சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் இன்று (செப்டம்பர் 11) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,, “சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது? மக்கள் விமானத்தில் பறந்து செல்வதற்கு எந்த இடையூறும் இல்லையே. அப்படியிருக்க, புதிதாக விமான நிலையம் அமைப்பதற்கான தேவை என்ன? ஒரே ஒரு முதலாளி விமானப் போக்குவரத்தை நடத்துகிறார். அவருக்காக எதற்கு புதிதாக விமான நிலையம் ஏற்படுத்த வேண்டுமா?” என்றார்.
மேலும், விமான நிலையத்தை எடுத்துவிட்டு அங்கு சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள். தொழிற்சாலைகள் அமைப்பதால் மட்டுமே வளர்ச்சி ஏற்பட்டுவிடுமா என்றும் கேள்வி எழுப்பினார். “எத்தனை தொழிற்சாலைகள் வந்தால் தான் வளர்ச்சி என்றால் ஏன் பெண்களுக்கு 2500 ரூபாய் கொடுக்கும் நிலை வருகிறது? படித்த பட்டதாரிகளுக்கு ரூ.4000 கொடுக்கும் நிலை வருகிறது. இலவச அரிசி, இலவச சிலிண்டர் வாங்கும் நிலைமை மக்களுக்கு ஏன் வருகிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பெருந்துறை சிப்காட் பகுதியில் 26 கிலோமீட்டர் தொலைவுக்கு தண்ணீர் எடுத்து குடிக்க இயலாத நிலையில், தண்ணீரில் யுரேனியம் கலந்துவிட்டதாகவும், குடிக்க முடியாத அளவுக்கு விஷத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படும் புகார்கள் குறித்து ஆட்சியாளர்கள் பதில் அளித்துள்ளார்களா? என்றார்.
மேலும் சட்டமன்றத்தின் மாண்பு சீர்குலைந்துவிட்டது. தற்போதுள்ள சட்டமன்றக் கட்டிடத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது? உட்காரும் இடத்தில் ஏதாவது உருத்துகிறதா? ஏற்கனவே அது ஒரு பெரிய தியேட்டர் போல இருக்கிறது. சினிமாவில் பார்த்துக்கொண்டிருந்தது போல் ஒரு பெரிய சினிமா தியேட்டர்… அதுதானே!” என்று அவர் விமர்சித்தார்.
மேலும் தமிழக சட்டமன்றத்தில் தற்போது பேசப்படும் சில கருத்துகளையும் சீமான் கடுமையாக விமர்சித்தார். ஒரு அமைச்சர் “நீங்கள் ஒரு காவலன்.. உங்களைப் பார்த்தால் பகைவர்களுக்கு மெர்சல் ஆகிறது. உங்களைப் பார்த்தால் துள்ளாத மனமும் துள்ளுகிறது” என்கிறார். ஒருவர் “குருவி படம் ஓட நான் பாலாபிஷேகம் செய்தேன்” என்கிறார். அலகு குத்தி தேர் மற்றும் கார் இழுத்தது போன்றவற்றை சட்டமன்றத்தில் பேசுகிறார். ஒருவர் போதை மையம் உருவாக்க வேண்டும் என்கிறார். பார்த்துத் தானே படிக்கிறீர்கள்..
அறிஞர்களும், பெருமக்களும், சான்றோர்களும் இருந்த அவை இது. அங்கேதான் ஜீவானந்தம், இரட்டைமலை சீனிவாசன், பெருந்தலைவர் காமராஜர், கக்கன், முத்துராமலிங்கத் தேவர் போன்ற தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அவையின் மாண்பு இன்று சீர்குலைந்துவிட்டது” என்று சீமான் தெரிவித்தார்.
மேலும், “ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது வெற்றிக்காக பாடுபட்ட மனைவி, தந்தை, தாய், மாமனார், மாமியார், குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சட்டமன்றத்தில் படித்துக்கொண்டிருக்கிறார். சரித்திரத்தில் இதை எல்லாம் எழுதி வையுங்கள் சான்று.. எவ்வளவு பேர் போராடி இந்த சுதந்திரத்தைப் பெற்றார்கள். இவர்களுக்கு எதற்கு சுதந்திரம்? சுதந்திரத்தின் அருமை தெரியாதவர்களுக்கு எதற்காக சுதந்திரம்?” என சீமான் காட்டமாகப் பேசினார்.
