தமிழகத்தில் பொது சட்டம் – ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(RTI) கீழ் வழங்குவதில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் விஜய் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தனது எக்ஸ் பதிவில், “வெளிப்படையான அரசு” என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது.
500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய திறனற்ற அரசு,
இப்போது தனது தவறை மறைக்க, சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களையே மக்கள் கேட்க முடியாதபடி RTI உரிமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது வெட்கக்கேடானது.
இதுதான் மாற்றமா?” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் தனது எக்ஸ் பதிவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேள்வி எழுப்பும் உரிமையைப் பாதுகாப்பதே ஜனநாயகத்தின் அடிப்படை.
சட்டம் & ஒழுங்கு தொடர்பான விவகாரங்களுக்கு தகவல் அறியும் உரிமையிலிருந்து விலக்கு அளிப்பது, அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை பாதிக்கும் நடவடிக்கையாக அமையும்.
மக்களின் உரிமைக்குரல்களும், போராட்டங்களும் ஜனநாயக வழியில் அணுகப்பட வேண்டுமே தவிர, அவற்றை ஒடுக்குவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படக் கூடாது. சட்டம் & ஒழுங்கு என்ற பெயரில் தகவல்கள் மறைக்கப்படுவது பொதுமக்களின் கேள்வி கேட்கும் உரிமையை பலவீனப்படுத்தும்.
எனவே, இந்த விலக்கு தொடர்பான உத்தரவை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து, வெளிப்படைத்தன்மையையும் தகவல் அறியும் உரிமையையும் உறுதி செய்ய வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பதிவல், “சட்டம் ஒழுங்கு தொடர்பாக ‘தகவல்கள் ஏதும் கேட்க முடியாதென’ , தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பில் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது மனித உரிமைகளை நசுக்குவதற்கு வழிவகுக்கும். எனவே, அரசு இதனை உடனே திரும்ப பெறவேண்டுமென வலியுறுத்துகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
