கடன் வாங்கி ரூ.1200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அவசியமா? – ஈபிஎஸ் ஆவேசம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் சட்டசபையில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு திமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.

இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

ADVERTISEMENT

விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.

புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை. தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share