தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவிற்கு குண்டடம் அருகே உள்ள கிராமத்தில் வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, வெற்றி பெற்ற 15 நாட்களுக்குள் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், அவருக்கு மீண்டும் த.வெ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேட்பாளர் சத்யபாமாவுக்குத் தொகுதியில் ஒரு சில இடங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக, குண்டடம் அருகே உள்ள கிராமம் ஒன்றிற்குச் சென்றபோது, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவரைப் பிரச்சாரம் செய்யவிடாமல் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் பிரச்சாரத்திற்குச் செல்லும் பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையின் பாதுகாப்பையும் மீறி சரமாரி கேள்விகள்:
காவல்துறையின் பாதுகாப்பையும் மீறி கிராம மக்கள் தங்களது எதிர்ப்புகளைப் பதிவுசெய்து, சத்யபாமாவிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர் இன்று குண்டடம் அருகே உள்ள பெரியகுமாரபாளையம், குப்பநாயக்கன்பட்டி, ஈஸ்வரசெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பரப்புரைக்குச் சென்றிருந்தார்.
பெரியகுமாரபாளையம் பகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக, த.வெ.க நிர்வாகிகள் பேசத் தொடங்கினர். அப்போது அங்கிருந்த சிலர் சத்யபாமாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நிலையில் ரூ.50 கோடியைப் பெற்றுக்கொண்டு, உங்களுக்காகக் கடுமையாக உழைத்த எங்களுக்குத் துரோகம் செய்துவிட்டுப் பதவியை ராஜினாமா செய்துள்ளீர்கள். தற்போது மீண்டும் ஓட்டுக் கேட்டு வந்துள்ளதை ஏற்க முடியாது. என்றனர்.
அப்போது வேட்பாளர் சத்தியபாமா திமுகவும், அதிமுகவும் கூட்டுச்சேர்ந்து ஆட்சி அமைப்பதை அம்மாவின் தொண்டர்களாக உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்றார். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் நீங்கள், அதற்கான ஆதாரத்தை இப்போதே காட்டுங்கள்” என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதேபோல், கடும் வறட்சி நிலவும் இந்தப் பகுதிகளில் பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்றும், பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
த.வெ.க தொண்டர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து சத்யபாமாவிடம் கேள்வி எழுப்பிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, குண்டடம் போலீசார் வேட்பாளர் சத்யாமாவை அங்கிருந்து அடுத்த பகுதிக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
