சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், முந்தைய திமுக அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (செப்டம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ”திமுக மீது இல்லாத வீண்பழியை தவெக அமைச்சர்கள் சுமத்தி வருகிறார்கள். ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணிக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குறிப்பாக 2025 அக்டோபர் 6-ஆம் தேதி தன்னார்வலர் ஒருவர் புகார் கொடுத்தார். அடுத்த நாளே, அக்டோபர் 7-ஆம் தேதி எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிவிட்டோம். அவர் கொடுத்த வீடியோ காட்சிகளில் தெளிவு இல்லை; போதிய ஆதாரமும் கிடைக்கவில்லை.
அதனால், ‘வழக்கைக் கைவிடவில்லை. உரிய ஆதாரங்கள் திரட்டும் வரை வழக்கின் மீதான விசாரணையைத் தள்ளி வைத்துள்ளோம். புதிய ஆதாரம், சாட்சியம் கிடைக்கும் பட்சத்தில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்’ என போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்திருந்தது. இதில் எப்படி குற்றவாளியைக் காப்பாற்றினோம் எனச் சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தசூழலில் திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், ”சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
1990களில் இருந்தே இக்குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடுஞ்செயல்களில் அவர்களால் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.
இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
இது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதியல்ல. இனி எந்தக் குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில், பாதுகாப்பான சமூகச் சூழலை உறுதி செய்ய வேண்டும்.
தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
