நிதியமைச்சர் மரிய வில்சன் வழக்கு : செப் 18 வரை விசாரிக்க தடை!

Published On:

| By Kavi

நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வரை விசாரிக்க இடைக்கால தடை விதித்து புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக நிதியமைச்சராக உள்ள மரிய வில்சன் 2022 ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனது சகோதரர் மரிய க்ளோத் வீட்டுக்குள் புகுந்து தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. 

ADVERTISEMENT

இது தொடர்பாக மரிய க்ளோத் அளித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1ல் நடந்து வந்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கேட்டும், வழக்கை ரத்து செய்ய கேட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மரிய வில்சன் மனுதாக்கல் செய்தார். 

ஆனால் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல… அவர் சட்டத்துக்கு மேலானவரும் அல்ல. எனவே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

ADVERTISEMENT

இந்த உத்தரவின் படி கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டார். 

இந்நிலையில் இவ்வழக்கு  நேற்று (செப்டம்பர் 11) புதுச்சேரி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2ல் நீதிபதி சந்திரசேகர் முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்கும் மனு மற்றும் வழக்கிலிருந்து விடுவிக்க  கோரும் மனுக்கள் மீது பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்டனர்.

இதை ஏற்ற நீதிபதி சந்திரசேகர் வழக்கு விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

இதனிடையே புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1ல் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க முடியும். வேறு நீதிமன்றங்களில் நடத்த முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த், மரிய வில்சன் வழக்கை வரும் 18ஆம் தேதி வரை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அன்றைய தினம் இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி முன்பாக நடைபெற உள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share