தனது மனைவியின் பிறந்தநாளான இன்று அவரது நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் மனைவி கிரேஸ் ஜெயந்தி ராணி. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இவர்களுக்கு திருமணம் நடந்து 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மறைந்த தனது மனைவியைப் பற்றி ஜேசிடி பிரபாகர் பொதுவெளியில் உணர்வுபூர்வமாக பகிர்ந்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி இவர்களது 41வது திருமண நாளில் மனைவியை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.
அதில், ”என்னை கண்ணின் இமை போல காத்தவர் எனது மனைவி” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று கிரேஸ் ஜெகந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த அவர், “எனது குட்டி மலரை அவளது பிறந்தநாளில் மிகுந்த அன்போடும் அழகான நினைவுகளோடும் நினைவு கூறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் கிரேஸ் ஜெயந்தியின் கல்லறையில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்கள் இணையதளத்தில் கவனம் பெற்றுள்ளன.
அதன் மீது, “ஒரு அருமையான மனைவி… அன்புமிக்க தாய் மற்றும் பாட்டி… கனிவான மற்றும் தாராள மனப்பான்மை கொண்டவர்.. எப்போதும் மற்றவர்களுக்கே முன்னுரிமை அளிப்பவர்… எண்ணற்ற தியாகங்களால் நிறைந்த இவரது வாழ்க்கை, முழுவதுமாக மற்றவர்களின் நலனுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சபாநாயகரின் இந்த பதிவுக்கு கீழே, ’உங்கள் மனைவி இப்போது உயிருடன் இருந்திருந்தால் உங்களின் உயர்வை கண்டு மகிழ்ச்சி அடைந்து இருப்பார் என்றும் அவர் எப்போதும் உங்களுடன் தான் இருப்பார்…. கவலைப்படாதீர்கள்’ என்றும் நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
