கோட்டையை விட்டு கிளம்பும் தலைமைச் செயலகம்? கி.பி. 1640 முதல் விஜய் வரை… நடந்தது என்ன? முழு வரலாறு!

Published On:

| By Mathi

TN Secretariat History: 386-Year Journey from Fort St. George to Vijay Era

TN Secretariat History: 2026 செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், ‘புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்’ என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதைத் தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் 21.76 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, செப்டம்பர் 8-ஆம் தேதி G.O.(Ms) No.564 அரசாணையை வெளியிட்டு அடுத்தகட்ட நடவடிக்கையையும் அரசு தொடங்கிவிட்டது. விஜய் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பட்டினப்பாக்கம் மீனவர்கள் மட்டுமின்றி பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இப்போது புதிய தலைமைச் செயலகம் பேசுபொருளாகி இருக்கிறது. ஆனால், புதிய தலைமைச் செயலகம் தேவை என்ற விவாதம் விஜய் ஆட்சியில் புதிதாகத் தொடங்கியது அல்ல.

ADVERTISEMENT

தமிழகத்தின் அதிகார மையம் எங்கே இருக்க வேண்டும், வளர்ந்து வரும் அரசுத் துறைகளுக்கு புனித ஜார்ஜ் கோட்டை போதுமா என்ற கேள்வி பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்திருக்கிறது. சட்டப்பேரவை கோட்டையை விட்டு பலமுறை வெளியேறியிருக்கிறது; புதிய தலைமைச் செயலகத்துக்காக பல அரசுகள் பல இடங்களைத் தேடியிருக்கின்றன; திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன; அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது; புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டும் இருக்கிறது.

இந்த நீண்ட ‘தேடலின்’ வரலாற்றைத் தேடிப் போனால், அது நம்மை சுமார் 400 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.

ADVERTISEMENT

சென்னையில் காலூன்றிய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி

சென்னையின் கடற்கரையில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தனது வர்த்தக மையத்தை அமைத்ததிலிருந்து புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாறு தொடங்குகிறது.

கி.பி. 1639-ல் இப்பகுதியை நிர்வகித்து வந்த தாமர்ல வெங்கடப்ப நாயக்கரிடமிருந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி பிரான்சிஸ் டே வர்த்தக மையம் அமைப்பதற்கான நிலத்தைப் பெற்றார். அவரது மேலதிகாரியான ஆண்ட்ரூ கோகனின் ஒப்புதலைத் தொடர்ந்து இங்கு கம்பெனியின் வர்த்தக மையத்தையும் கோட்டையையும் அமைக்கும் பணிகள் தொடங்கின.

ADVERTISEMENT

1640 ஏப்ரல் 23-ஆம் தேதி புனித ஜார்ஜ் தினத்துக்குள் ( St. George’s Day)  கோட்டையின் முதல் கட்டக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து அந்தக் கோட்டைக்கு ‘புனித ஜார்ஜ் கோட்டை’ (Fort St. George) என்று பெயரிடப்பட்டது.

(கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமானியப் பேரரசின் போர் வீரர் செயின்ட் ஜார்ஜ். கிறிஸ்தவ நம்பிக்கையைக் கைவிட மறுத்ததால் பேரரசர் டயோக்ளீஷியன் காலத்தில் அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் ஏப்ரல் 23-ஆம் நாள், ‘செயின்ட் ஜார்ஜ் தினம்’ என கிறிஸ்தவ மரபில் கடைப்பிடிக்கப்படுகிறது. பின்னாளில் அவர் இங்கிலாந்தின் பாதுகாவலர் புனிதராகப் போற்றப்பட்டார்.)

ஆரம்பத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகத்தையும் பொருட்களையும் பாதுகாப்பதற்கான அரண் கொண்ட வர்த்தக மையமாக உருவான புனித ஜார்ஜ் கோட்டை, காலப்போக்கில் விரிவுபடுத்தப்பட்டது. கம்பெனியின் வர்த்தக மையம் என்ற நிலையிலிருந்து நிர்வாக மற்றும் அரசியல் அதிகார மையமாகவும், பின்னர் சென்னை மாகாணத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் அது வளர்ந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கோட்டையின் அதிகாரப் பயணம் முடிவடையவில்லை. சென்னை மாநிலம், பின்னர் தமிழ்நாடு என மாநிலத்தின் பெயரும் அரசியல் வரலாறும் மாறியபோதும், தலைமைச் செயலகமும் சட்டப்பேரவையும் செயல்படும் தமிழக அரசின் முக்கிய அதிகார மையமாக புனித ஜார்ஜ் கோட்டை தொடர்ந்தது.

இன்றைய தலைமைச் செயலகத்துக்கு 400 வயதா?

புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாறுதான் நான்கு நூற்றாண்டுகளை நெருங்குகிறது; இன்று நாம் பார்க்கும் தலைமைச் செயலகக் கட்டடங்கள் அனைத்துக்கும் 400 வயது என்று பொருள் அல்ல.

இந்தக் கோட்டை வளாகம் ஒரே நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடத் தொகுதி அல்ல. 17-ஆம் நூற்றாண்டில் தொடங்கி அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் புதிய கட்டடங்கள் சேர்க்கப்பட்டும், பழையவை மாற்றியமைக்கப்பட்டும், விரிவுபடுத்தப்பட்டும் இன்று காணப்படும் புனித ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலக வளாகம் உருவாகியுள்ளது.

1921 முதல் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம்

1921-ல் சென்னை மாகாண சட்டமன்றத்தின் பயணம் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது. கோட்டையில் இருந்த மன்ற அரங்கில் சட்டமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றன.

நீதிக்கட்சி ஆட்சி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுடன் இந்த அரங்கத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்தது.

கோட்டையை விட்டு வெளியேறிய சட்டமன்றம்

ஆனால், சட்டமன்றம் தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டைக்குள் மட்டுமே செயல்படவில்லை. 1937-ல் சென்னைப் பல்கலைக்கழக செனட் மண்டபத்திலும், பின்னர் 1938–1939 காலகட்டத்தில் இன்றைய ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்திலும் சட்டமன்றம் கூடியது. அப்போது அது ‘Government House Banqueting Hall’ என்று அழைக்கப்பட்டது.

சென்னை மாகாணத்தின் ‘Premier’ (அன்றைய முதலமைச்சர்) சி. ராஜகோபாலாச்சாரி, சட்டமன்றத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

1952 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அன்றைய சென்னை மாநில சட்டப்பேரவையில் 375 உறுப்பினர்கள் இருந்தனர். புனித ஜார்ஜ் கோட்டையின் பழைய அரங்கில் சுமார் 260 உறுப்பினர்களுக்கே இடமிருந்ததால், அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை அரங்கம் கட்டப்பட்டது.

1952 மே 2-ஆம் தேதி அன்றைய சென்னை மாநில ஆளுநர் ஸ்ரீ பிரகாசா புதிய அரங்கத்தைத் திறந்து வைத்தார். மே 3-ஆம் தேதி முதல் அங்கு சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கின.

கலைவாணர் அரங்கில்..

1952 முதல் 1956 வரை சென்னை மாநில சட்டப்பேரவை இந்த அரங்கில் செயல்பட்டது. பின்னர் இந்த அரங்கம் ‘பாலர் அரங்கம்’ என்று அழைக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இந்த அரங்கம், நகைச்சுவைக் கலைஞர் என்.எஸ். கிருஷ்ணனின் ‘கலைவாணர்’ பெயரில் ‘கலைவாணர் அரங்கம்’ என அழைக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் அரங்கத்தை 1974 ஜனவரி 29-ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார்.

மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு..

1956-ல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புக்குப் பிறகு சென்னை மாநிலத்தின் எல்லைகள் மாறின. சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

இதையடுத்து 1957-ல் சட்டப்பேரவை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்குத் திரும்பியது. ஆனால், கோட்டைக்குத் திரும்பிய சட்டப்பேரவை இரண்டு ஆண்டுகளிலேயே மீண்டும் சென்னைக்கு வெளியே சென்று கூடியது.

1959: காமராஜர் ஆட்சியில் ஊட்டிக்குச் சென்ற சட்டப்பேரவை

முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1959 ஏப்ரல் மாதம் சென்னை மாநில சட்டப்பேரவை ஊட்டிக்குச் சென்றது.

ஊட்டியில் உள்ள அரண்மூர் அரண்மனையில் (Arranmore Palace) சட்டப்பேரவை அமர்வு நடைபெற்றது. ஏப்ரல் 24-ஆம் தேதி அவையில், ஊட்டியில் தொடர்ந்து சட்டப்பேரவை அமர்வுகளை நடத்துவது குறித்தும், அரன்மோர் அரண்மனையைத் தவிர வேறு கட்டடங்களை வாங்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்பது குறித்தும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அமைச்சர் பி. கக்கன், அப்போது வேறு கட்டடங்களை வாங்கும் திட்டம் இல்லை என்று பதிலளித்தார்.

அரன்மோர் அரண்மனையில் இருந்த நடன மண்டபம் (Ball Room) சட்டப்பேரவை அரங்கமாக மாற்றப்பட்டது. சுமார் 180 உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டதுடன், ஆளுநருக்கான தனி இடமும் பார்வையாளர்களுக்கான அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டன. 1959 ஏப்ரல் 20 முதல் 30 வரை இங்கு சட்டப்பேரவை அமர்வு நடைபெற்றது.

கலைஞர் எழுப்பிய நாமக்கல் கவிஞர் மாளிகை

புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகத்தின் பணிகளும் அரசுத் துறைகளின் தேவைகளும் அதிகரித்த நிலையில், கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் 1975-ல் புதிய பல தளங்களுடனான நிர்வாகக் கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடமே பின்னர் ‘நாமக்கல் கவிஞர் மாளிகை’ என்று அழைக்கப்பட்டது.

தலைநகரையே திருச்சிக்கு மாற்ற நினைத்த எம்.ஜி.ஆர்

சென்னை கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்ட 1981–1982 காலகட்டத்தில், தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்றும் யோசனையை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்வைத்தார்.

மாநிலத்தின் மத்தியப் பகுதியில் புதிய தலைநகரை உருவாக்குவது குறித்த மிகப்பெரிய அரசியல் விவாதத்தை இந்த யோசனை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. இறுதியில் தலைநகர் மாற்றத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

புதிய தலைமைச் செயலகத்துக்கு இடம் தேடிய ஜெயலலிதா

மாமல்லபுரத்தில் 2,000 ஏக்கர் நிர்வாக நகரம்

2002-ல் ஜெயலலிதா அரசு, சென்னைக்கு வெளியே மாமல்லபுரம் அருகே சுமார் 2,000 ஏக்கரில் புதிய நிர்வாக நகரத்தை உருவாக்கும் யோசனையை முன்வைத்தது. அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி அதிகாரிகளுக்கான குடியிருப்புகளையும் உள்ளடக்கிய பெரிய நிர்வாக நகரமாக இதை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த முயற்சி அடுத்த கட்டத்துக்குச் செல்லவில்லை.

ராணி மேரி கல்லூரியை குறிவைத்த ஜெயலலிதா

இதையடுத்து 2003-ல் புதிய தலைமைச் செயலகத்தை சென்னையிலேயே அமைக்க ஜெயலலிதா முடிவு செய்தார். அதற்காக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரி வளாகம் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவுக்கு மாணவிகள், முன்னாள் மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. ராணி மேரி கல்லூரி இடம் தொடர்பாக மட்டும் 9 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மாணவிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கல்லூரிக்கு சென்றதும், அதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதும் இந்த விவகாரத்தை மிகப்பெரிய அரசியல் பிரச்சினையாக மாற்றியது.

இந்தக் காலகட்டத்தில்தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துடனும் ஜெயலலிதா அரசு நேரடியாக மோதியது. 2003-ம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிக்கை, கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்படும் மாநில அரசின் பெரிய கட்டுமானங்களுக்கும் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவைப்படும் நிலையை ஏற்படுத்தியதாக ஜெயலலிதா குற்றம்சாட்டினார். அப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தவர் திமுகவின் டி.ஆர். பாலு.

போராட்டம், நீதிமன்ற வழக்குகள், மத்திய–மாநில அரசுகளுக்கு இடையிலான மோதல் என பிரச்சினைகள் தொடர்ந்த நிலையில், ராணி மேரி கல்லூரியில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை ஜெயலலிதா அரசு கைவிட்டது.

கோட்டூர்புரத்தில் அடிக்கல் நாட்டிய ஜெயலலிதா

ராணி மேரி கல்லூரித் திட்டத்தைக் கைவிட்ட ஜெயலலிதா அரசு அத்துடன் புதிய தலைமைச் செயலக முயற்சியை நிறுத்தவில்லை. அடுத்த இடமாக கோட்டூர்புரம் தேர்வு செய்யப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான 22.16 ஏக்கர், அரசின் Data Centre வசமிருந்த 18.40 ஏக்கர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் 2.64 ஏக்கர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மொத்தம் 43.20 ஏக்கரில் புதிய தலைமைச் செயலக வளாகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 2003 செப்டம்பர் 1-ஆம் தேதி G.O.Ms.No.1080 பிறப்பிக்கப்பட்டது. கோட்டூர்புரத்தில் சட்டப்பேரவை அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் சுமார் 10 முதல் 12 லட்சம் சதுர அடி பரப்பில் புதிய தலைமைச் செயலக வளாகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு CMDA-விடம் ஒப்படைக்கப்பட்டது.

2003 அக்டோபர் 8-ஆம் தேதி G.O.Ms.No.1184 பிறப்பிக்கப்பட்டு கட்டட வடிவமைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், ஜெயலலிதா அடிக்கல் நாட்டுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, 2003 அக்டோபர் 27-ஆம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை S.O.1236(E) என்ற வரைவு அறிவிக்கையை வெளியிட்டது. பெரிய அளவிலான புதிய கட்டுமானத் திட்டங்களையும் சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைக்குள் கொண்டுவருவதற்கான திருத்தம் அதில் முன்மொழியப்பட்டது.

ஆனாலும், 2003 அக்டோபர் 30-ஆம் தேதி கோட்டூர்புரம் புதிய தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். பின்னர் இந்த மத்திய அரசின் வரைவு அறிவிக்கையை முன்வைத்து கோட்டூர்புரம் திட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் வரைவு அறிவிக்கை என்பது இறுதி அறிவிக்கை அல்ல; அது சட்டரீதியாக அமலுக்கு வராத நிலையில், ஏற்கெனவே தொடங்கப்பட்ட திட்டத்தை அதன் அடிப்படையில் தடுக்க முடியாது என்ற அடிப்படையில் நீதிமன்றம் திட்டம் தொடரலாம் என்று தீர்ப்பளித்தது.

கலைஞரின் கனவு… ஓமந்தூரார் புதிய தலைமைச் செயலகம்

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக கலைஞர் முதலமைச்சரான பிறகு, புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டது.

இதற்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டம் தேர்வு செய்யப்பட்டது.

முந்தைய ஆட்சிகளில் புதிய தலைமைச் செயலகத்துக்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும் அவை முழுமையான கட்டடமாக உருவாகவில்லை. இந்த நிலையில் கலைஞர் அரசு ஓமந்தூராரில் புதிய தலைமைச் செயலகம்–சட்டப்பேரவை வளாகத்தை கட்டுமானமாக உருவாக்கும் பணியைத் தொடங்கியது.

2008 ஜூன் 12-ஆம் தேதி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்துக்கு கலைஞர் அடிக்கல் நாட்டினார்.

இதில் சட்டப்பேரவை அரங்கம் மட்டுமின்றி முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், தலைமைச் செயலாளர் மற்றும் அரசுத் துறைச் செயலாளர்களின் அலுவலகங்களையும் ஒரே வளாகத்தில் கொண்டுவரும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டது.

இரவு பகல் பாராமல் பார்த்துப் பார்த்து கட்டிய கலைஞர்

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை, தலைமைச் செயலக வளாகத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கிய பிறகு, பணிகளை கலைஞர் இரவும் பகலுமாய் தொடர்ந்து நேரில் சென்று பார்வையிட்டார். கட்டுமானத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் கவனித்து, பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால்தான் பின்னாளில் திமுகவினர் ஓமந்தூரார் தலைமைச் செயலகத்தை, “கலைஞர் பார்த்துப் பார்த்து கட்டிய கட்டிடம்”, “கலைஞரின் கனவு” என்று நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அப்போது பள்ளிக் ப்கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவிடம்தான் புதிய தலைமை செயலகம் கட்டுமான பணியின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

A Block – சட்டப்பேரவையின் புதிய முகம்

ஓமந்தூரார் வளாகத்தின் பிரதான பகுதியாக A Block உருவாக்கப்பட்டது. சுமார் 9 முதல் 9.3 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்தப் பகுதியில் புதிய சட்டப்பேரவை அரங்கம், முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர்கள் அலுவலகங்கள், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், தலைமைச் செயலாளர் மற்றும் முக்கிய அரசுத் துறைகளுக்கான அலுவலகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. சுமார் 700 அறைகளைக் கொண்டதாக இந்தப் பிரதான கட்டடம் வடிவமைக்கப்பட்டது.

B Block – இன்னும் பிரமாண்டமான விரிவாக்கம்

A Block-ஐத் தொடர்ந்து B Block அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 7.43 லட்சம் சதுர அடி பரப்பில் திட்டமிடப்பட்ட இந்தப் பகுதியில் கூடுதல் அரசுத் துறை அலுவலகங்கள் மட்டுமின்றி, 1,200 பேர் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம், 50 அறைகளைக் கொண்ட விருந்தினர் இல்லம், சுமார் 700 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி உள்ளிட்டவற்றையும் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் 2011 ஆட்சி மாற்றம் ஏற்படும் நேரத்தில் A Block பயன்பாட்டுக்கு வந்திருந்த நிலையில், B Block பணிகள் முழுமையாக முடிவடையவில்லை.

திறந்து வைத்த மன்மோகன் சிங்

வேகமாக நடைபெற்ற கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து, 2010 மார்ச் 13-ஆம் தேதி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.

விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் கலைஞர், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல பத்து ஆண்டுகளாக நீடித்த “புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றாக புதிய தலைமைச் செயலகம்” என்ற தேடல் முதல் முறையாக ஒரு முழுமையான கட்டடமாக உருவெடுத்து, சட்டப்பேரவையும் அங்கு செயல்படும் நிலையை எட்டியது.

2010 மார்ச் மாதம் முதல் தமிழக சட்டப்பேரவை ஓமந்தூரார் புதிய வளாகத்தில் செயல்படத் தொடங்கியது. புதிய சட்டப்பேரவை அரங்கில் பேரவை நடவடிக்கைகள் நடைபெற்றன; முதலமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களும் அங்கு செயல்படத் தொடங்கின.

ஆனால் அனைத்து அரசுத் துறைகளும் ஓமந்தூராருக்கு முழுமையாக இடமாற்றம் செய்யப்படவில்லை. 2011 சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்குள் B Block பணிகளும் முழுமையடையவில்லை.

கலைஞரின் தலைமை செயலக சிறப்புகள்

ஜெர்மனியைச் சேர்ந்த G.M.P. நிறுவனம், இக்கட்டடத்தை தரைத்தளம் மற்றும் ஆறு தளங்கள் கொண்ட, சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத பசுமைக் கட்டடமாக வடிவமைத்தது. தேசிய அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி கோரிய M/s. ECCI Limited வசம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு, 12.11.2008 முதல் பணிகள் நடைபெற்றன. கட்டடத்தின் வெளிப்பகுதியில் வேதியியல் வண்ணப்பூச்சைத் தவிர்த்து, கண்ணாடியும் மெருகு ஏற்றப்பட்ட கருங்கல் பலகையும் பொருத்தப்பட்டன.

நான்கு வட்டங்கள் கொண்ட இக்கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாம் வட்டத்தின் மேல் தளத்தில் பசுமையான தோட்டமும், வெளிப்புறம் வாகனங்கள் செல்ல கூரை அமைக்கப்பட்ட சாலையும், அதன் மேல் புல்வெளி மற்றும் செடிகளும் அமைத்து வடிவமைக்கப்பட்டன.

சட்டமன்றப் பேரவை

120 அடி விட்டம் கொண்ட வட்ட வடிவ அமைப்பு உடைய சட்டமன்றப் பேரவை அமைக்கப்பட்டுள்ளது. அதன் கூரையின் மேற்புறத்தில் 100 அடி உயரம் கொண்ட மிகப்பிரம்மாண்டமான குவிமுக மாடம் (Dome) அமைக்கப்பட்டது. இக்கூடத்தில் வேலை செய்யும் அலுவலர்கள் களைப்படையாமல் வேலை செய்வதற்கு ஏதுவாக, கட்டடம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது.

பசுமைக் கட்டட வசதிகள்

இக்கட்டடத்தின் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, புல்வெளி மற்றும் செடிகளுக்குப் பயன்படுத்தப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. குறைந்த அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்தும் விளக்குகள் மற்றும் மின்சாரக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. சட்டசபை, பொதுத்துறை, நிதித்துறை, சட்டத்துறை, உள்துறை ஆகிய துறைகளின் அலுவலகங்களும், அமைச்சர்களின் அறைகளும் இக்கட்டடத்தில் அமைக்கப்பட்டன.

வடிவமைப்புத் திட்டம் உருவான விதம்

திராவிடக் கலாச்சாரத்தையும் சக்கர வியூகத்தையும் அடிப்படையாகக் கொண்டு சக்கர வடிவம் உருவாக்கப்பட்டது. சக்கரங்களை இணைக்கும் புள்ளிகளைச் சேர்த்து கோலம் உருவாவதை அறிய முடிகிறது.

ஜெர்மனியில் இருந்து வந்திருந்த கட்டட வடிவமைப்பு நிபுணர்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய முறையான கோலங்கள் உருவாக்கப்படும் விதத்தையும், புள்ளிகளை ஒன்றுசேர்த்து ஒருங்கிணைத்து வடிவம் கொடுப்பதையும் கண்டு அதிசயித்து, கோலம் வகையிலான அடிப்படையில் நான்கு சக்கர வடிவங்களையும் ஒருங்கிணைத்தனர்.

கோலம் இடம்பெறும் இடங்களாக தரை, தூண்கள், வெளிப்புறத் தடுப்பு அலங்கார வேலைகள், கதவு மேற்புறப் பலகைகள், சுவர் பார்டர்கள் ஆகியவற்றில் தமிழகத்தின் பாரம்பரியக் கோலங்கள் உருவாக்கப்பட்டன.

‘திராவிட சிகரம்’

தமிழ்க் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்தது கோபுரம். திராவிடக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக ‘திராவிட சிகரம்’ எனும் வகையில் கோபுரம் வடிவமைக்கப்பட்டது.
பாரம்பரிய சிற்பக்கலையான கருங்கல் வேலைப்பாடுடன் நவீன அலுமினியத் தகடுகளும் பொருத்தப்பட்டு, மிக உயரமாக இயற்கை வெளிச்சம் சட்டசபைக்குள் வருமாறு நேர்த்தியான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தின் பரப்பளவு

  • தரைத்தளம் 17,455 சதுர மீட்டர் (1,87,955 சதுர அடி)
  • முதல் தளம் — 11,274 சதுர மீட்டர் (1,21,398 சதுர அடி)
  • இரண்டாம் தளம் — 11,061 சதுர மீட்டர் (1,19,105 சதுர அடி)
  • மூன்றாம் தளம் — 10,137 சதுர மீட்டர் (1,09,155 சதுர அடி)
  • நான்காம் தளம் — 11,061 சதுர மீட்டர் (1,19,105 சதுர அடி)
  • ஐந்தாம் தளம் — 12,595 சதுர மீட்டர் (1,35,623 சதுர அடி)
  • ஆறாம் தளம் — 12,088 சதுர மீட்டர் (1,30,164 சதுர அடி)
  • ஏழாம் தளம் — 787 சதுர மீட்டர் (8,474 சதுர அடி)
  • கட்டடத்தின் உயரம் — 60.50 மீட்டர் (198.44 அடி).

அடித்தூண்கள்

  • கடைக்கால் அடித்தூண்களின் எண்ணிக்கை- 1,676.
  • கற்காரைத் தூண்களின் எண்ணிக்கை- 475.

பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள்

  • மண் வேலை- 55,000 கன மீட்டர் (19,42,325 கன அடி)
  • கற்காரை- 91,250 கன மீட்டர் (32,22,494 கன அடி).
  • ஆற்று மணல்- 53,000 கன மீட்டர் (18,71,695 கன அடி).
  • கருங்கல் ஜல்லி- 54,000 கன மீட்டர் (19,07,010 கன அடி).
  • சிமெண்ட்- 23,760 மெட்ரிக் டன்
  • இரும்புக் கம்பி- 14,000 மெட்ரிக் டன்.
  • செங்கல்- 49,60,000.
  • தரையில் பதிக்கப்பட்ட மெருகூட்டப்பட்ட கருங்கல் பலகை- 48,000 சதுர மீட்டர் (5,16,864 சதுர அடி).
  • தரையில் பதிக்கப்பட்ட சலவைக்கல் -18,000 சதுர மீட்டர் (1,93,824 சதுர அடி).
  • கண்ணாடித் தடுப்புச் சுவர்- 20,000 சதுர மீட்டர் (2,15,360 சதுர அடி).

கட்டுமானப் பணியில் மனித உழைப்பு

  • பொறியாளர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள்-1,17,000 மனித நாட்கள்.
  • இதர பணியாளர்கள்- 70,200 மனித நாட்கள்.
  • தொழிலாளர்கள்- 14,56,000 மனித நாட்கள்.

மின்சார வசதிகள்

  • மின் ஓட்ட அழுத்த மாற்றுக் கருவி – 1600 கி.வோல்ட் ஆம்ஸ் / 33 கி.வோ / 400 வோல்ட் — 7.
  • உயர் அழுத்த கருவி பொருத்து பலகை- 1,250 ஆம்ஸ் — 3.
  • குறைந்த அழுத்த கருவி பொருத்து பலகை- 600–1250 ஆம்ஸ்- 21.
  • மின் கடத்திக் கம்பியின் நீளம்- 32 கிலோ மீட்டர்.
  • மின் கம்பி தாங்கும் தட்டின் நீளம்- 30 கிலோ மீட்டர்.

குளிர்சாதன வசதிகள்

  • காற்று குளிரூட்டுக் கருவி- 410 டன்-10.
  • குளிர்ந்த தண்ணீர் இறைக்கும் கருவி- 1,073 கேலன்/நிமிடம் செயல்திறன் கொண்டது-20.
  • காற்று சுத்திகரிப்புக் கருவி- 36,000 கன அடி/நிமிடம் செயல்திறன் கொண்டது- 25.
  • காற்று வெளியேற்றி- 1,930.
  • குளிர்ந்த நீர் எடுத்துச் செல்லும் குழாயின் நீளம்- 31 கிலோ மீட்டர்.
  • குளிர்ந்த காற்று செல்லும் குழாயின் பரப்பு- 14 சதுர கிலோ மீட்டர்.

தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள்

  • தீயணைக்கும் தண்ணீர் இறைக்கும் கருவி- 273 கன மீட்டர்/மணி நேரம்- 3.
  • தீயணைப்பிற்காகத் தண்ணீர் கொண்டு வரும் குழாயின் நீளம்- 31 கிலோ மீட்டர்.
  • தீயணைப்பு தண்ணீர் தெளிப்பான் கருவிகள்- 9,500.
  • தீ எச்சரிக்கைக்காகப் போடப்பட்ட மின்கம்பியின் நீளம்- 23 கிலோ மீட்டர்.
  • புகை அறியும் கருவிகள் – 3,500.
  • தீ எச்சரிக்கை ஒலிப்பான்கள்- 600.
  • மின்தூக்கிகள்- 17
    (தமிழரசு மாத இதழ் மார்ச்- ஏப்ரல் 2010)

இந்த புதிய தலைமை செயலகத்தில் 19.03.2010-ல் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தாக்கல் செய்தார்.

மீண்டும் கோட்டைக்குத் திரும்பிய தலைமைச் செயலகம்

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானதும், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தார்.

2011 மே 16-ஆம் தேதி, புதிய அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தலைமைச் செயலகத்தை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு சட்டப்பேரவைக் கூட்டங்களும் மீண்டும் கோட்டையில் நடைபெறத் தொடங்கின.

மருத்துவமனையாக மாற்ற முடிவு

ஓமந்தூரார் கட்டடத்தின் எதிர்காலம் குறித்த அடுத்த முக்கிய முடிவை ஜெயலலிதா 2011 ஆகஸ்ட் 19-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

விதி 110-ன் கீழ் பேசிய அவர், ஓமந்தூரார் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவதற்கான முடிவை அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக 2011 செப்டம்பர் 14-ஆம் தேதி G.O.Ms.No.846 பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஓமந்தூரார் வளாகத்தின் A Block-ல் Multi Super Speciality Hospital அமைக்கவும், B Block-ல் புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கவும் அரசு முடிவு செய்தது.

இந்த முடிவுக்கும் நீதிமன்றத்தில் எதிர்ப்பு எழுந்தது. வழக்குகள் நடைபெற்ற பின்னர், ஓமந்தூரார் கட்டடத்தை உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் அரசின் முடிவு நீதிமன்றங்களில் நிலைநிறுத்தப்பட்டது.

இதனால் 2010-ல் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகமாக திறக்கப்பட்ட ஓமந்தூரார் வளாகத்தின் அந்தப் பயன்பாடு சுமார் ஓராண்டிலேயே முடிவுக்கு வந்தது.

தமிழகத்தின் சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்குத் திரும்பின. கலைஞர் அரசு சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகமாக உருவாக்கிய ஓமந்தூரார் வளாகத்தின் A Block, ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாறியது.

கொரோனா காலத்தில் மீண்டும் கலைவாணர் அரங்கம்

2011-ல் புனித ஜார்ஜ் கோட்டைக்குத் திரும்பிய தமிழக சட்டப்பேரவை, அடுத்த பல ஆண்டுகள் அங்கேயே செயல்பட்டு வந்தது. ஆனால் 2020-ல் கொரோனா பெருந்தொற்று தமிழக சட்டப்பேரவையின் இருப்பிடத்தை மீண்டும் மாற்றியது.

புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் சிரமம் இருந்ததால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக் கூட்டத்தை அதிக இடவசதி கொண்ட கலைவாணர் அரங்கத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 2020 செப்டம்பர் 14-ஆம் தேதி, கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பல்நோக்கு அரங்கில் சட்டப்பேரவை கூடியது.

இதில் ஒரு வரலாற்றுச் சுவாரஸ்யமும் இருந்தது. 1952 முதல் 1956 வரை சென்னை மாநில சட்டப்பேரவை செயல்பட்ட அதே கலைவாணர் அரங்க வளாகத்திற்குத்தான், சுமார் 64 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை மீண்டும் வந்தது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சட்டப்பேரவைக் கூட்டங்கள் உடனடியாக புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்படவில்லை.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசின் சட்டப்பேரவைக் கூட்டங்களும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெற்றன. 2021 ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரும் அங்கேயே நடைபெற்றது.

2022 தொடக்கத்தில் சட்டப்பேரவையை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்ற அரசு திட்டமிட்டது. ஆனால் Omicron பரவல் அதிகரித்ததால் அந்த முடிவு மாற்றப்பட்டு, ஜனவரி கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கத்திலேயே நடத்தப்பட்டது.

கொரோனா சூழல் தணிந்த பின்னர் சட்டப்பேரவை 2022-ல் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்குத் திரும்பியது.

2021-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, கலைஞர் கட்டிய ஓமந்தூரார் வளாகத்தை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. ஆனால் மு.க.ஸ்டாலின் அரசு அந்த முடிவை எடுக்கவில்லை.

ஓமந்தூரார் வளாகத்தில் செயல்பட்டு வந்த அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தொடர்ந்து அங்கேயே செயல்பட்டது; தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தொடர்ந்தது.

விஜய் ஆட்சியில் மீண்டும் ‘தலைமை செயலக’ சர்ச்சை

2026-ல் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தின் இடவசதி தொடர்பான பிரச்சினை மீண்டும் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அவரது செயலாளர்களின் அலுவலகங்களை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அங்கு ஏற்கெனவே செயல்பட்டு வந்த சில அரசுத் துறை அலுவலகங்களை வேறு தளங்கள் மற்றும் கலைவாணர் அரங்க வளாகத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிர்வாக அலுவலக வசதிகளை ஏற்படுத்துவதற்கான டெண்டரும் கோரப்பட்டது. இந்தப் பணிகளுக்கான டெண்டர் நடைமுறை குறித்து சர்ச்சை எழுந்தபோது, விதிகளின்படியே டெண்டர் கோரப்பட்டதாக பொதுப்பணித்துறை விளக்கமும் அளித்தது.

கலைஞர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை, 2026-ல் விஜய் அரசின் முதலமைச்சர் அலுவலகத் தேவைக்கும் பயன்படும் நிலை ஏற்பட்டது. ஆனால் விஜய் அரசு இதை நிரந்தரத் தீர்வாகப் பார்க்கவில்லை.

2026 செப்டம்பர் 3-ஆம் தேதி, சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழகத்தின் நிர்வாகத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அடுத்த 100 ஆண்டுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

புதிய வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பில் அமைக்கப்படும் என்றும், இதற்காக ₹1,200 கோடி செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு விஜய் அரசு நிற்கவில்லை.

சென்னை மயிலாப்பூர் வட்டம், பட்டினப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான T.S.No.4593/1, 4593/29, 4593/33 ஆகிய நிலங்களில் 21.37 ஏக்கரும், T.S.No.4592-ல் 0.39 ஏக்கரும் என மொத்தம் 21.76 ஏக்கர் நிலம் புதிய சட்டப்பேரவை–தலைமைச் செயலக வளாகத்துக்காக அடையாளம் காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2026 செப்டம்பர் 8-ஆம் தேதி G.O.(Ms) No.564, Public (Buildings) Department அரசாணையை விஜய் அரசு வெளியிட்டது. இதன்மூலம் 20 லட்சம் சதுர அடி பரப்பில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தைக் கட்டுவதற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை (in-principle approval) அரசு வழங்கி அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது.

நான்கு நூற்றாண்டுகளை நெருங்கும் பயணம்

1640-ல் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கிய தமிழகத்தின் அதிகார மையப் பயணம், பல இடமாற்றங்கள், புதிய தலைநகருக்கான யோசனைகள், கைவிடப்பட்ட திட்டங்கள், கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் என பல திருப்பங்களைக் கடந்து வந்திருக்கிறது. இப்போது 2026-ல் பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை–தலைமைச் செயலகம் என்ற அடுத்த அத்தியாயத்தை விஜய் அரசு தொடங்கியிருக்கிறது.

சுற்றுச் சூழல் நெருக்கடிகள்?

ஆனால் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவது நிலத்தைத் தேர்வு செய்து கட்டுமானத்தைத் தொடங்குவதோடு முடிந்துவிடும் விஷயம் அல்ல. கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகள், சுற்றுச்சூழல் அனுமதி, கடற்கரை வெள்ள அபாயம், புயல் மற்றும் கனமழைக் கால நீர்தேக்கம், நிலத்தடி நீர் மற்றும் வடிகால் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கும். குறிப்பாக 20 லட்சம் சதுர அடி பரப்பிலான மிகப்பெரிய அரசு வளாகம் என்பதால், கட்டுமானத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி தேவையான ஆய்வுகளையும் அனுமதிகளையும் விஜய் அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் 21.76 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது திட்டத்தின் தொடக்கம்தான்; சுற்றுச்சூழல் அனுமதிகள் உள்ளிட்ட அடுத்தடுத்த நடைமுறைகளைக் கடந்த பிறகே திட்டத்தின் முழுமையான பாதை தெளிவாகும்.

அத்துடன் அப்பகுதி மீனவப் பெருங்குடி மக்கள் இப்போதே போர்க்கொடி தூக்குகின்றனர். தமிழ்நாட்டில் ஆளும் தவெக, காங்கிரஸ் கட்சிகளைத் தவிர அத்தனை கட்சிகளும் இத்திட்டத்தை மிக கடுமையாக எதிர்க்கின்றன.

நான்கு நூற்றாண்டுகளை நெருங்கும் புனித ஜார்ஜ் கோட்டையின் அதிகாரப் பயணத்திற்கு இது விடையாகுமா? அல்லது தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகத்துக்கான நீண்ட ‘தேடலில்’ இன்னொரு அத்தியாயமாகுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share