வந்தே மாதரம் பாட மறுத்தால் சிறையா? டி.எம். கிருஷ்ணா வழக்கில் பரபர விசாரணை… ‘நக்சலைட்’ விமர்சனத்தால் கடும் வாக்குவாதம்!

Published On:

| By Mathi

Vande Mataram-TM Krishna

வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு மற்றும் அது தொடர்பான 2026 சட்டத் திருத்தத்தை எதிர்த்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று செப்டம்பர் 22-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் சட்ட திருத்தத்துக்கு எதிராக வழக்கு

தேசிய மரியாதைக்கு அவமதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் 1971-ஆம் ஆண்டு சட்டத்தில் 2026-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த சட்டத் திருத்தம் மற்றும் 2026 ஜனவரி 28, ஜூலை 9 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து டி.எம். கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

அதில், “அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகள் கூறுகின்றன. வந்தே மாதரத்தின் கடைசி நான்கு சரணங்களில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட இந்துக் கடவுள்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. எனவே அந்தச் சரணங்களையும் கட்டாயமாகப் பாடச் சொல்வது, ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஒருவரைக் கட்டாயப்படுத்துவதற்கு சமம்; இது அரசியலமைப்பு வழங்கியுள்ள மனசாட்சி மற்றும் மதச் சுதந்திரத்திற்கு எதிரானது” தெரிவித்திருந்தார் டி.எம். கிருஷ்ணா.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மல்ய பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

ADVERTISEMENT

தேசியப் பாடல் எது?

இந்த விசாரணையின்போது நீதிபதிகள் முக்கியமான ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தினர். எது தேசியப் பாடல், வந்தே மாதரத்தின் இரண்டு சரணங்களைப் பாட வேண்டுமா அல்லது முழுமையாகப் பாட வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பது நீதிமன்றத்தின் வேலை அல்ல என்றும் அது அரசின் முடிவுக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால் மத நம்பிக்கை அல்லது மனசாட்சி சார்ந்த காரணங்களால் அதைப் பாட விரும்பாத ஒருவருடைய உரிமை பாதுகாக்கப்படுகிறதா என்பதை நீதிமன்றம் ஆராயும் என்றும் நீதிபதிகள் வேறுபடுத்திக் காட்டினர்.

ADVERTISEMENT

Bijoe Emmanuel தீர்ப்பு

மேலும் 1986-ஆம் ஆண்டின் முக்கியமான Bijoe Emmanuel வழக்கை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அந்த வழக்கில், மத நம்பிக்கை காரணமாக தேசிய கீதத்தைப் பாட மறுத்த பள்ளி மாணவர்களின் உரிமையை உச்ச நீதிமன்றம் பாதுகாத்திருந்தது. தேசிய கீதத்திற்கு அவர்கள் அவமரியாதை செய்யவில்லை; மரியாதையுடன் எழுந்து நின்றனர். ஆனால் தங்களது மத நம்பிக்கையின் காரணமாக அதைப் பாடவில்லை. அவர்களுடைய மனசாட்சி மற்றும் மதச் சுதந்திரத்தை உச்ச நீதிமன்றம் அப்போது அங்கீகரித்தது. அந்தத் தீர்ப்பு இன்றும் நாட்டின் சட்டமாக இருக்கிறது என்பதை இந்த விசாரணையின்போது நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

வந்தே மாதரம் தொடர்பான விவகாரத்திலும் அப்படியான நிலைப்பாடுதான் பின்பற்றப்படும் என்று எதிர்பார்ப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

கிரிமினல் நடவடிக்கை?

நீதிபதி ஜாய்மல்ய பாக்சி கூறுகையில், வந்தே மாதரம் தேசியப் பாடலா என்பது தற்போது தங்கள் முன் உள்ள பிரச்சினை அல்ல; 2 சரணங்களைப் பாட வேண்டுமா, 4 அல்லது அனைத்து சரணங்களையும் பாட வேண்டுமா என்பதை ஜனநாயக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

ஆனால் தனது மனசாட்சி அல்லது மத உரிமை பாதிக்கப்படுவதாகக் கருதி வந்தே மாதரத்தின் ஒரு சரணத்தையோ அல்லது அனைத்து சரணங்களையுமோ பாட மறுக்கும் ஒருவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்று நீதிமன்றம் எதிர்பார்ப்பதாகவும் நீதிபதி ஜாய்மல்ய பாக்சி கூறினார்.

தேசியப் பாடல் என்றால் என்ன?

டி.எம். கிருஷ்ணா சார்பில் மூத்த வழக்கறிஞர் டாக்டர் எஸ். முரளிதர் ஆஜராகி வாதிட்டார். 2026-ல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தில் National Song- அதாவது தேசியப் பாடல் என்றால் என்ன? என்பதற்கான தெளிவான வரையறையே இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தெளிவின்மை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கலாம் என்றும் வாதிட்டார்.

மேலும், வந்தே மாதரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அலுவலக உத்தரவு அரசிதழில் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வந்தே மாதரம் என்பது தேசியப் பாடல் என்று வழக்கமாகப் புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது என்று நீதிபதி ஜாய்மல்ய பாக்சி குறிப்பிட்டார்.

அதற்கு முரளிதர், “முதல் 2 சரணங்களுடன்” என்று உடனடியாக பதிலளித்தார். வந்தே மாதரம் தொடர்பாக இதுவரை இருந்த புரிதலை மத்திய அரசு திடீரென தனது அலுவலக உத்தரவின் மூலம் மாற்றியுள்ளதாகவும் அவர் வாதிட்டார்.

நாடு முழுவதும் ஒருமித்த கருத்தை உருவாக்காமல் அவசரமாக இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க தேசிய கீதம்

விசாரணையின்போது நீதிபதி ஜாய்மல்ய பாக்சி அமெரிக்காவையும் உதாரணமாகக் குறிப்பிட்டார். மதச்சார்பின்மைக்கு உதாரணமாக அமெரிக்கா குறிப்பிடப்படும் நிலையில், அங்கு தேசிய அளவில் “In God We Trust” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மதச்சார்பின்மையை இவ்வளவு குறுகிய பொருளில் பார்க்க முடியாது என்று தெரிவித்தார்.

நக்சலைட்டுகளின் எண்ணம்..

விசாரணை தொடர்ந்து நடந்தபோது இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் ஏற்பட்டது.

சட்டம் இயற்றுவது “நக்சலைட்டுகளின் எண்ணத்தின்படி இருக்க முடியாது” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கருத்து தெரிவித்தார்.

இதற்கு டி.எம். கிருஷ்ணா தரப்பில் ஆஜரான முரளிதர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மத்திய அரசின் சட்டப் பிரதிநிதி, இதுபோன்ற கருத்தைத் தெரிவிப்பது முறையல்ல என்றும், அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆனால் துஷார் மேத்தா தனது கருத்தைத் திரும்பப் பெற மறுத்தார். சட்டம் இயற்றும் நடைமுறையை மதிக்காதவர்களைக் குறித்துத்தான் தான் அவ்வாறு கூறியதாக அவர் விளக்கமளித்தார்.

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?

இந்த மனு தொடர்பாக முறையான நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டாம் என்று மத்திய அரசுத் தரப்பில் கோரப்பட்டது. நோட்டீஸ் பிறப்பித்தால் இந்த விவகாரம் தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தும் என்றும், அதற்குப் பதிலாக மனுவின் நகலை தங்களிடம் வழங்கினால் பதிலளிப்பதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து மத்திய அரசு தனது பதிலைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதித்தது.

அதே நேரத்தில், Bijoe Emmanuel வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வகுத்துள்ள சட்டக் கொள்கை இந்தச் சட்டத்திற்கும் பொருந்தும் என்று எதிர்பார்ப்பதாக நீதிபதி பாக்சி தெரிவித்தார்.

விசாரணை முடிந்த பிறகும் வாக்குவாதம்

வழக்கு விசாரணை முடிந்த பிறகும் முரளிதர் மீண்டும் “நக்சலைட்” கருத்தை எழுப்பினார். அந்த வார்த்தையை சொலிசிட்டர் ஜெனரல் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் மீண்டும் கோரினார். ஆனால் துஷார் மேத்தா மறுத்துவிட்டார்.

தான் கூறியதை மீண்டும் கூறவும் தயாராக இருப்பதாகவும், அதற்காக வருத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முரளிதர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இந்த வாக்குவாதத்தில் நீதிபதிகள் தலையிடவில்லை. இருவரின் கருத்துகளையும் தாங்கள் பதிவு செய்யவில்லை என்று மட்டும் தெரிவித்தனர்.

புதிய சட்டத்தில் என்ன தண்டனை?

இந்த வழக்கின் மையமே 2026-ல் செய்யப்பட்ட சட்டத் திருத்தம்தான்.
திருத்தப்பட்ட சட்டத்தின்படி, தேசிய கீதம் அல்லது தேசியப் பாடல் பாடப்படுவதை ஒருவர் வேண்டுமென்றே தடுத்தாலோ, அவற்றைப் பாடும் கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ‘இடையூறு’ என்ற வார்த்தைக்குத் தெளிவான வரையறை இல்லை என்பது டி.எம். கிருஷ்ணா தரப்பின் முக்கிய வாதங்களில் ஒன்று. இதனால் வந்தே மாதரம் தொடர்பான விமர்சனம், வரலாற்று ஆய்வு, கலை வெளிப்பாடு போன்றவைகூட பாதிக்கப்படலாம் என்று அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 2 சரணங்கள் மட்டும் ஏன்?

வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டும் தேசிய நிகழ்வுகளில் பயன்படுத்தியதற்கான வரலாற்றுப் பின்னணியையும் டி.எம். கிருஷ்ணா தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வந்தே மாதரம் 1875-ல் முதலில் கவிதையாக வெளியானதாகவும், பின்னர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவின் ‘ஆனந்த மடம்’ நாவலில் இடம்பெற்றதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நான்கு சரணங்களில் இந்துக் கடவுள்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றதால் எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, 1937-ல் இந்திய தேசிய காங்கிரஸ் தேசிய நிகழ்வுகளில் முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாடும் நடைமுறையை ஏற்றுக்கொண்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. ராஜேந்திர பிரசாத், சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோர் இந்த ஏற்பாட்டை ஆதரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பாடல் குறித்து டி.எம். கிருஷ்ணா முன்வைக்கும் வாதம் என்ன?

1950 ஜனவரி 24 அன்று ‘ஜன கண மன’ தேசிய கீதமாக அரசியல் நிர்ணய சபையால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் ‘வந்தே மாதரம்’ முறைப்படி ‘தேசியப் பாடல்’ என்று அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது டி.எம். கிருஷ்ணா தரப்பின் வாதம்.

அதே நாளில் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், வந்தே மாதரத்துக்கும் ஜன கண மனவுக்கும் சமமான மரியாதையும் அந்தஸ்தும் இருக்கும் என்று தெரிவித்ததையும் அவரது மனு குறிப்பிடுகிறது. அதேநேரத்தில், இந்த அறிவிப்பு வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டும் பயன்படுத்தும் முந்தைய நடைமுறையை மாற்றவில்லை என்றும் கிருஷ்ணா தரப்பு வாதிடுகிறது.

முன்பு உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?

வந்தே மாதரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் 2026 ஜனவரியில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கை மார்ச் 25 அன்று உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கவில்லை. அப்போது வந்தே மாதரம் பாடவில்லை என்பதற்காக சட்டத்தில் குற்றவியல் தண்டனை எதுவும் இல்லை என்பது முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால் அதன்பிறகு கொண்டுவரப்பட்ட 2026 சட்டத் திருத்தத்தில் குற்றவியல் தண்டனை சேர்க்கப்பட்டுள்ளதால், தற்போது சட்ட நிலைமை மாறிவிட்டது என்று டி.எம். கிருஷ்ணா தரப்பு கூறுகிறது.

இந்தப் பின்னணியில்தான் சட்டத் திருத்தம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகள் தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாக அறிவிக்க வேண்டும் என்றும், வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே தேசியப் பாடலாகக் கருதப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்த வேண்டும் என்றும் டிஎம் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share