திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் சத்யபாமா வாக்கு சேகரிக்கச் சென்ற போது, “துரோகி” எனக் கூறி அதிமுகவினர் கூச்சலிட்டதால் அவர் பரப்புரை செய்ய முடியாமல் அங்கிருந்து கிளம்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்று, 20 நாட்களுக்குள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்த மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகிய இருவருக்கும் தவெக சார்பில் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தாராபுரத்தில் சத்யபாமா வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்யபாமா, பொள்ளாச்சி சாலையில் உள்ள பொட்டிகாம்பாளையத்தில் வாக்கு சேகரிக்கச் சென்றார். அங்குத் திரண்டிருந்த அதிமுக நிர்வாகிகள், தவெக வேட்பாளரைத் தடுத்து “துரோகி” எனக் கூச்சலிட்டு முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அதிமுக – தவெகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல் துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, தவெக வேட்பாளர் பரப்புரையைத் தவிர்த்துவிட்டுத் திரும்பிச் சென்றார். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
