தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்குமா என்பது குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் இன்று கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து கூட்டணி கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு நான் பதில் சொல்கிறேன் என்று பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “ஒரு அர்ஜெண்டா உடன் பேசக்கூடாது. மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என்று பெயர் வைத்திருக்கிறோம். இது தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்குமான கூட்டணி. இதனுடைய தலைவராக தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் இருப்பார். இதுதான் இன்றைக்கு எடுத்த முடிவு.
நாடாளுமன்ற தேர்தல் 2029ல் தான் நடக்கப் போகிறது. தமிழக வெற்றி கழகத்தை தவிர நாங்கள் எல்லாம் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். அந்தக் கட்சியிலும் எம்பிகள் வந்தால் அவர்களும் இந்தியா கூட்டணியில் சேர்வார்கள்.
நாங்கள் ஆர்எஸ்எஸ் மதவாத சக்திகளுடன் பெரிய சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒரே பக்கம் இருக்கும் போது அதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
இப்போது இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிறது. அதில் தான் எங்கள் கவனம் இருக்கும். இரண்டாவது கூட்டத்தில் பெயரை அறிவிப்போம் என்று சொன்னோம் அதன்படி அறிவித்தோம். அடுத்தடுத்த கூட்டங்களில் ஆலோசனை செய்து முடிவுகள் அறிவிக்கப்படும். அமைச்சர் அருண்ராஜ் சொன்னது போல இந்த கூட்டணியின் பெயரே ஒரு ஸ்டேட்மென்ட். இதைத் தவிர வேறு எதையும் டைவர்ஷன் செய்யாதீர்கள்” என்று கூறினார்.
