சென்னை-குமரி; கோவை-ஓசூர்… விஜய் அரசின் புதிய 8 வழிச்சாலை திட்டங்களை அறிவித்த ஆதவ் அர்ஜூனா

Published On:

| By Mathi

Aadhav Arjuna Announces New Projects

தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் தொழில் மையங்களை அதிவேக சாலை வசதியால் இணைக்கும் வகையில் புதிய 8 வழிச்சாலை திட்டங்களை விஜய் அரசு முன்னெடுக்க உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான சாலையை 8 வழிச்சாலையாக மாற்றுவதுடன், சென்னை-கோவை, கோவை-ஓசூர், தூத்துக்குடி உள்ளிட்ட தொழில் மையங்களை இணைக்கும் வகையிலும் 8 வழிச்சாலைகளை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் மாநில அளவிலான பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று (22.09.2026) சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் நடந்து வரும் பணிகளின் முன்னேற்றம், தரம், காலக்கெடுவிற்குள் நிறைவேற்றுதல் மற்றும் கள அளவிலான கண்காணிப்பு குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: நாம் ஒரே சாலையில் யூ-டர்ன் வைக்கிறோம். இந்தப் புதிய வடிவமைப்பு அப்படி கிடையாது. அதே சாலையில் அந்தப் பக்கமும் ஒரு யூ-டர்ன் அமைத்து, திரும்பும் வாகனத்திற்கென தனியாக ஓர் இடத்தைக் கொடுக்கிறார்கள்.

எனவே நெடுஞ்சாலைகளைப் பொறுத்தவரை, யூ-டர்ன் செய்யும் வாகனங்களுக்காக 20 கிலோ மீட்டருக்கு ஒரு யூ-டர்ன் அமைக்காமல், வேண்டுமானால் 40 கிலோ மீட்டருக்கு ஒரு யூ-டர்ன் அமைக்கலாம். ஆனால் இந்த மாதிரி முறையான அமைப்புடன் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஏனென்றால், யூ-டர்ன் செய்யும்போது வலதுபுறம் திரும்புகிறோம். அப்போது இந்தப் பக்கம் 150 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு கார் வந்துகொண்டிருக்கிறது என்றால், திரும்பும்போதே அவர்கள் மோதிவிடுகிறார்கள். பெரிய விபத்துகள் யூ-டர்ன்களில்தான் நடக்கின்றன. கண்ணாடி வைக்கவில்லை. மேலே சைகைகள் வைக்கவில்லை. பலகை வைக்கவில்லை. இரவு நேரத்தில் நெடுஞ்சாலைகள் முழுவதும் இருட்டாக இருக்கின்றன. கட்டுப்பாடு கிடையாது. எனவே அதிகமான விபத்துகள் யூ-டர்ன்களில்தான் நடக்கின்றன.

எனவே இனிமேல் வரும் சாலைகளில் இதைச் செய்யச் சொல்லியிருக்கிறோம். ஏன், இப்போது இருக்கிற நெடுஞ்சாலைகளில்கூட எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் யூ-டர்ன்களை மாற்றக்கூடிய பணிகளை மேற்கொள்வோம்.

ADVERTISEMENT

76,858 கி.மீ. சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்

நம்முடைய அடுத்த மூன்று மாதங்களுக்கான முக்கியப் பணி, கிட்டத்தட்ட 76,858 கிலோ மீட்டர் சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களை முறையாக அமைப்பது.

இதற்காக நிறைய நிறுவனங்கள் வந்திருக்கின்றன. முறையாக ஒப்பந்தப்புள்ளி கோரி, அதை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, இந்த 78 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகளையும் ஒரு மத்திய கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் கண்காணிக்க வேண்டும். மண்டல வாரியாக ஐந்து மண்டலங்கள், ஐந்து அறைகள் அமைக்க வேண்டும். ஒரு பெரிய அறையில் கண்காணிப்பது போல ஒவ்வொரு மண்டலத்தையும் கண்காணித்து, எந்தெந்த இடங்களில் விபத்து நடக்கிறது, எந்தெந்த இடங்களில் போக்குவரத்து அழுத்தம் இருக்கிறது என்பதை உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருவதற்காகத் தனிக் குழு உருவாக்கப்படும்.

இந்த அழுத்தத்தை உங்கள் மீது வைக்க விரும்பவில்லை. இதற்குத் தனிக் குழு இருக்கும். இதைக் கண்காணிப்பதற்கு நிபுணர்கள், தனிப் பிரிவு, இதற்கான தனி நிதி என அனைத்தையும் ஏற்படுத்தப் போகிறோம்.

நெடுஞ்சாலைகளில் விபத்து சிகிச்சை மருத்துவமனைகள்

இந்த நிதியில் நெடுஞ்சாலைத் துறையே விபத்து சிகிச்சை மருத்துவமனைகளைக் கட்டப் போகிறது. முக்கியமாக எங்கெல்லாம் விபத்துகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் விபத்து சிகிச்சை மருத்துவமனைகளை அமைக்க வேண்டும். ஏனென்றால் விபத்து நடந்த உடனே பாதிக்கப்பட்டவரைத் தூக்கிக்கொண்டு இன்னொரு மருத்துவமனைக்குச் செல்வதற்குள் நிறைய பேர் இறந்துவிடுகிறார்கள்.

எனவே நெடுஞ்சாலைகளிலேயே விபத்து சிகிச்சை மருத்துவமனைகளை மருத்துவத் துறையுடன் இணைந்து அமைக்கப் போகிறோம்.

நெடுஞ்சாலைகளில் பயணிகள் ஓய்வு வளாகங்கள்

அதோடு இந்தப் பயணத்தை மிகவும் அழகானதாக மாற்ற வேண்டும். இன்றைக்கு ஒரு குடும்பத்திற்கு விடுமுறை கிடைத்தால் உடனே காரை எடுத்துக்கொண்டு சாலையில் பயணம் செய்கிறார்கள்; இல்லையென்றால் வாடகைக் காரை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

அந்தப் பயணத்தை அழகாக்க வேண்டுமென்றால் நம்முடைய நெடுஞ்சாலைத் துறை சார்பில் பயணிகள் ஓய்வு வளாகங்களை அமைக்கப் போகிறோம். நீங்கள் வெளிநாடுகளில், லண்டன், அமெரிக்கா போன்ற இடங்களுக்குப் போனால் இதுபோன்ற வளாகங்கள் அழகாக இருக்கும். ஒரு சிறிய வணிக வளாகம் போலவே இருக்கும். அதில் குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் இருக்கும்.

குடும்பத்தினர் மிகக் குறைந்த செலவில் மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் தங்கி ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம். அங்கேயே தங்குவது போன்ற வசதி அல்ல. சிறிது நேரம் தங்கி, ஓய்வெடுத்துவிட்டுச் செல்லும் வகையில் இருக்கும். சிறிய சிறிய திரையரங்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த மாதிரியான பயணிகள் ஓய்வு வளாகங்களை நெடுஞ்சாலைகளில் கொண்டுவரப் போகிறோம். அது வணிக ரீதியாகவும் இருக்கட்டும். நம்முடைய நெடுஞ்சாலைத் துறை மூலமாகவே இதைச் செய்யப் போகிறோம்.

சென்னை முதல் கன்னியாகுமரி- கோவை வரை 8 வழிச்சாலை

நெடுஞ்சாலைத் துறையின் முக்கியப் பொறுப்பைப் பொறுத்தவரை, அடுத்த மூன்று மாதங்களுக்கு பாதுகாப்பு, அதற்குப் பிறகு பெரிய திட்டங்கள் ஆகியவை முக்கியமானவை. முக்கியமான திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யச் சொல்லியிருக்கிறோம்.

விரிவான திட்ட அறிக்கையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். இப்போது இருக்கிற நான்கு வழிச்சாலை போதாது. ஆறு வழிச்சாலையும் போதாது. எட்டு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை உடனடியாகத் தொடங்கச் சொல்லியிருக்கிறோம்.

எட்டு வழிச்சாலைத் திட்டத்தைப் பொறுத்தவரை சென்னை முதல் கோயம்புத்தூர், கோயம்புத்தூரிலிருந்து தொழிற்பூங்காக்கள், ஓசூர், அங்கிருந்து தூத்துக்குடி என தொழில் மையங்களை இணைக்க வேண்டும். சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தொழில் மையங்களை இணைக்கும் வகையில் எட்டு வழிச்சாலைகளை உருவாக்க வேண்டும். தற்போது இந்தப் பகுதிகளில்தான் அதிகமான போக்குவரத்து நெரிசல் இருக்கிறது.

சென்னையின் நுழைவுப் பகுதிகளில் மேம்பாலங்கள்

அதற்குப் பிறகு சென்னையின் நுழைவுப் பகுதிகள். திருச்சியிலிருந்து செங்கல்பட்டு வரைக்கும் வேகமாக வந்துவிட முடியும். ஆனால் செங்கல்பட்டிலிருந்து பல்லாவரம் வருவதற்குள் மிக அதிகமான போக்குவரத்து நெரிசல் இருக்கிறது.

அங்கு என்ன மாதிரியான மேம்பாலங்கள் அமைக்கலாம், பூந்தமல்லி இந்தப் பக்கம் எப்படி எளிதாகப் போக்குவரத்தைக் கொண்டு செல்லலாம் என்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்கச் சொல்லியிருக்கிறோம். இந்த அடுத்த மூன்று மாதங்களுக்குள் அந்தப் பணிகளைத் தொடங்க வேண்டும்.

மெரினா முதல் மாமல்லபுரம் வரை கடல்வழிப் பாலம்

அதற்குப் பிறகு உங்களுக்குத் தெரியும், மும்பையில் உள்ள பாந்த்ரா–வொர்லி கடல்வழிப் பாலம் ஒரு பெரிய உதாரணம். இந்தக் கடல்வழிப் பாலத் திட்டத்தை நாம் ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறோம்.

இங்கே சென்னை நகரில் மெரினாவிலிருந்து மகாபலிபுரம் வரைக்கும் கடலிலேயே எப்படி ஒரு மேம்பாலத்தைக் கொண்டு செல்ல முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். பாந்த்ராவையும் வொர்லியையும் எப்படி இணைத்தார்களோ அதேபோல இங்கும் செய்ய வேண்டும். இப்போது கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் அதிகமான போக்குவரத்து ஏற்பட்டிருக்கிறது. சாலையை விரிவாக்க வேண்டுமென்றால் அதற்கும் ஓர் எல்லை இருக்கிறது.

எனவே மும்பையில் பாந்த்ரா–வொர்லி கடல்வழிப் பாலத்தை எப்படி அமைத்தார்களோ, அதே மாதிரியான ஒரு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை நாம் தொடங்க வேண்டும். மகாபலிபுரம் வரைக்கும் அழகாகக் கடலிலேயே செல்லும் வகையில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்.

ரூ.1 லட்சம் கோடி முதலீடு- மத்திய அரசு வாக்குறுதி

கடந்த முறை மத்திய அமைச்சரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இந்தத் திட்டங்களைப் பற்றிப் பேசினோம். எல்லாவற்றையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

அவர் சொன்ன விஷயம் ஒன்றுதான். ‘எங்களால் எளிதாக ஒப்பந்ததாரர்களை உள்ளே கொண்டுவர முடியவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு வகையான ஊழல்கள் இருக்கின்றன. நாங்கள் இதை முந்தைய முதலமைச்சரிடமே பலமுறை சொல்லியிருக்கிறோம்’ என்று அவர் கூறினார்.

அப்போது நான், ‘நான் நான்கு மாதங்கள் கழித்து வருகிறேன் சார். ஒற்றைச் சாளர முறை கொண்டுவரப்படும். ஊழல் இருக்காது. அனைத்தையும் சுத்தப்படுத்தித் தருகிறோம். அப்போது நாங்கள் கொண்டுவரும் திட்டங்களுக்கு, பாதுகாப்பு, கேமராக்கள் உள்ளிட்ட பெரிய பெரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் சார்’ என்று சொன்னேன்.

அப்போது அவர் சொன்ன வார்த்தை, ‘நீங்கள் அமைப்பைச் சுத்தப்படுத்தி, எங்களுக்குப் பணிகளை விரைவுபடுத்திக் கொடுத்துவிட்டீர்கள் என்றால், மூலப்பொருட்கள் கிடைப்பது உள்ளிட்ட பிரச்சினைகளையும் சரிசெய்து கொடுத்துவிட்டீர்கள் என்றால், தமிழ்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நாங்கள் முதலீடு செய்யத் தயாராக இருப்போம். ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறோம்.

ஏனென்றால் தமிழ்நாடு மிகப்பெரிய பொருளாதார மையம். அந்தப் பொருளாதார மையத்திற்குத் தேவையான சாலைகளில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது’ என்று கூறினார்.

நெடுஞ்சாலைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு- மத்திய அரசு தயார்

மற்ற கல்வித்துறை போன்ற துறைகளைப் போல் இது கிடையாது. நெடுஞ்சாலைத் துறையில் மத்திய அரசு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்குத் தயாராக இருக்கிறது.

மாநில அரசு ஆண்டுதோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வீதம், ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி முதல் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். எனவே நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தவரை நிதிப் பிரச்சினை கிடையாது.

நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தவரை நிர்வாக அமைப்பைப் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் நமக்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அதை நிறைவு செய்ய வேண்டும். திட்டம் மெதுவாகச் செல்லக்கூடாது.

நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு…

எந்த விவசாயிகளையும் அழுத்தம் கொடுத்து, காவல்துறையை வைத்து அவர்களுடைய நிலத்தை நாம் எடுக்கக்கூடாது. அவர்களுக்கான இழப்பீடு என்ன? அவர்களை எப்படியாவது அந்தத் திட்டத்தின் பங்குரிமையில் சேர்த்துக்கொள்ள முடியுமா?

நான் கடந்த முறை மத்திய அமைச்சரிடம் பேசும்போது, ஒரு திட்டத்தில் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறோம். சுங்கக் கட்டணம் மூலமாகவே கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வசூலிக்கிறார்கள். அதில் விவசாயிகளை பங்குதாரர்களில் ஒருவராக சேர்க்க முடியுமா? நிலத்தைக் கொடுக்கும்போது அந்த விவசாயியும் அந்தத் திட்டத்தில் பங்குரிமை பெற முடியுமா?

இதைத் தமிழ்நாட்டிலிருந்து ஏன் செயல்படுத்தக்கூடாது என்பதையும் நான் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறேன். அவர் கொள்கை ரீதியாக இதைப் பற்றிப் பேசிவிட்டு, ‘நீங்கள் நான்கு மாதங்கள் கழித்து வாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

38 மாவட்ட எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள்

அதற்குப் பிறகு நாங்கள் ஒரு பெரிய விரிவான திட்ட அறிக்கையுடன் மத்திய அமைச்சரைச் சந்திக்கப் போகிறோம். அங்கிருந்து என்னென்ன நிதி வர முடியுமோ அதையெல்லாம் பெற வேண்டும்.

இங்கே இருக்கக்கூடிய நம்முடைய நிர்வாகிகளும் அதிகாரிகளும் கவனிக்க வேண்டும். உங்களுடைய மாவட்டங்களில், 38 மாவட்டங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைய மனுக்களைக் கொடுத்திருக்கிறார்கள். ‘சுற்றுவட்டச் சாலைகள் வேண்டும்; இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் சார்’ என்று கேட்டிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருவோம். அதில் எது தேவையோ அதை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

800 மீட்டர் சாலைக்காக 30 ஆண்டுகள் காத்திருக்கும் மக்கள்

முக்கியமாக கிராமப்புறச் சாலைகள். அன்றைக்கு நான் கல்வராயன் மலைக்குப் போனேன். அந்த இடத்தில் அங்குள்ள பழங்குடியின மக்கள், ‘சார், நாங்கள் இங்கிருந்து ஒரு 800 மீட்டருக்குச் சாலை போட்டால், 11 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய அவசியம் இல்லை’ என்று சொல்கிறார்கள்.

உண்மையில் அந்த 800 மீட்டர் சாலைக்காக அவர்கள் 30 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். எனவே ஒரு பக்கம் நகர்ப்புறங்களுக்காக எட்டு வழிச்சாலை, கன்னியாகுமரி, திருச்சி, கோயம்புத்தூர் இந்தப் பக்கம் ஒரு குழு செயல்படட்டும்.

அதனால்தான் சொல்கிறேன். நிர்வாகத்தைத் தனித்தனி செயல்பாடுகளாகப் பிரித்துவிடுங்கள். ஒன்று கிராமப்புறச் சாலைகள். கிராமப்புறச் சாலைகளுக்காக மட்டும் கவனம் செலுத்தக்கூடிய ஒரு பிரிவு. இன்னொன்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கான ஒரு பிரிவு. இன்னொன்று வழக்கமான மாநில நெடுஞ்சாலைகள் பிரிவு. இன்னொன்று தொழிற்பூங்காக்களுக்கான சாலைகள்.

தொழிற்பகுதிகளுக்கு தனித் தரத்தில் சாலைகள்

ஏனென்றால் தொழிற்பகுதிகளுக்குச் சாலை அமைக்கும்போது வலுவான சாலையை அமைக்க வேண்டும். சாதாரண சாலை அமைப்பதைப் போல இப்போது தொழிற்பகுதிகளுக்கும் சாலை அமைக்கிறோம். அதனால் என்ன ஆகிறது? ஒரு வருடத்திலேயே சாலை மாறிவிடுகிறது. ஏனென்றால் அதிக எண்ணிக்கையிலான லாரிகள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றன.

நீங்கள் ஓரகடம் சுற்றிப் பாருங்கள். நாம் என்னதான் சாலை போட்டாலும் ஒரு வருடத்தில் பார்த்தீர்கள் என்றால், சாலை ஒரே மாதிரி இருப்பதில்லை. பள்ளம் வருகிறது; மேடு வருகிறது. அப்போது என்ன பிரச்சினை என்றால், அதற்கான தரம் வேறாக இருக்க வேண்டும்.

தொழில் மையங்களுக்கான தரமான சாலைகளுக்குத் தனியாக நிதி ஒதுக்க வேண்டும். ஒப்பந்தப்புள்ளித் தொகை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அங்கு தரம் இருக்க வேண்டும். வழக்கமான மாநில நெடுஞ்சாலைகள், மாநிலச் சாலைகள் போல தொழிற்பகுதிகளுக்கான சாலைகளை நாம் அமைக்கக்கூடாது.

வளர்ந்த நாடுகளிலும் வெளிநாடுகளிலும் தொழில் மையங்கள், குடியிருப்பு மையங்கள், மாநில நெடுஞ்சாலைகள், கிராமப்புறச் சாலைகள் ஆகியவற்றுக்கு எப்படித் தனித்தனியான கொள்கை முடிவுகள் இருக்கின்றனவோ, அதே மாதிரியான கொள்கை முடிவுகளை எடுப்பது குறித்து செயலாளர், முதன்மைச் செயலாளர் ஆகியோருடன் நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

‘உங்களுக்கு 30, 40 ஆண்டுகள் அனுபவம்; எனக்கு நான்கு மாதங்கள்தான்’

இது இந்த நெடுஞ்சாலைத் துறை தொடர்பான என்னுடைய தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம். அதிகாரிகளாகிய உங்களுக்கு 30, 40 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. என்னைவிட உங்களுக்கு அதிகமான அனுபவம் இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். எனக்கு நான்கு மாதங்கள்தான் ஆகியிருக்கிறது.

ஆனால் செயல்படுத்த வேண்டிய இடத்தில், நான் சிந்திக்கலாம்; கொள்கையை உருவாக்கலாம். ஆனால் அதைச் செயல்படுத்த வேண்டிய இடத்தில் நீங்கள்தான் இருக்கிறீர்கள். நீங்கள் இல்லாமல் அதைச் செயல்படுத்த முடியாது.

எனவே இவ்வளவு பணிகளுக்கான நிதியை மத்திய அரசிடமிருந்து கொண்டுவருவது, முதலமைச்சரிடமிருந்தும் நிதியமைச்சரிடமிருந்தும் நிதியைப் பெற்று உடனடியாக உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது எங்களுடைய கடமை. இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share