அடுத்தடுத்து படுகொலைகள்… மணிப்பூர் முழுவதும் பதற்றமான பகுதி: ஆயுத படையினருக்கான சிறப்பு சட்டம் நீட்டிப்பு!

Published On:

| By Mathi

Manipur- AFSPA Act

மணிப்பூரில் 13 காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, மாநிலத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளையும் “பதற்றமான பகுதி” (Disturbed Area) என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 25) பிரகடனம் செய்துள்ளது. இதனையடுத்து மணிப்பூரில் ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் குக்கி, மைத்தேயி, நாகா உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களிடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது நாகா மற்றும் குக்கி இனங்களுக்கு இடையேயான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, காங்போக்பி மாவட்டத்தில் உள்ள என். டெய்காங் கிராமத்தில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 4 பேர் காயமடைந்தனர். வீடுகளும் தீவைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதி, தமெங்லாங் மாவட்டத்தில் குக்கி இனக்குழுவைச் சேர்ந்த 2 பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சில பண்ணை வீடுகளும் தீவைக்கப்பட்டன.

ADVERTISEMENT

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காங்போக்பி மாவட்டத்தின் மகுய் பகுதியில் மீண்டும் வன்முறை நீடித்து வருகிறது. அங்குள்ள நாகா கிராமங்களில் 41 வீடுகள் மற்றும் தேவாலயங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களுக்கு குக்கி ஆயுதக் குழுக்களே காரணம் என்று நாகா மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், மியான்மர் எல்லையை ஒட்டிய கம்ஜோங் மாவட்டத்தின் பிலோங் கிராமத்தில் ஆயுதக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாகா இனத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மியான்மரில் இருந்து செயல்படுவதாகக் கூறப்படும் ஆயுதக் குழுவினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதேநேரத்தில், தமெங்லாங் மாவட்டத்தில் குக்கி இனத்தைச் சேர்ந்த 36 வயது ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் பகுதியிலும் வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டன.

2023-ல் தொடங்கிய மெய்தி–குக்கி இன மோதல்களின் பதற்றம் முழுமையாகத் தணியாத நிலையில், தற்போது நாகா–குக்கி இனங்களிடையே படுகொலை, துப்பாக்கிச் சூடு, வீடுகளுக்குத் தீவைப்பு போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் மணிப்பூரின் 13 காவல் நிலையப் பகுதிகளைத் தவிர்த்து, மாநிலத்தின் மற்ற பகுதிகளை ‘பதற்றமான பகுதிகள்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன், ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டத்தின் அமலையும் அக்டோபர் 1 முதல் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

ஆயுத படையினருக்கான சிறப்பு சட்டம்

மணிப்பூரில் 13 காவல் நிலையப் பகுதிகளைத் தவிர்த்து மாநிலத்தின் மற்ற பகுதிகளில் AFSPA சட்டம் கடந்த ஏப்ரல் 1 முதல் 6 மாதங்களுக்கு அமலில் இருந்து வருகிறது. இந்தக் காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அக்டோபர் 1 முதல் மேலும் 6 மாதங்களுக்கு இந்தச் சட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த ஆயுதப் படையினருக்கான சட்டத்தை ரத்து செய்ய கோரி மணிப்பூர் மக்கள் பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share