தமிழ்நாட்டின் 3 முக்கிய புதிய ரயில் திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை (Union Cabinet ) நேற்று செப்டம்பர் 9-ந் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நேற்று ரயில்வே அமைச்சகத்தின் ரூ.10,021 கோடி மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில்,
- அரக்கோணம் – ரேணிகுண்டா இடையே 77 கிலோ மீட்டர் தொலைவிற்கு 3, 4-வது ரயில் வழித்தடம் அமைத்தல்
- ஓசூர் – ஓமலூர் இடையே 147 கி மீ தொலைவிற்கு இரட்டை வழித்தடம் அமைத்தல்
- சேலம் – கரூர் – திண்டுக்கல் இடையே 159 கி மீ தொலைவிற்கு இரட்டை வழித்தடம் அமைத்தல்
- ஆகிய மூன்று திட்டங்கள் இதில் அடங்கும்.
மேலும்,
- வைட்பீல்ட் – பங்காரப்பேட்டை இடையே, 47 கி மீ தொலைவிற்கு 3, 4-வது ரயில் பாதை அமைத்தல்
- செகந்திராபாத் (காட்கேசர்) – காசிபேட் இடையே 110 கி மீ தொலைவிலான ரயில் பாதைகள் அமைத்தல் ஆகியவை அடங்கும்.
- புதிய ரயில் வழித்தடங்கள், போக்குவரத்தை வெகுவாக மேம்படுத்த உதவிடும். இதன் மூலம், பயணிகளிடையே, ரயில்வேத் துறையின் செயல்பாட்டுத் திறன், சேவையின் நம்பகத்தன்மை ஆகியவை அதிகரிக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், தமிழ்நாட்டில், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, ஓசூர் கோட்டை, மேட்டூர் அணை, கொடைக்கானல் மலைப்பகுதி, சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல் கோட்டை, கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், யாதகிரிகட்டா கோயில், போங்கீர் கோட்டை, சுரேந்திரபுரி, ஸ்வர்ணகிரி கோயில், திருப்பதி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோட்டிலிங்கேஸ்வரர் கோயில், சீதி பைரவேஸ்வர சுவாமி கோயில், பங்காரு திருப்பதி, கோலார் தங்கச் சுரங்கங்கள், உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு ரயில் போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்தும்.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டங்கள், ரயில்வேத் துறையின் தற்போதைய கட்டமைப்பை 540 கி மீ அளவிற்கு விரிவுபடுத்த உதவிடும். மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இத்திட்டங்கள், 52 லட்சம் மக்கள் வசிக்கும் 2,121 கிராமப்புறங்களுக்கான போக்குவரத்து இணைப்பு வசதியை மேம்படுத்தும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த, எரிசக்தித் திறன்மிக்க போக்குவரத்து முறையாக ரயில்வே இருப்பதால், இது நாட்டின் பருவநிலை இலக்குகளை அடைவதற்கும், சரக்குகளைக் கையாள்வதற்கும், போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும் உதவிடும்.
