இது என்ன நாடா.. சுடுகாடா? விஜய் அரசை வெளுத்து வாங்கிய வேல் முருகன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Velmurugan MLA strongly criticizes Vijay

மக்கள் எழுப்புகிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், 50 காவலர்களோடு வந்து வாக்கு கேட்கிற அவலத்திற்கு இந்த ஆட்சி தள்ளப்பட்டிருக்கிறது என வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

சேலத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தலில் தவாக யாருக்கு ஆதரவு அளிக்கிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த தேர்தலே நடக்க கூடாது இது முழுக்க முழுக்க குதிரை பேரம் பேசப்பட்டுள்ள மாற்றுக்கட்சியில் இருந்து குறிப்பாக அதிமுகவிலிருந்து வெற்றி பெற்ற ஒருத்தரை விலை பேசி, பட்டவர்த்தனமாக, பச்சையாக ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது; இது தமிழக ஜனநாயகத்தின் வெளிப்பாடு. இடைத்தேர்தலில் எங்களுக்கு வாய்ப்பு இருந்தால் போட்டியிடுவோம், நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை.

ADVERTISEMENT

ஒரு சட்டமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் அரசுக்கு மட்டும் கிட்டத்தட்ட 4 கோடி செலவு. இது இல்லாமல் ஒவ்வொரு தேர்தலிலும் 100 கோடி, 200 கோடி என கட்சிகள் வாரி இறைக்கிறார்கள். ஒட்டுமொத்த அரசியலும் இந்த ஒன்னரை மாதம் கம்ப்ளீட்டாக ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது. இது நிற்கக் கூடாது. இந்தப் பேரரசியல் இருக்கக் கூடாது. இது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து!

நேற்று வரை அதிமுகவில் போய் எடப்பாடி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, இரட்டை விரலைக் காட்டி, அனைத்து நாடகமும் நடித்து, ஓட்டு வாங்கி எம்.எல்.ஏ ஆகிவிட்டு, அந்த மை விரல் நகத்தில் மறைவதற்குள்ளாகவே ராஜினாமா பண்ணிட்டு, இன்னொரு கட்சிக்குப் போய் கோட்டையில் இணைந்தனர்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டு வரலாற்றில் திமுக, அதிமுக, ஜெயலலிதா, கலைஞர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் காலத்தில் கோட்டையில் வந்து இணைப்பு விழாக்கள் நடத்திய வரலாற்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் இன்றைக்கு சென்னை கோட்டையில் புஸ்ஸி ஆனந்த் அமைச்சர் அறையில்தான் இணைப்பு விழாக்கள் நடக்கிறது. நேற்று கோவை மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பியுமான மகேந்திரன் போய் தவெகவில் இணைகிறார். ஒரு மணிநேரத்தில் மாவட்ட செயலாளர் பதவி வழங்குகிறார்கள். இது என்ன நாடா சுடுகாடா இது என்ன மொராலிட்டி (அறநெறி) இருக்கும்?

இன்றைக்கு மக்கள் இரண்டு வேட்பாளர்களும் வந்தால் ஓட ஓட விரட்டி அடிக்கிறான். உங்களுக்கு ஆதரவாக ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, அந்த ரசிகர்கள் கூட்டம் பெரும்பான்மையாக இருக்கிறது, அது ஓட்டு போடும் என்பதற்காக ஆணவத்தோடு, அகங்காரத்தோடு எல்லா தவறுகளையும் தொடர்ந்து அடுக்கு அடுக்காக நீங்கள் செய்து கொண்டே இருப்பீர்கள் என்று சொன்னால், இந்த மண்ணில் நிச்சயமாக இது மாற்றத்தை நோக்கிய ஒரு மக்கள் புரட்சியாக ஏற்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்த அயோக்கியர்களை, இந்த தகுதியற்றவர்களை, இதுபோன்ற தேர்தலே வராமல் இருக்கக்கூடிய வகையில் இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.” என்றார்.

ADVERTISEMENT

விஜய் அதிமுகவினரை மற்றும் பலர் என்று விமர்சிப்பது குறித்த கேள்விக்கு, “அதான் ஏற்கனவே ‘தூய சக்தி’, ‘தீர்ந்து போன சக்தி’ என்று சொன்னதற்காக நமது எடப்பாடி ஊர் ஊராக வைத்து கிராமத்து பாணியிலேயே வெளுத்து வாங்குகிறாரே! உங்கள் சேலம் வட்டார மொழியையே கையாள்கிறாரே ! ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று வைத்து’ பேசாமல், எடப்பாடி பழனிசாமி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதற்குத் தகுதி இருக்கிறதா?

சரி, திமுகவை தூய சக்தி என்று சொல்வதை விட்டுவிடுங்கள். நீங்கள் பேசாத அதிமுக கேள்வி கேட்கிறார்களல்லவா? அதற்கு பதில் இருக்கிறதா? அதற்கு பதில் சொல்வதற்கு விஜய் தன்னைத் தயார்படுத்தியிருக்கிறாரா?

நான் கேட்கிறேன், தினமும் தமிழ்நாடு முதலமைச்சர் பத்திரிகை படிக்கிறீர்களா? தமிழ்நாட்டின் முன்னணி பத்திரிகைகளின் தலையங்கங்களைப் படிக்கிறீர்களா? விவாதக் களங்களைப் பார்க்கிறீர்களா? பல விவாதங்கள் நடைபெறுகிறது, அங்கே பொதுமக்களிடமிருந்து வரும் கருத்துகள் என்ன?

பொதுமக்கள் தேர்தலின்போது பத்திரிகையாளர்களும் யூடியூபர்களும் போய் கேட்கும்போது, எத்தனை ஆண்களும் பெண்களும் முதியோர்களும் உங்கள் ஆட்சியில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்? அதெல்லாம் கவனத்திற்கு வருகிறதா?

ஆட்சியாளர்கள் மீது, இந்த அரசாங்கத்தின் மீது, தமிழ்நாட்டின் அமைச்சர்கள் மீது அதிகாரிகளுக்கு ஒரு நம்பிக்கை இல்லை, ஒரு பயமில்லை. ஏன்? இவர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தார்கள்? பேக்ரவுண்ட் என்ன? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? ஒருத்தர் சட்டமன்றத்தில் பேசுகிறார்: ‘நான் வந்து இந்த படத்திற்காக போஸ்டர் ஒட்டியவன். இத்தனை லிட்டர் பாலாபிஷேகம் செய்தவன், எத்தனை ஆண்டுகாலமாக ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ முதல் காட்சி பார்க்க ரூ.2,000 கொடுத்தவன்’ என்று சொல்லி ஒரு அமைச்சராக இருப்பவர் சட்டமன்றத்தில் பேசினால், அதிகாரி எப்படி மதிப்பார்?

ஒரு ‘கர்மவீரர் காமராசர்’ என்று உச்சரிக்கத் தெரியாமல் ‘காமவீரர் காமராசர்’ என்று உச்சரிக்கிற அமைச்சர்கள் இந்த நாட்டிற்கு கிடைத்திருந்தால், ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்த அதிகாரிகள் உங்களை எப்படி மதிப்பார்கள்?

மனமார்ந்த ‘நன்றி’ என்று சொல்வதற்கு நாவில் என் தாய்மொழி தமிழ் உங்களுக்கு வரவில்லை, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ‘மன்மத வணக்கம்’ என்று சொல்கிறீர்கள்.

12 ஆயிரத்தி, 9 ஆயிரத்திரத்தி தொள்ளாயிரத்தி எண்பத்தி இரண்டு என்று எண்களைக் கூடச் சரியாகப் படிக்கத் தெரியாத ஒருவரை நாட்டின் நிதி அமைச்சராக வைத்துக்கொண்டு வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இவர்களை எப்படிப் பிற அமைப்புகளும், ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்தவர்களும் மதிப்பார்கள்? உங்கள் போனுக்கு எப்படிப் பதில் சொல்வார்கள்?

கேவலமாக ஆகிக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு! இதுவரை சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், தமிழ்நாடும் தமிழக சட்டமன்றப் பேரவையும், தமிழக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இவ்வளவு அவமானத்தை தமிழ் மக்களுக்கு உலகளவில்… உலக அரங்கில் தலைகுனிய வைக்கவில்லை.

இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு குறிப்பது குறித்த கேள்விக்கு, “100%-ல் 1% மக்கள் எழுப்புகிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், 50 காவலர்களோடு வந்து வாக்கு கேட்கிற அவலத்திற்கு இந்த ஆட்சி தள்ளப்பட்டிருக்கிறது; அதுவே இதற்குச் சாட்சி! எங்குமே சுதந்திரமாகப் போய் மக்களிடம் உங்களால் வாக்கு கேட்க முடியவில்லை, எந்த ஊருக்குள்ளும் போக முடியவில்லை. கேட்கிற மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. இந்தப் போராட்டங்களுக்குத் தீர்வில்லை. விவசாயிகளிடம் தற்காலிகமாக கெஞ்சி, மூன்று அமைச்சர்கள் போய் கெஞ்சி, கதறி, காலில் விழாத குறையாக, ‘இந்த இடைத்தேர்தல் வரைக்கும் அவகாசம் கொடுங்கள், உங்கள் போராட்டத்தைத் தள்ளிவையுங்கள்’ என்று கெஞ்சுகிறீர்கள். அதே மாதிரி 5 மூத்த அமைச்சர்கள் தூய்மைப் பணியாளர்களிடம் போய் கெஞ்சி, கதறி ‘நீங்கள் போராட்டத்தைத் தள்ளிவையுங்கள்’ என்கிறீர்கள். அந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர்களிடம் தீர்வு இருக்கிறதா? துணிச்சல் இருக்கிறதா?

அரசு ஊழியர்களுக்கு ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தருவோம்’ என்றீர்களே, கொடுத்தீர்களா? போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அந்த பென்ஷன் பணத்தைப் போட்டீர்களா? பகுதிநேர ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு அரசு பணி நியமனம் செய்தீர்களா? பல்லாயிரக்கணக்கான செவிலியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை நிரந்தர நியமனம் செய்தீர்களா? என்ன செய்திருக்கிறீர்கள் இந்த 1,20 நாட்களில் என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

அந்த தலைக்கணம் மிக்க நடிகரை கெடுத்ததே தமிழக ஊடகங்கள்தான் என நான் குற்றம் சாட்டுகிறன் என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share