பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் : உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு! 

Published On:

| By Kavi

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார். 

ADVERTISEMENT

இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.. பட்டினபாக்கத்தில் வசித்து வரும் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு கடந்த செப்டம்பர் 8ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ மயிலை த வேலு இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். 

அவர் தனது மனுவில், “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அரசாணையில் சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் ஒப்புதல் பெறப்பட்டது குறித்து எந்த குறிப்பும் இல்லை.

ADVERTISEMENT

இந்த பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. மெட்ரோ ரயில் பணிகளும் நடந்து வருகின்றது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.

இங்கு புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் பள்ளி மாணவர்களுக்கும், ஒன்பது கிராம மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். 

இந்தப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே மீனவர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் போராடி வருகின்றனர். 

இந்தப் பகுதி ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடலோர ஒழுங்கு முறை மண்டல பகுதியான பட்டினப்பாக்கத்தில், கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது.

ஏற்கனவே நிதி நெருக்கடியாக இருப்பதாக அரசு கூறுகிறது. இந்த சூழலில் 1200 கோடி ரூபாய்க்கு புதிய தலைமைச் செயலகம் அமைப்பது என்பது தன்னிச்சையானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share