இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் டெல்லி அரசியலை பரபரப்பாக்கியுள்ளன. ’வாழ்நாள் எதிரிகளாக’ களத்தில் மோதும் திரிணாமுல் காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே இந்த விவகாரத்தில் நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பது அதிரடி திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஞானேஷ்குமார் விவகாரம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில், மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை பல்வேறு முடிவுகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக The Indian Express செப்டம்பர் 23-ம் தேதி செய்தி வெளியிட்டது. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் Form 6-ல் செய்யப்பட்ட மாற்றம், SIR நடவடிக்கையில் வாக்காளர் பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் இந்த ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ஆணையர்களிடையே மாறுபட்ட கருத்துகள், எழுத்துப்பூர்வ குறிப்புகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் இடம்பெறுவது முடிவெடுக்கும் நடைமுறையின் இயல்பான பகுதி என்று தெரிவித்தது. தனது உத்தரவுகள் சட்டரீதியான நடைமுறைகளின்படியே பிறப்பிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஆனால் இந்த விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
கம்யூனிஸ்டுகளுடன் கை கோர்க்கும் மமதா
இந்த நிலையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, செப்டம்பர் 23-ம் தேதி மமதா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் கூட்டணிக்கு வெளியே உள்ள சில எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார்.
தேர்தல் ஆணையம் தொடர்பாக உருவாகியுள்ள சூழலை விவாதிக்க எதிர்க்கட்சிகள் அவசரமாகக் கூட வேண்டும் என்பதே அவரது கோரிக்கை.
இதில் அடுத்த திருப்பமாக, மறுநாளே எம்.ஏ.பேபிக்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி பதில் அளித்தார். அதன்பிறகு இருவரும் தொலைபேசியிலும் பேசினர்.
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை, தேர்தல் நடைமுறை மற்றும் ஜனநாயகம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர்.
ராகுலுடன் மமதா பேச்சு
எம்.ஏ.பேபியுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை மமதா பானர்ஜி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, “இந்தியா” கூட்டணி கட்சிகளை விரைவாக ஒருங்கிணைத்து, தேர்தல் ஆணைய விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் மமதா கேட்டுக் கொண்டார்.
செப்.30-ல் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்
இதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 30-ம் தேதி டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள Constitution Club of India-வில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆனால் யார் யார் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்ற விவரம் இன்னும் உறுதியாகவில்லை. ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணைய விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்திற்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
