நான் பர்கர் சாப்பிட்டாலும், முடி வெட்டினாலும் கூட பிரச்சினையா என்று மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது 28 வயதில் இந்த பதவிக்கு வந்தவர். சென்னை மாநகராட்சியின் மூன்றாவது பெண் மேயர் என்ற பெருமையுடன் செயல்பட்டு வருகிறார்.
மேயாராக பொறுப்பேற்றது முதல் மாநகராட்சி பணிகளை தொடர்ந்து தீவிரமாக செய்து வருகிறார்.
இந்த சூழலில் அவரைச் சுற்றி சில சர்ச்சைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு அவர் குடை பிடித்தது, அப்போதைய முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கியபடி பயணித்தது, வாய் தவறி கொசு வழங்கும் திட்டம் எனக் கூறியது, மேயர் பிரியாவுக்கும் எம்எல்ஏ பல்லவிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு என தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தன.
இவற்றுக்கு மேயர் பிரியா விளக்கங்களையும் தந்திருக்கிறார்.
இந்த நிலையில் மேயர் பிரியா சமீபத்தில் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். முடியை ஷார்ட்டாகவும் ஸ்டைல் ஆகவும் வெட்டி இருக்கும் நிலையில், நேற்று அவர் சென்னை மாமன்ற கூட்டத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலானது.
அவரது மாற்றம் இணையத்தில் கவனம் பெற்ற நிலையில் மீண்டும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து இன்று (செப்ம்டம்பர் 26) அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் எது செய்தாலும் சர்ச்சையாகி விடுகிறது. முதல் நாளில் இருந்து இன்று வரை சின்ன சின்ன விஷயங்கள் கூட பிரச்சனை தான்.
நான் பர்கர் சாப்பிட்டால் பிரச்சினை… முடி வெட்டினால் பிரச்சினை. என்னுடைய ஒவ்வொரு தனிப்பட்ட விருப்பமும் கேள்வி கேட்கப்படுகிறது.
நான் ஒரு பெண் என்பதாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவள் என்பதாலோ இப்படி நடக்கிறதா என்று எனக்கு நினைக்கத் தோன்றும்.
எனக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது பெண்களுக்காக குரல் கொடுப்பதாக உரிமை கோருபவர்களும் பெண் உரிமைவாதிகளும் எங்கே மறைந்து போகிறார்கள் என்று தெரியவில்லை.
அரசியலில் இருக்கும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ அல்லது பிறரை விட குறைந்த மரியாதை பெற தகுதியானவர்களோ அல்ல.
பொது வாழ்க்கையில் ஒரு பெண் இருக்கிறார் என்பதற்காக அவளது தோற்றம் வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட தேர்வுகளை வைத்து மதிப்பிடும் உரிமை யாருக்கும் இல்லை.
ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுக்கே உரித்தான கண்ணியமும், சுயமரியாதையும் தன் விருப்பப்படி வாழ்வதற்கான உரிமையும் உள்ளது.
மேயர் என்ற பதவிக்கு அப்பால் ஒரு பெண்ணை மதிக்க நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்
