வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தங்களுக்கு தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324 இன் கீழ் அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம், ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல்களை நேர்மையாகவும், சுதந்திரமாகவும், நடுநிலையாகவும் நடத்துவதற்கு பொறுப்பேற்ற மிக மிக முக்கியமான அரசமைப்பு அமைப்பாகும்.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் மீது சமீப ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தற்போது தேர்தல் ஆணையத்திலேயே மோதல் வெடித்திருக்கிறது.
அதாவது தலைமை தேர்தல் ஆணையர் மற்ற இரண்டு ஆணையர்களின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் ஆணையத்திற்குள் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
2025 ஆம் ஆண்டு பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடந்த போது சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பிய போதும் தேர்தல் ஆணையம் இந்த பணிகளை மேற்கொண்டது. பீகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் SIR மேற்கொள்ளப்பட்டது.
இது, போலி வாக்காளர்கள் அல்லது ஊரில் இல்லாத வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் ஒரு நடவடிக்கை தான் என்றாலும், 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடிக்கும் அதிகமான பெயர்களை நீக்கி உள்ளது.
இதன் மூலம் யார் வாக்களிக்கலாம், யார் வாக்களிக்க கூடாது என்பதை தீர்மானிப்பதில் தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்த விவாதம் மைய புள்ளியாக அமைந்தது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புலனாய்வு விசாரணையில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டது தெரியவந்துள்ளது.
அவர்கள் வேறு யாரும் அல்ல… தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களில் மற்ற இருவரான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரால் இந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

SIR பணிகள் நாடு முழுவதும் மூன்று ஆணையர்களின் மேற்பார்வையிலேயே நடைபெற்று வருகிறது. ஆனால் தங்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறையாவது, அதுவும் ஒரே நாளில் நான்கு முறையாவது சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி இருவரும் ஆட்சேபனையை பதிவு செய்துள்ளனர்.
*மூன்று தேர்தல் ஆணையர்களில் இவர்கள் இருவரும் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமல் இருட்டடிப்பு செய்வது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது மற்றும் பெயர்களை நீக்குவது ஆகியவை குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.
*புதிய வாக்காளர்களுக்கான விதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை சட்டவிரோதமானது மற்றும் அதிகாரப்பூர்வமற்றது என குறிப்பிட்ட இவர்கள், மாநில அதிகாரிகளை புறக்கணித்துவிட்டு வாக்காளர்கள் தரவு தளத்தை டெல்லியில் மையப்படுத்தும் நடக்கவடிக்கைகளுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
*வாக்காளர் பட்டியலுக்கான மென்பொருளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்து, அதை நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான அமைச்சரவை செயலாளர் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர்.
*இது தேர்தல் ஆணையத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையிலான பிளவை குறிப்பதுடன், அதன் செயல்பாடுகள் குறித்த சந்தேகத்தையும் வெளிப்படுத்துகிறது.
சுக்பீர் சந்து எதிர்ப்பு தெரிவித்து எழுதிய ஒரு கடிதத்தில், ‘இரண்டு ஆணையர்களின் எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தல்களுக்கு முரணாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. அதன் நடவடிக்கை அதிகாரபூர்வமற்றது மற்றும் சட்ட விரோதமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மிக சமீபத்தில் எப்போதும் உள்ள வழக்கத்திற்கு மாறாக, வாக்காளர் பட்டியலின் தகவல் தொழில்நுட்ப அமைப்பை கண்காணிக்கும் அதிகாரத்தை குறைக்கும் வகையில் செய்யப்பட்ட பணி ஒதுக்கீடு மாற்றங்கள் குறித்து சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி இருவரும் தனித்தனியாக அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த மாற்றங்கள் தங்களது கவனத்துக்கு வராமலேயே செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
புதிய வாக்காளர்கள் யார்? படிவம் 6 ஏன் மாற்றப்பட்டது?

இந்த விவகாரத்தில் முக்கியமானது புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6ல் செய்யப்பட்ட மாற்றமாகும். இந்த ஆண்டு புதிதாக விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் அல்லது அவரது பெற்றோர்களோ தாத்தா பாட்டியோ இதற்கு முந்தைய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் விண்ணப்பதாரர்களால் மேல் நடவடிக்கைக்கு செல்ல முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டது.
அரசு விதிகளில் திருத்தம் கொண்டு வராமல் படிவம் 6- ஐ இத்தகைய முறையில் மாற்ற முடியாது என்று விவேக் ஜோஷி மே மாதத்திலே எச்சரித்திருக்கிறார். இதை சுக்பீர் சந்துவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். எனினும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 13ஆம் தேதி சுக்பீர் சந்து, இது அங்கீகரிக்கப்படாதது மற்றும் சட்டவிரோதமானது எனக் கூறி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். ஆனால் இணையதள படிவத்தில் இந்த கேள்வி அப்படியே இருந்துள்ளது.
வாக்காளர் பட்டியலை அணுகும் உரிமை யாருக்கு இருக்க வேண்டும்?
இரண்டாவது பிரச்சினை, வாக்காளர் தரவு தளத்தை அணுகும் அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்பது தொடர்பானது. வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த ஒவ்வொரு அரசியல் குற்றச்சாட்டுக்கும் தேர்தல் ஆணையம் அளிக்கும் மிகப்பெரிய தற்காப்பு வாதமே, “வாக்காளர் பட்டியல் தயாரிப்பு என்பது டெல்லியில் குவிக்கப்படாமல் நாடு முழுவதும் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடம் பரவலாக்கப்பட்ட ஒரு அமைப்பாக செயல்படுகிறது (decentralized) என்பதுதான். ஒவ்வொரு தொகுதியின் வாக்காளர் பட்டியலும், களத்தில் சட்டபூர்வ அதிகாரியாக இருக்கும், ‘அதன் தேர்தல் பதிவு அதிகாரியால்’ (ERO) தயாரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. பொதுவாக இந்த அதிகாரி, சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஆக (வருவாய் கோட்டாட்சியர்) இருப்பார். இந்த வாக்காளர் பட்டியல் தரவுகள் ERONet மற்றும் அதன் மேம்பட்ட வடிவமான ECINet ஆகிய மென்பொருட்களில் பராமரிக்கப்படுகின்றன.
இந்த சூழலில் கடந்த ஓராண்டாக தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு (ERO) இந்த பட்டியலை அணுகும் வசதி கட்டுப்படுத்தப்படுகிறதா என்று இரு ஆணையர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த ஆண்டு மே மாதம்- மாநிலங்கள் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது ஜோஷி சுட்டிக்காட்டி எச்சரித்தது இதையேதான். வாக்காளர் பட்டியல் தரவு தளம் படிப்படியாக மையப்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட சட்டபூர்வ அதிகாரிகளை தவிர யாரும் தரவு தளத்தில் எந்த மாற்றமும் செய்வதற்கான அதிகாரத்தை பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த ஒரு விரிவான தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்துள்ளார்.
இந்த விவகாரத்தை சுக்பீர் சந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியலை பராமரிக்கும் டிஜிட்டல் அமைப்பான ERONet இணையதளத்தை அணுகுவதற்கு தங்களுக்கு சரியான மற்றும் முழுமையான அனுமதி கிடைக்கவில்லை என்று மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகள் கூறுவதாக தெரிவித்திருந்தார்.
மேலும் “சட்டபூர்வ அதிகாரிகளுக்கு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள சரியான, முழுமையான அணுகல் மற்றும் தன்னிச்சையாக செயல்படும் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை இயக்குனர் சீமா கண்ணாவுக்கு எந்தவிதமான சட்டபூர்வ அதிகாரமும் இல்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மேல் முறையீடுகளுக்கு அனுமதி அளித்தது யார்?
மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது மிகப்பெரிய சர்ச்சையும் எதிர்ப்பும் எழுந்தது. தேர்தலில் இது ஏற்படுத்திய தாக்கம் குறித்து நேரடி ஆதாரம் எதுவும் இல்லை. அங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 49 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது. இருப்பினும் இந்த 49 தொகுதிகளின் முடிவுகள் இரு கட்சிகளுக்கும் இடையே கிட்டத்தட்ட சமமாகவே இருந்தன. 26 தொகுதிகளை பாஜகவும், 21 தொகுதிகளை திரிணமுல் காங்கிரசும் கைப்பற்றின.
ஆனால் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்ட விதம் தொடர்பாக எழுந்த புகார்கள் காரணமாக பிப்ரவரி 2026 இல், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டது. 60 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை சரி பார்க்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திடமிருந்து பறித்து நீதித்துறை அதிகாரிகளிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது.
இறுதியில் இவர்களில் 27 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பின்னர் தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்டன. அந்த முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட தீர்ப்பாயங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் தீர்ப்பாயங்களில் 38 லட்சம் மேல்முறையீடுகள் நிலுவையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதில் 22.21 லட்சம் மேல்முறையீடுகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களால் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க கோரி தாக்கல் செய்யப்பட்டவை ஆகும்.
மீதமுள்ள 16.10 லட்சம் மேல்முறையீடுகள் நீதித்துறை அதிகாரிகளால் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு எதிராக, அவர்களின் பெயர்களை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். இந்த மேல்முறையீடுகளை யார் தாக்கல் செய்தது என்பதை பற்றி தேர்தல் ஆணையம் எதையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த மேல்முறையீடுகளை தேர்தல் ஆணையத்தின் சார்பில் யார் தாக்கல் செய்ய அதிகாரம் பெற்றார்கள் என்பது தான் சுக்பீர் சந்து எழுப்பிய முக்கிய கேள்விகளில் ஒன்றாகும்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு சுக்பீர் சந்து எழுதிய கடிதத்தில், ‘இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இந்த மேல்முறையீடுகளை தாக்கல் செய்ய யாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. அந்த அதிகாரத்தை வழங்கியது யார்? என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படை அல்லது நடைமுறைகள் குறித்து தனக்கோ ஆணையர் விவேக் ஜோஷிக்கோ அல்லது மேற்கு வங்கத்தின் தற்போதைய முதன்மை தேர்தல் அதிகாரிக்கோ எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதையும் அவர் பதிவு செய்துள்ளார்.
கோவாவில் மென்பொருள் சிக்கல்…
கோவாவில் ஏற்பட்ட மற்றொரு சம்பவம் இந்த விவாதத்தின் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, தர்க்க ரீதியான முரண்பாடு என மென்பொருளால் அடையாளம் காணப்பட்ட வாக்காளர்களிடம் ஆவணங்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் 97 வாக்காளர்களும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதியானவர்கள் என அதிகாரிகள் முடிவு செய்த போதும், அந்த முடிவை மென்பொருளில் பதிவு செய்வதற்கான வசதி இல்லாததால் அவர்கள் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை
இது தொடர்பாக பிப்ரவரி 11 முதல் 17 வரை கோவா மாநில முதன்மை தேர்தல் அதிகாரியின் அலுவலகம், அந்த மாநிலத்தின் பொறுப்பு அதிகாரியான மூத்த துணை தேர்தல் ஆணையர் ஞானேஷ் பார்திக்கு எட்டு முறை அவசர கடிதங்களை எழுதியது. இந்த கடிதங்களின் நகல்கள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை இயக்குநர் சீமா கண்ணாவுக்கும் அனுப்பப்பட்டன. அதில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முன்பு மேற்கொள்ளப்பட்ட நீக்க நடவடிக்கைகளை திரும்ப பெற தேர்தல் பதிவு அதிகாரிகளை அனுமதிக்கும் “ரோல் பேக்” வசதியை கோரி இருந்தனர்.
ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. தொழில்நுட்ப வசதியும் உரிய நேரத்தில் மென்பொருளில் செயல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக கோவாவின் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து அந்த 97 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் மென்பொருள் முடிவுகளுக்கு சட்டபூர்வ அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளுக்கும் இடையே ஏற்படக்கூடிய முரண்பாடுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 இன் கீழ் அமைக்கப்பட்ட அரசமைப்பு அமைப்பான தேர்தல் ஆணையம், சம அந்தஸ்து கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களைக் கொண்டு இயங்குகிறது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் முதன்மையானவரே தவிர தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பணி காலம்) சட்டம் 2023 இன் பிரிவு 18 படி, ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடிந்தவரை ஒருமனதாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒருவேளை தலைமை தேர்தல் ஆணையருக்கும் மற்ற தேர்தல் ஆணையர்களுக்கும் இடையே எந்த ஒரு விஷயத்திலாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அந்த விவகாரம் பெரும்பான்மையினரின் கருத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் தனித்து முடிவெடுப்பது சட்டவிரோதமானது ஆகும்.
முக்கிய விவரங்கள்
*கடந்த பத்து மாதங்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகளுக்கு எதிராக மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் 14 முறை அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனைகளை பதிவு செய்துள்ளனர்.
*தங்களது கவனத்துக்கு அல்லது ஒப்புதலோ இன்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக இந்த இரு ஆணையர்களும் கூறுகின்றனர்.
*13 கோடி வாக்காளர்களின் பெயர்களை பாதிக்கும் சிறப்பு தீவிர திருத்தப்பணி விவகாரத்தை மையமாக வைத்தே இந்த மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
*புதிய வாக்காளர் பதிவுக்கான படிவம் 6ல் செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத சட்டவிரோத மாற்றங்களை தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.
*தகவல் தொழில்நுட்ப பிரிவுகள் வாயிலாக வாக்காளர் பட்டியல் தரவுகளும் படிப்படியாக மையப்படுத்தப்படுவது குறித்த கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
*தற்போது மையப்படுத்தப்பட்ட மென்பொருள், கள அளவில் தேர்தல் அதிகாரி எடுத்த முடிவுகளை மீறி தகுதியுள்ள வாக்காளர்களை தடுக்கிறது.
*டிஜிட்டல் அமைப்புகளை மையப்படுத்துவது, தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான தேர்தல் ஆணையத்தின் பாரம்பரியமான பரவலாக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாட்டை சீர்குலைக்கிறது.
*சட்ட ரீதியான அதிகாரிகளின் அணுகலை கட்டுப்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்பத் துறை இயக்குனரின் சட்டபூர்வ அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
*உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இருந்த போதிலும் கோவாவில் மென்பொருள் தொடர்பான சிக்கல்களால் 97 வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்தனர்.
*எதிர்ப்பு குறித்த நகல்கள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் அனுப்பப்பட்டன. இது முன் எப்போதும் இல்லாத வகையிலான அரசியலமைப்பு அதிகார மோதலை உணர்த்துவதாக உள்ளது.
*கடந்த கால தனிநபர் எதிர்ப்புகளை போல அல்லாமல் இந்த பிளவினால் ஆணையத்தின் பெரும்பான்மையினர் முடிவெடுப்பதில் இருந்து ஓரங்கட்டப்படுகின்றனர்.
*தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஒருமனதாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 2023 ஆம் ஆண்டு சட்டம் மிகத் தெளிவாக கூறுகிறது. ஆனால் இந்த விதியை மீறி தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படும் போது ஆணையத்தின் தலைவருக்கும் மற்ற ஆணையர்களுக்கும் இடையே எவ்வளவு கடுமையான மோதல்கள் மற்றும் பதற்றமான சூழல் உருவாகின்றன என்பதை இவை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையரும் மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் சந்தித்து முழுமையான ஒரு கூட்டத்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு மாத இடைவெளிக்கு பிறகு நடைபெற்ற முதல் முழுமையான கூட்டம் இது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
எனினும் இந்தக் கூட்டத்தில் இரு தேர்தல் ஆணையர்களும் எழுப்பிய குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதம் நடந்ததா, அவற்றை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது
யார் இந்த தேர்தல் ஆணையர்கள்?
சுக்பீர் சிங் சந்து…

அமிர்தசரசில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். 1988 பேட்ச் உத்தரகாண்ட் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், 2021 முதல் 2024 வரை அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
2019 முதல் 2021 வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவராகவும், 2024 பிப்ரவரி மாதத்தில் லோக்பால் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ள இவர், 2007 முதல் 2014 வரை மூன்று வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 4 முதலமைச்சர்களுக்கு முதன்மைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2024 மார்ச் 15ஆம் தேதி தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.
விவேக் ஜோஷி…

ஹரியானா கேடரை சேர்ந்த 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி இவர். ஹரியானா மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஜவுளி துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மற்றும் நிதி அமைச்சகங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் இயக்குநர்கள் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஜெனிவாவில் உள்ள கிராஜுவேட் இன்ஸ்டிடியூட்டில் சர்வதேச பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஐஐடி ரூர்க்கியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். 2025 பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.
