விஜய் அரசின் புதிய தலைமை செயலகத்துக்கு எதிர்ப்பு- பழவேற்காடு முதல் கோவளம் வரை அணி திரளும் மீனவர்கள்!

Published On:

| By Mathi

புதிய தலைமை செயலகத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு

முதல்வர் விஜய் அரசு பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு எதிராக பழவேற்காடு முதல் கோவளம் வரையிலான மீனவர்கள் ஓரணியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 15-ந் தேதி மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

முதல்வர் விஜய் சட்டசபையில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முதல்வர் விஜய் அரசின் இந்த நடவடிக்கைக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நெய்தல் மக்கள் கட்சித் தலைவர் கு. பாரதி நமது மின்னம்பலத்திடம் கூறுகையில், “ பட்டினப்பாக்கத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட உள்ள பகுதிக்கு தெற்கில் முள்ளிக் குப்பம், சீனிவாசபுரம், வடக்குப் பகுதியில் ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம்,இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமிங் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் என மொத்தம் 9 மீனவ கிராமங்கள் உள்ளன. புதிய தலைமைச் செயலகம் இந்த பகுதியில் அமையும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூரை உள்ளடக்கிய பகுதிகள் பள்ளி மண்டலம் (School zone) என்று அழைக்கப்படுகிறது. இந்த பள்ளிகளில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயில்கின்றனர். ஏற்கனவே சாந்தோம் நெடுஞ்சாலையும், கடற்கரை லூப் சாலையும் ஒருவழிப்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால்தான் கடந்த கால திமுக, அதிமுக அரசுகள் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்யவில்லை.

ADVERTISEMENT

அத்துடன் சென்னையில் அதிக அளவில் மீன் தொழில் நடைபெறும் இடம் இந்த பகுதி. ஆகையால் இதனை மீன் தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரி வருகிறோம். இதனை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. எங்களுடைய மீனவர்களின் நலத் திட்டங்களுக்கு நிதி இல்லை என்று சொல்கிற அரசுக்கு, புதிய தலைமைச் செயலகம் கட்ட மட்டும் நிதி இருக்கிறதா?

தற்போதைய விஜய் அரசின் முடிவு தொடர்பாக 9 கிராம மீனவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக வரும் 15-ந் தேதி பழவேற்காடு முதல் கோவளம் வரையிலான அனைத்து மீனவர் கிராம பிரதிநிதிகள் மற்றும் மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றுவோம். இதனை ஏற்காவிட்டால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share