மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுவில் இருந்து என் அம்மாவை ராஜினாமா செய்ய அமைச்சர் நிர்மல் குமார் அழுத்தம் கொடுக்கிறார் என முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 17-ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாக, கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகக் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான PTR பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி பழனிவேல் ராஜன் குற்றம்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்களது குடும்பத்திற்கும் மீனாட்சியம்மன் கோயிலுக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. கடந்த 1963-ஆம் ஆண்டு நடைபெற்ற கோயில் குடமுழக்கின் போது, மறைந்த PT ராஜன் தலைமையில் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்போது எங்களது குடும்பத்தினர் சார்பில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சாற்றப்பட்டது.
அரசியலையும் ஆன்மீகத்தையும் எங்களது குடும்பம் என்றுமே இணைத்துப் பார்த்ததில்லை. ஆன்மீகத் திருப்பணிகள் எவ்வளவு சிறப்பாக நடைபெற வேண்டுமோ, அவ்வளவு கவனமாகச் செயல்படுவதில் அரசியலில் இருக்கும் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அதில் அரசியல் கலந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாகவும் இருக்கிறோம். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாகவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் நடைபெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த விழாவை எந்தவித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்காமல் அனைவரும் ஒருமித்த கருத்துடன் மகிழ்ச்சியாக நடத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
குடமுழுக்கு விழாவில் எழுந்த சர்ச்சைகள்:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு நிகழ்வின் போது குடமுழுக்கைக் காண பக்தர்களுக்கு வழங்கப்பட்ட ‘பாஸ்’ (Pass) விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல், சித்திரை வீதியில் பக்தர்களை அனுமதிக்காதது உள்ளிட்ட பல்வேறு புகாருடன் கோயில் குடமுழுக்கு நிறைவடைந்தது. இக்குற்றச்சாட்டுகளை தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உறுதி செய்துள்ளது.
இதனிடையே, குடமுழுக்கு நடைபெற்ற நாளன்று வெளியான புகைப்படம் ஒன்று மேலும் சர்ச்சையைக் கிளப்பியது. அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் நின்றுகொண்டிருக்க, லாட்டரி அதிபர் மார்ட்டினின் குடும்பத்தினர் முன்வரிசையில் அமர்ந்திருந்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின.
தவெக அரசு மீது PTR பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்
இதுகுறித்து குடமுழுக்கு நடந்த செப்டம்பர் 17ல் PTR பழனிவேல் தியாகராஜன் முகநூல் பக்கத்தில், “குடமுழுக்கு விவகாரத்தில் அறங்காவலர் குழுவின் எந்தவொரு ஆலோசனையையும் கருத்தில் கொள்ளாமல், தவெக அரசு மற்றும் அதிகாரிகள் நேரடியாகச் செயல்பட்டதே குளறுபடிகளுக்கு காரணம். முந்தைய இதுபோன்ற நிகழ்வுகளில் அனுபவம் உள்ள அறங்காவலர்களைத் திட்டமிடலில் இருந்து முற்றிலும் ஒதுக்கி வைத்ததோடு, அனுபவமில்லாத அதிகாரிகளைக் கொண்டு விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இன்றைய குறைபாடுகளுக்கு அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். மேலும் கடந்த 2021 முதல் 2026 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில்தான் 95 சதவீதப் பணிகள் முடிவடைந்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அமைச்சர் நிர்மல்குமார் மீது பிடிஆர் புகார்
இதுகுறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விவகாரத்தில் நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்; அமைச்சர் நிர்மல் குமார், மதுரையில் திருப்பரங்குன்றம் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் உள்ள அறங்காவலர் குழுவை எப்படியாவது ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்று கூடுதல் அழுத்தம் கொடுத்துக்கொண்டே வருகிறார்.
ஆட்சிக்கு வந்தது முதல் இந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பகுதிகளுக்கு இவர் தனிப்பட்ட முதலமைச்சர் என்ற முறையில் செயல்படுகிறார்.
இப்போது எனது கேள்வி என்னவென்றால், உறுதியாக இது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ஆதரவோடு நடக்க முடியாது; அவர் எத்தனையோ வேலைகளில் இருப்பார். அவர் நிர்மல் குமாருக்கு இவ்வளவு ஆதரவு கொடுக்கிறாரா? அந்த அமைச்சரின் மிரட்டலில்தான் ‘எங்கள் அம்மாவை ராஜினாமா செய்யச் சொல்கிறார்’ என்று இன்றைய இணை ஆணையர் கூறுகிறார்” என குற்றம் சாட்டி உள்ளார்.
