வீட்ல என்னை மீட் பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? ஸ்டாலின் கேள்வி!

Published On:

| By Kavi

காவல்துறை மானியத்தில் முதல்வர் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினே இன்று (செப்டம்பர் 10) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத்தில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும் நம்முடைய உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன். அதுவும் இந்த சர்ச்சையில் முக்கியமாக என்னுடைய சிறை வரலாறு இருப்பதால், நான் அதைப்பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ADVERTISEMENT

தம்பி விஜய், நீங்கள் சொன்னது உண்மைதான், பொய் எல்லாம் இல்லை. எமர்ஜென்சி காலத்தில் அதை எதிர்த்து தலைவர் கலைஞர் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி, மிசா சட்டத்தைக் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, அன்றிருந்த ஒன்றிய அரசாங்கம் 30-01-1976 அன்று திமுக ஆட்சியை கலைத்தார்கள்.

ஆட்சியை கலைத்த அடுத்த நொடி, மிசா சட்டத்தில் என்னை அரெஸ்ட் செய்வதற்காக கோபாலபுரம் வீட்டுக்கு போலீஸ் வந்தார்கள். அன்று நான் வீட்டில் இல்லை, பிரச்சாரத்திற்கு போயிருக்கிறான், நாளைக்கு வந்துவிடுவான், வந்ததும் நானே போன் பண்ணுகிறேன் வந்து அரெஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள் என்று கலைஞர் சொல்லி அனுப்பிவிட்டார். அடுத்த நாள் நான் வந்ததும் அவரே போலீஸை வரச்சொல்லி அரெஸ்ட் பண்ணச் சொல்லிவிட்டார்.

ADVERTISEMENT

சிறையில் எனக்குப் பல கொடுமைகள் நடந்தன. எங்களைக் கொண்டுபோய் அடைத்தது தொழுநோயாளிகள் இருக்கிற இடத்தில்தான். 10 பேரை ஒரு சிறிய அறைக்குள்ளே அடைத்து வைத்தார்கள். அந்த அறைக்குள்ளேயே ஒரு பானையில்தான் அத்தனை பேரும் சிறுநீர் கழிக்க வேண்டும். அந்த இடமே மிகவும் துர்நாற்றமாக இருக்கும், அங்கேதான் நாங்கள் தூங்க வேண்டும். இரவில் தூங்கவிடாமல் போலீஸ் லத்தியால் அடிப்பார்கள், பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். இன்னொரு பக்கம் ஆயுள்தண்டனை கைதிகளை வைத்து எங்களை கொடூரமாக அடிப்பார்கள்.

அவர்கள் அடித்ததில் என் கூட இருந்த அருமை அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு ஜெயிலிலேயே இறந்துபோனார். அவர்கள் அடித்ததில் என் தாடை எலும்பெல்லாம் உடைந்துவிட்டது. நீங்கள் கூட கைவைத்து தாடையைக் காண்பித்தீர்கள் அல்லவா, அது கரெக்ட்தான். இன்றைக்கும் நான் அடிவாங்கிய தழும்புகள் எனக்கு இருக்கிறது, நான் இல்லை என்று சொல்லவில்லை.

பொதுவாழ்க்கையில் இருக்கிறவர்களுக்கு, முக்கியமாக தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் போராடுகிறவர்களுக்கு நிறைய பேருக்கு இந்த மாதிரியான அடக்குமுறைகள் நடந்திருக்கிறது. போராளிகள் எல்லாம் இதைத்தாண்டிதான் வந்திருப்பார்கள். எதிர்த்துப் போராடுவதும் அதனுடைய விளைவுகளைச் சந்திப்பதும் எங்களுக்கு ஒன்றும் புதிது இல்லை. நீங்கள் கொள்கைத் தலைவராகச் சொல்லும் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து திமுகவின் வரலாறே இதுதான். அந்த வரலாற்றில் நானும் இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையான ஒரு விஷயம்தான்.

யார் என்னைக் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்றவே முடியாது, அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும். சந்தேகம் என்றால் சட்டமன்றத்தில் ஒரு லைப்ரரி இருக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா, அங்கே எல்லா ஆவணங்களும் இருக்கும், அங்கே போய் என்னுடைய போராட்ட வரலாற்றை நீங்கள் படித்துப் பாருங்கள், உண்மை என்னவென்று புரியும்.

இரண்டாவதாக, சர்க்காரியா கமிஷன் பற்றியும் எங்கள் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலைப் பேசியிருக்கிறீர்கள், ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறீர்கள். சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதுக்கு அப்புறம் ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பலமுறை ஆட்சி மாறிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏதாவது உண்மை இருந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். இத்தனை வருஷமாக அரசியலுக்காக கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையே நீங்களும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

அதுமட்டுமில்லாமல், அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு, அதில் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகச் சொல்கிறீர்கள். அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95% வழக்குகளில் இதுவரைக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அரசியல் பழிவாங்களுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுகிறது என்பது இங்கே இருக்கிற எல்லாருக்குமே நன்றாகத் தெரியும். உங்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், உங்கள் கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது கூட அமலாக்கத்துறை பல வழக்குகளைப் போட்டிருக்கிறது. இதெல்லாம் ஒன்றிய அரசின் கொள்கை எதிரியாகச் சித்தரிக்கிற உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது?

முதலமைச்சர் தம்பி விஜய், நான் உங்களிடம் கேட்பது ஒன்றுதான். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு என்று ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது. பல பெரும் தலைவர்கள், மாமனிதர்கள் தமிழ்நாட்டைச் செதுக்கிய இடம் அது. அந்தப் பொறுப்பு இப்போது உங்களுக்கும் இருக்கிறது. சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்கள் நலத்திட்டங்கள், தமிழ்நாட்டை மேலும் மேலும் எப்படி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு போவது, தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது – இதையெல்லாம் விவாதம் பண்ணுங்கள். அதுதான் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது. அதைவிட்டுவிட்டு தேவையில்லாத சர்ச்சைகளை சட்டமன்றத்தில் பேச வேண்டாம் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.

நீங்கள் முதலமைச்சரானதும் என்னைச் சந்திக்க என் வீட்டிற்கு வந்தீர்கள். அப்போது நான் உங்கள் கரம் பிடித்து வரவேற்றேன். அப்போது நாம் பேசும்போது, “தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை ரொம்ப விமர்சித்து பேசிவிட்டேன், ஐ அம் சாரி சார்” என்று சொன்னீர்கள். அதற்கு நான், “பரவாயில்லை பிரதர், அதையெல்லாம் மனசில் வைத்துக்கொள்ளவில்லை; நீங்கள் இப்போது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், யாரைப் பற்றி பேசும்போதும் அந்தச் கண்ணியத்தோடு பேசுங்கள்” என்று சொன்னேன். அதையெல்லாம் நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல.

திரும்பவும் சொல்கிறேன், ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்தோடு உங்களுடைய வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும். நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம், அதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் வகிக்கும் பெரிய பொறுப்பை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும்.

சட்டசபையையே ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றுவது, நாங்கள் கட்டிய பாலத்தின் மேலே நின்று போட்டோஷூட் பண்ணுவது என்று ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா சூட்டிங் மாதிரியே நடத்துகிறீர்கள். உங்களுடைய திறனற்ற நிர்வாகத்தை மறைக்க இப்படி விதவிதமாக ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் ரியாலிட்டி என்ன? “உண்மை ஊரைத் தாண்டுவதற்குள் பொய் உலகத்தைச் சுற்றிவந்துவிடும்” என்று ஒரு பழமொழி சொல்வார்கள் அல்லவா, அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. உங்கள் ஆட்சியில் தினம் தினம் கொலை, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்று சட்டஒழுங்கு படுகுழியில் இருக்கிறது. பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்தை ரத்து பண்ணி, தமிழ்நாட்டின் வளர்ச்சியை 15 வருஷம் பின்னாடி கொண்டுபோயிருக்கிறீர்கள்.

விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்தீர்கள், ஆனால் அதையும் ஒழுங்காகப் பண்ணவில்லை. அனைத்துக் குடும்பங்களுக்கும் வருஷத்திற்கு 6 சிலிண்டர் என்று சொன்னீர்கள், இப்போது தகுதி உள்ளவர்களுக்கு 3 சிலிண்டர் மட்டும் என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறீர்கள். மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 என்று சொன்னீர்கள், இன்னும் நாங்கள் கொடுத்த அதே ரூ.1000 ரூபாயைத்தான் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்னும் பல வாக்குறுதிகள் பற்றி வாயைத் திறக்காமல் இருக்கிறீர்கள்.

அப்போது சொன்னதெல்லாம் ஒன்று, இப்போது செய்வதெல்லாம் ஒன்று. மாற்றம் வேண்டும் என்று நினைத்து வாக்களித்த மக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள், “உண்மையிலேயே இப்போது என்ன மாற்றம் வந்திருக்கிறது, இது சரியான மாற்றமா?” என்பதை கவனியுங்கள். எது நிர்வாகத்திறன் வாய்ந்த அரசு, எது திறமையில்லாத அரசு என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

குறிப்பாக உடன்பிறப்புகளுக்கு நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், மக்கள் நமக்கு முழுமையாக ஓட்டு போடவில்லை, நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதால், இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகளால் மக்கள் பாதிக்கப்படும்போது “நமக்கு என்ன” என்று இருக்கக்கூடாது. அப்படி ஒரு எண்ணம் நம் சித்தாந்தத்திலேயே கிடையாது.

ஆட்சியை இழப்பதை திமுக என்றுமே தோல்வியாக நினைத்தது இல்லை. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, இதை மக்கள் பணியின் இன்னொரு முகமாகத்தான் நான் பார்க்கிறேன். ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, என்றுமே தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் மக்களுக்காகவும் நாம் சண்டை செய்துகொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் தாத்தாவுக்காகச் சண்டை செய்தோம், அவர்கள் அப்பாவுக்காகச் சண்டை செய்தோம், இப்போது அவர்களுக்காகவே சண்டை செய்வோம்.

இதுதான் நம் திமுகவின் வரலாறு. அந்த வரலாறு எப்போதுமே மாறாது, மாறவும் கூடாது” என்று கூறியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share