சென்னையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக கட்டிட வளாகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று (செப்டம்பர் 9) வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் விஜய், ”1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்” என்றார்.
இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பின் டெக் சிட்டிக்கு எதிரே உள்ள நிலம் ஆகிய மூன்று இடங்கள் தேர்வு பட்டியலில் இருந்தன.


இந்த நிலையில் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி, அரசு வருவாய் துறை ஆகியவற்றுக்கு சொந்தமான மொத்தம் 25.55 ஏக்கர் நிலம் புதிய தலைமைச் செயலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அரசாணையில் பொதுப்பணித்துறை மூன்று மாதங்களுக்குள் மதிப்பீடுகளுடன் கூடிய விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று இத்திட்டத்தை செயல்படுத்த மூன்று குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடக்கலை ஆலோசனை நிறுவனத்தை தேர்ந்தெடுக்க ஆர்வம் தெரிவிப்பதற்கான அழைப்பு விடுக்கும் குழு.
கட்டிட வரைபடம் மற்றும் வடிவமைப்பை முடிவெடுக்கும் குழு. (தொடக்க கட்டம்)
கட்டிட வரைபடம் மற்றும் வடிவமைப்பை முடிவெடுக்கும் இறுதி கட்டக்குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்படவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
