லண்டன் சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் முதல் அரசுமுறைப் பயணமாக லண்டனுக்கு இன்று (செப்டம்பர் 11) சென்றடைந்தார்.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கான புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று இரவு 10 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டார். துபாய் வழியாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு இந்திய நேரப்படி இன்று காலை 11:30 மணி அளவில் அவர் சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் கூடியிருந்த பிரிட்டன் வாழ் தமிழர்கள், முதலமைச்சர் விஜய்க்குப் பூங்கொத்துகள் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT

அப்போது, அங்கிருந்த இளைஞர் ஒருவருடன் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

6 நாட்கள் லண்டனில் தங்கியிருக்கும் விஜய், தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முன்னணித் தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதேசமயம், உலகப் புகழ்பெற்ற கார் பந்தயமான ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ நிகழ்வையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார். முதலமைச்சர் விஜய்யின் சக நடிகரான அஜித்குமார் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, SDAT உறுப்பினர் செயலர் மேக்நாத் ரெட்டி, கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance TN) தலைமைச் செயல் அதிகாரி தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். மேலும், விஜய்யின் நெருங்கிய நண்பரான விஷ்ணு ரெட்டியும் உடன் சென்றுள்ளார்.

பொதுவாக, விமானப் பயணங்களின் போது முதலமைச்சர் விஜய் வி.ஐ.பி-க்கள் (VIP) செல்லும் பிரத்யேகப் பாதை வழியாகச் செல்வது வழக்கம். நேற்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் வி.வி.ஐ.பி-க்கள் (VVIP) செல்லும் நுழைவாயில் எண் 6 வழியாகச் செல்லத் திட்டமிட்டிருந்தார். இதற்காக ‘பி.சி.ஏ.எஸ்’ (BCAS) எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்திடம் விண்ணப்பித்து அனுமதிச் சீட்டு பெற வேண்டும். அப்படி அனுமதிச் சீட்டு பெற்றபோது, முதலமைச்சருக்கு மட்டுமே வி.வி.ஐ.பி அனுமதிச் சீட்டு கிடைத்தது. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, அவரது நண்பர் விஷ்ணு ரெட்டிக்கு அனுமதி கிடைக்கவில்லை.

தனது நண்பருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், வி.வி.ஐ.பி நுழைவாயிலைத் தவிர்த்துவிட்டு, முனையம் 2-இல் (Terminal 2) உள்ள D9 நுழைவாயில் வழியாக முதலமைச்சர் விஜய் சென்றார். இந்த வழித்தடத்தைப் பொறுத்தவரை அவசரகாலப் பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். அந்த வழியாக முதலமைச்சர் விஜய், அரசு அதிகாரிகள் மற்றும் அவரது நண்பர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share