அமைச்சர் ஆனந்த் பிரசாரம்- கறுப்பு கொடியுடன் எதிர்ப்பு- தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு மக்கள் கண்டனம்

Published On:

| By Mathi

Minister Anand-Maduranthakam

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அமைச்சர் ஆனந்துக்கு அத்திவாக்கம் பகுதியில் பொதுமக்கள் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த மரகதம் குமரவேல், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் அவரையே தவெக மீண்டும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து மரகதம் குமரவேல் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்தும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பள்ளிப்பேட்டை, பாதிரி, நேமம், அத்திவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக அமைச்சர் ஆனந்த் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குச் சென்ற அவர், அங்கு அமர்ந்து உணவு மற்றும் தண்ணீர் அருந்தியதுடன், அவரது குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது, முதலமைச்சர் விஜய் மக்களுக்குத் தேவையானவற்றை செய்து வருவதாகவும், வேட்பாளர் மற்றும் அமைச்சர்களிடம் மக்கள் உரிமையுடன் கேள்வி கேட்கலாம் என்றும் ஆனந்த் பேசினார்.

ADVERTISEMENT

கறுப்பு கொடியுடன் எதிர்ப்பு

இந்த நிலையில், அத்திவாக்கம் பகுதியில் அமைச்சர் ஆனந்த் வாக்கு சேகரிக்கச் சென்றபோது எதிர்ப்பு கிளம்பியது. அங்கிருந்த பொதுமக்களில் ஒரு தரப்பினர், மரகதம் குமரவேல் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததை முன்வைத்து கேள்விகளை எழுப்பினர்.

குறிப்பாக, “பணத்திற்காக கட்சி மாறியவர் மீண்டும் வாக்கு கேட்டு வருவது நியாயமா?” என்று அமைச்சர் ஆனந்திடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அவரது பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடிகளையும் காட்டினர்.

ADVERTISEMENT

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களுக்கும் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிலைமை பரபரப்பானதைத் தொடர்ந்து அமைச்சர் ஆனந்த் அங்கு மேற்கொண்ட பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பிச் சென்றார்.

மரகதம் குமரவேலுக்கு பிரசாரத்தின்போது எதிர்ப்பு எழுவது இது முதல்முறையல்ல. கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி வீராணக்குன்னம் பகுதியில் அவர் வாக்கு சேகரிக்கச் சென்றபோதும் பொதுமக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். “இதுவரை தொகுதிக்கு என்ன செய்தீர்கள்? இப்போது ஏன் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறீர்கள்?” என்று அவர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் மரகதம் குமரவேல் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், ஏற்கெனவே வெற்றி பெற்ற பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கக்கூட தொகுதிக்கு வரவில்லை என்றும், தற்போது மீண்டும் வாக்கு கேட்டு வருவது ஏன் என்றும் சில கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share