பட்டினப்பாக்கம் பகுதியில், குடியிருப்பில் படிக்கட்டு இடிந்து விழுந்த நிலையில் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குடியிருப்பைச் சரி செய்ய முன்வராத தவெக அரசு ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டத் திட்டமிடுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் படிக்கட்டு இடிந்து விழுந்து ஒருவர் காயமடைந்துள்ளார்.
பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகர்ப் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில், மக்கள் தினம் தினம் உயிருக்கு அச்சத்துடன் வசித்து வருகிறார்கள். இக்குடியிருப்பில் வசிக்கும் மீனவ மக்களின் பழுதடைந்த குடியிருப்புகளைச் சரி செய்ய முன்வராமல், ஏழை எளிய மீனவ மக்கள் மீது அரசின் அக்கறையில்லாத போக்கினால், இன்று விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவில் கட்டிடத்தின் முதல் தளத்தில் படிக்கட்டு இடிந்து விழுந்து ஓர் இளைஞருக்குத் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற விபத்துகள் அவ்வப்போது நடைபெற்று வருவதைத் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்து வருவதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பட்டினப்பாக்கம் ஏழை எளிய மீனவர் பகுதி குடியிருப்புகளைச் சரி செய்வதற்கு முன்வராத தமிழ்நாடு அரசு, 1200 கோடி ரூபாயில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்குத் திட்டமிட்டு வருவது நகைப்புக்குரியது.
பட்டினப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பழுதடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை உடனே சரி செய்ய வேண்டும். புதிய குடியிருப்பு தொடர்பாக மீனவ மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுச் செயல்படுத்திட வேண்டும்.
பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரில் நேற்று 26.09.2026 இரவு 9 மணி அளவில் ஏற்பட்ட விபத்துக்குக் காரணமான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
