கரூர் பெருந்துயரம் : ஆறாத ரணம்.. தீராத வலி.. சொல்ல முடியாத சோகம் – முதல்வர் விஜய் உருக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இச்சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கரூர் பெருந்துயரச் சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சிகளின் உதவியுடன் முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், இன்று கரூர் பெருந்துயரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்துத் தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் (X) பக்கத்தில்:

“என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

ADVERTISEMENT

கடந்த வருடம்… இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.

என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.

ADVERTISEMENT

சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம் நாமும், நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.

நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.

நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி” எனப் பதிவிட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share