சென்னை விமான நிலையம் : பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம் – என்ன சொல்லியிருக்கிறார்? : முழு விவரம்!

Published On:

| By Kavi

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 

இந்திய விமான நிலைய ஆணையம் அல்லாத வேறொரு நிறுவனத்தை நிர்வாக பொறுப்பில் அமர்த்துமாறு அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். 

ADVERTISEMENT

இது தொடர்பான செய்தி இந்து நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது. 

இந்த சூழலில் முதல்வர் விஜய் பிரதமருக்கு எழுதிய கடிதம் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

அதில், “சென்னை சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து மிக மோசமாக செயல்பட்டு வருவது தொடர்பாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 

தென்னிந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையமாக இருந்தும் சர்வதேச தரத்திலோ பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலோ சென்னை விமான நிலையம் இல்லை. 

ADVERTISEMENT

இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் படி பயணிகள் எண்ணிக்கையில் சென்னை விமான நிலையம் கொல்கத்தாவை விட பின்தங்கி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

நாட்டின் பிற பெரிய நகரங்களில் விமான போக்குவரத்து கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்த அளவைவிட இன்னும் குறைவாகவே உள்ளது. 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தற்போதைய பயணிகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு 2.70 கோடி ஆகும். தற்போது நடந்து வரும் விரிவாக்க பணிகள் முடிந்த பிறகு இந்த எண்ணிக்கை 3.5 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் 2025- 26 நிதியாண்டு அறிக்கையின்படி, சென்னை விமான நிலையம் 2.30 கோடி பயணிகளை மட்டுமே கையாண்டுள்ளது. 

கொரோனா காலத்திற்கு முன்பு பயணிகளின் எண்ணிக்கை 2.25 கோடியாக இருந்த நிலையில் அதனுடன் ஒப்பிடும்போது இப்போது மிகக் குறைந்த அளவு மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

சரக்கு போக்குவரத்திலும் சென்னை விமான நிலையத்தின் வளர்ச்சி குறைந்து வருவதை இந்திய விமான நிலைய தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. 

2026 மே மாதம் சென்னையின் சரக்கு விமான போக்குவரத்து வெறும் ஆறு சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. 

ஆனால் அண்டை மாநிலத்தில் இருக்கும் பெங்களூருவில் இது 14.5 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 

விமான பாதை செயல்பாடுகளை பொருத்தவரை இந்திய மின்னணு போக்குவரத்து வழிகாட்டியின் சமீபத்திய தரவுப்படி, சென்னை விமான நிலையத்தில் உச்சகட்ட நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 36 விமானங்கள் வரை இயக்க முடியும். 

இருப்பினும் நடைமுறையில் இயங்கும் விமானங்களின் எண்ணிக்கை இந்த அளவைவிட மிக கணிசமாக குறைந்துள்ளது. 

2025- 26 ஆம் நிதி ஆண்டில் சென்னை விமான நிலையம் மொத்தம் 1,58,702 விமான இயக்கங்களை மட்டுமே கையாண்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 435 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. 

இதன் மூலம் விமான நிலையத்தின் முழு திறனும் மிக மோசமாக பயன்படுத்தப்படாமல் இருப்பது தெளிவாகிறது. 

இந்த 435 விமானங்களில் உள்நாட்டு விமானங்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 320 ஆகவும் சர்வதேச விமானங்கள் ஒரு நாளைக்கு வெறும் 115 ஆகவும் மட்டுமே இருந்துள்ளன. 

விமான நிலையத்திடம் உள்ள முழு திறனுக்கும் உண்மையில் பயன்படுத்தப்படும் அளவிற்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளி சென்னை விமான நிலையம் தனது முழு செயல்பாட்டு திறனையும் பயன்படுத்தவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. 

தற்போது இருக்கும் கட்டமைப்புகள் தொடர்ந்து முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருப்பது இந்தியாவின் பிற முக்கிய விமான நிலையங்களுக்கு மத்தியில் சென்னையின் போட்டி திறனையும் முக்கியத்துவத்தையும் வெகுவாக குறைத்துள்ளது. 

அதுபோன்று, விமான நிலைய டெர்மினல்களை அணுகுவதில் உள்ள சிரமங்கள், முறைப்படுத்தப்படாத டாக்ஸி சேவைகள், போதுமான வாகன நிறுத்துமிடம் இல்லாதது போன்ற பிரச்சினைகள் உள்ளன. இங்கு உள்ள அடிப்படை பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு பிரச்சினைகள் குறித்து தொழிலதிபர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். இவை அத்தியாவசியமான அடிப்படை பராமரிப்பு குறைபாடுகள் ஆகும். 

அதுபோன்று கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படாமல் இருக்கின்றன. பயணிகள் அமரும் இருக்கைகள் தூய்மையாக இல்லை. குளிர்சாதன வசதிகள் அடிக்கடி பழுதடைகின்றன. இதுபோன்று சுகாதார மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் உள்ளன. 

விமான நிலையத்திற்கு வெளியே போதிய வசதிகள் இல்லாததால் பயணிகள் டாக்ஸி மற்றும் பொதுப் போக்குவரத்தை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 

லக்கேஜ் வந்து சேருவதிலும் தாமதம் ஏற்படுகிறது. கூட்டத்தை சரியாக நெறிப்படுத்தாத நிலை மற்றும் பாதுகாப்பு பரிசோதனை மற்றும் குடியுரிமை மையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. 

சர்வதேச முனையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருவதால் மிகவும் அவசியமான மற்றும் நவீனமயமாக்களும் கொள்ளளவு விரிவாக்கமும் தள்ளிக்கொண்டே போகின்றன.

சென்னையின் வலுவான பொருளாதார வளர்ச்சி, விரிவடையும் தொழில்துறை சூழல், வேகமாக வளரும் ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி துறைகள், வளர்ச்சி பாதையில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் அதிகரித்து வரும் சுற்றுலா வாய்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பெரு நகரங்களில் ஒன்றான சென்னையின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஒரு சிறந்த விமான நிலையம் இங்கு நிச்சயம் தேவை. 

நவீன மயமாக்கப்பட்ட திறம்பட நிர்வாகிக்கப்படும் ஒரு விமான நிலையம் அமைந்தால் அது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதோடு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை வலுப்படுத்தி பிராந்திய இணைப்பை மேம்படுத்தி தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்யும்.

எனவே மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இயக்கம் நிர்வாகம் மற்றும் எதிர்கால வளர்ச்சி பணிகளை இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து மாற்றி வேறொரு தகுதியான நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இதற்கான பணிகளை விரைவாக செயல்படுத்தி அதன் முழு பலன்களையும் உடனடியாக கிடைக்க செய்யும் வகையில் விரைவான மற்றும் காலவரையறைக்கு உட்பட்ட உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share