சட்டம் – ஒழுங்கு விவகாரங்கள் இனி RTI கீழ் வராது: தவெக அரசு அதிரடி உத்தரவு

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாநில அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான ‘பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை’யின் கீழ் வரும் தகவல்கள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act, 2005) வரம்பிலிருந்து விலக்களிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த உத்தரவின் மூலம், இனி சட்டம்-ஒழுங்கு தொடர்பான முக்கிய விவரங்களை ஆர்டிஐ மூலம் கேட்டுப் பெற முடியாது.

விலக்களிக்கப்பட்ட முக்கியத் தகவல்கள்:

சாதி மற்றும் சமூக மோதல்கள்: சாதி மற்றும் சமூக ரீதியிலான மோதல்கள் குறித்த விவரங்கள்.

ADVERTISEMENT

காவல்துறை விசாரணை அறிக்கைகள்: காவல் துறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து PSO 150(3)-இன் (பழைய எண் 144(3)) கீழ் நடத்தப்படும் விசாரணை அறிக்கைகள்.

காவல் நிலைய மரணங்கள் & சித்ரவதைகள்: காவலில் நடக்கும் மரணங்கள், சித்ரவதைகள் மற்றும் காவல் துறை விசாரணை குறித்து PSO 151-இன் (பழைய எண் 145) கீழ் தாக்கல் செய்யப்படும் அறிக்கைகள்.

ADVERTISEMENT

போராட்டங்கள் மற்றும் வழக்குகள் திரும்பபெறல்: மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அரசியல்/சமூகக் காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான கோரிக்கைகள்.

அவதூறு வழக்குகள்: அவதூறான கட்டுரைகள், செய்திகள் மற்றும் உரைகள் மீது வழக்குத் தொடர அனுமதி அளிப்பது தொடர்பான ஆவணங்கள்.

சாமானிய மக்கள் அரசுத் துறைகளிடம் இருந்து தகவல்களைப் பெற உதவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருப்பது, அரசின் வெளிப்படைத்தன்மையைப் பாதிக்கும் என்றும், சட்டம் ஒழுங்கு தொடர்பான விமர்சனங்களில் இருந்து தப்பிக்கவே தவெக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் பதிவில், “பொதுத்துறை கீழ் வரக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரிவு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்று தமிழ்நாடு அரசு விலக்கு அளித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுத்துறையின் சட்ட ஒழுங்கு பிரிவில் உள்ள அனைத்து தகவல்களும் Intelligence சம்பந்தமானது என்ற வகைப்பாடு செய்வது அபத்தமானது.

இந்த ஆணையை தமிழ்நாடு அரசு உடனே பின்வாங்க வேண்டும். வெளிப்படைத்தன்மை கொண்டு வருகிறோம் என்று சொல்லி அதற்கு மேல் எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது!” என பதிவிட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share