ஈகச்சுடர் திலீபன் சிலை அகற்றம்: சிங்கள அரசுக்கு விசிக கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

யாழ்பாணத்தில் திலீபன் சிலை அகற்றப்பட்ட நிலையில் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “ஈழமண்ணில் ஈகச்சுடர் திலீபனின் திருவுருவச் சிலையை சிங்கள -பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் இன்று (செப்டம்பர் 27) அகற்றியுள்ளனர்.

ADVERTISEMENT

யாழ்ப்பாணம், நல்லூரில் சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களால் நிறுவப்பட்ட அச்சிலையை, தமது ஆதிக்கவெறியை வெளிப்படுத்தும் வகையில் சிங்களக் காவல்துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர். அதிபர் அனுர திசநாயக அரசின் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

1987 ஆம் ஆண்டு செப்டர் 26 அன்று ஈகச்சுடர் திலீபனின் இன்னுயிர் மூச்சு அடங்கியது. இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து துளி வன்முறைக்கும் இடமின்றி அறவழியில் 12 நாட்கள் உண்ணாநிலையில் கடும் தவமிருந்த திலீபன், தனது மகத்தான ஈகத்தால் உலகின் கவனத்தை ஈர்த்தார். அவர் ஆயுதப் பயிற்சி பெற்ற ஒரு போராளியாயிருந்தும், வன்முறையில்லா அறவழியில் போராடும் துணிவையும் வலுவையும் கொண்டிருந்தார். அதன் மூலம் வெகுமக்களின் பேரன்பை வென்றெடுத்தார். மேதகு பிரபாகரன் அவர்களின் வணக்கத்திற்குரியவர் என்னும் பேறு பெற்றார்.

ADVERTISEMENT

அத்தகைய மக்கள் போராளியை நன்றிப் பெருக்கோடு உலகெங்கும் தமிழ் மக்கள் கடந்த 39 ஆண்டுகளாக நினைவுகூர்ந்து வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஈழத்திலும் தமிழ்மக்கள் அவரது திருவுருவச் சிலையை நிறுவி அவருக்குத் தமது நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் இந்த உணர்வைக் காயப்படுத்தும் வகையிலும் அவர்களை அச்சுறுத்தி ஒடுக்கும் வகையிலும் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் அவரது சிலையை அப்புறப்படுத்தியிருப்பது அவர்களின் உண்மை முகத்தை உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளது. இவர்கள் இடதுசாரிகள், முற்போக்கானவர்கள் என்கிற தோற்றம் உண்மையல்ல என்பதை உலக மாந்தருக்கு உணர்த்தியுள்ளது.

லெப். கேணல் திலீபனின் சிலையை அவர்கள் எம் மண்ணிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம் ; ஆனால், அவரைத் எம் மக்களின் நெஞ்சத்திலிருந்து ஒருபோதும் அகற்றிவிட முடியாது!

ADVERTISEMENT

எமது திலீபன் கனவு ஒருநாள் நனவாகும் என்கிற நம்பிக்கையோடு உலகத் தமிழர்கள் யாம்ஒருங்கிணைந்து களமாடுவோம்!” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share