விஜய் அரசின் புதிய தலைமை செயலகம்- மத்திய அமைச்சர் கடும் எதிர்ப்பு!

Published On:

| By Mathi

Union Minister- Vijay Govt.- New Secretariat

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு சென்னை பட்டினப்பாக்கம் பகுதி பரிசீலனை செய்யப்படுவதாக, ஒரு சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானபோதே, பல்வேறு தரப்பினரும் இந்த திட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அவசர கதியில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் பகுதி ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதி. குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் 20 லட்சம் சதுர அடி பரப்பில் இந்த கட்டடம் கட்டப்பட்டால் அதனுடன் இணைந்து தீயணைப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

ADVERTISEMENT

இதனால் அந்த பகுதியில் எந்த அளவிற்கு இட நெருக்கடி ஏற்படும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த நெருக்கடியான இடத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கனோர், நூற்றுக்கணக்கான வாகனங்களில் தலைமைச் செயலகம் வந்து சென்றால் நிலைமை என்னவாகும்?

அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த பகுதி கடற்கரையையொட்டிய பகுதி என்பதால் இவ்வளவு பெரிய கட்டிடம் கட்டப்படும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

இந்த பகுதியில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மீனவ மக்கள் ஏற்கனவே தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

பட்டினப்பாக்கம் பகுதி என்பது நீண்ட நெடுங்காலமாக மீனவ மக்களின் வாழ்விடமாகவும், மீன்பிடி தொழில் மற்றும் மீன் வர்த்தக மையமாகவும் விளங்கி வருகிறது. இந்த இடத்தை நம்பி நூற்றுக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அத்தகைய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது என்பது பட்டினப்பாக்கம் மீனவ மக்களின் வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் ஒட்டு மொத்தமாக சீர்குலைத்து விடும்.

எனவே மீனவ சமுதாய மக்களின் கோரிக்கைகளை முறையாகக் கேட்டறியாமல் அங்கு அவசரகதியில் தலைமைச் செயலகம் அமைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாக அமைந்து விடும்.

ரூ.1200 கோடி ரூபாய் செலவில் தலைமைச் செயலகம் அமைப்பது நீண்டகால அடிப்படையில் பயனுள்ளதாக இருக்க வேண்டும். தற்போதைய நிலையில் இவ்வளவு நெருக்கடி என்றால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இடத்தில் தலைமைச் செயலக கட்டடம் இருந்தால் நிலைமை மிக மோசமாகும்.

புதிய தலைமைச் செயலகம் தேவையான ஒன்று என்றாலும் அதற்கு தகுந்த இடத்தைதேர்வு செய்வது மிக அவசியம். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது அவசரத்தை கைவிட்டு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்து, ஆய்வுக்கு பிறகு அமைக்கப்பட வேண்டும். போதிய இடவசதி, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்பு, சிறந்த போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்

எனவே போக்குவரத்து மிக்க நெரிசலான பகுதியில் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தி உள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share