு செய்தது.
இதையடுத்து ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 70 சதவிகிதம், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு 30 சதவிகிதம் என்ற விகிதத்தில் தங்க மோதிரங்களை வழங்குவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது.
