தேர்தல் ஆணையர்களை “2 கழுதைகள்” என விளாசிய டி.என். சேஷன்… தேர்தல் ஆணையத்தை உலுக்கிய மோதல்கள்!

Published On:

| By Mathi

Election Commission-Story

”இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர்
ஞானேஷ் குமார் பதவி விலக கெடு விதித்துள்ளோம்; அவர் பதவி விலகவில்லை எனில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி முதல் மும்பையில் தொடங்கி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்”- காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைவர் அபிஜீத் தீப்கே.

காக்ரோச் ஜனதா கட்சி மட்டுமல்ல.. காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துவிட்டன.

ADVERTISEMENT

இதற்கெல்லாம் மையமாக இருப்பது, ஞானேஷ் குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணையத்துக்குள் மற்ற இரு ஆணையர்கள் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக வெளியான தகவல்கள்தான்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் இப்படியான மோதல்கள் புதிதல்ல. ராஜீவ் காந்தி காலத்து மூவர் ஆணையம் தொடங்கி சேஷன், கோபால்சாமி, லவாசா, அருண் கோயல் வழியாக ஞானேஷ் குமார் வரை… இந்திய தேர்தல் ஆணையத்தை உலுக்கிய மோதல்கள் ஏராளம்…

ADVERTISEMENT

ராஜீவ் காலத்தில் தொடங்கிய மூவர் ஆணையம்

1950-ல் உருவாக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரை மட்டுமே கொண்ட அமைப்பாகச் செயல்பட்டது. இந்த நடைமுறை 1989-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது முதல்முறையாக மாற்றப்பட்டது.

அப்போது ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தார். 1989 மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் அக்டோபர் 16ஆம் தேதி எஸ்.எஸ். தனோவா, வி.எஸ். சீகல் ஆகிய இரண்டு தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமித்தது. இதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் முதல்முறையாக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாறியது.

ADVERTISEMENT

தேர்தலுக்கு மிக அருகில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டதால், தலைமைத் தேர்தல் ஆணையரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு ஆணையர்கள் நியமிக்கப்பட்டார்களா என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது.

ஆனால் இந்த மூவர் அமைப்பு நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1989 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து வி.பி.சிங் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, 1990 ஜனவரியில் கூடுதல் தேர்தல் ஆணையர்களின் பதவிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.

இதை எதிர்த்து எஸ்.எஸ். தனோவா உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார். இந்தியாவின் முதல் மூன்று உறுப்பினர் தேர்தல் ஆணையத்தின் ஆயுள் சில மாதங்களிலேயே முடிந்தது. ஆனால் மூவர் தேர்தல் ஆணையம் என்ற யோசனை அத்துடன் முடிந்துவிடவில்லை.

சேஷன் vs கில், கிருஷ்ணமூர்த்தி

1990 டிசம்பரில் டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். தேர்தல் நடத்தை விதிகளை தீவிரமாக அமல்படுத்தியது, தேர்தல் செலவுகளைக் கண்காணித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளால் தேர்தல் ஆணையத்தை இந்திய அரசியலில் அதிக கவனம் பெற்ற அமைப்பாக மாற்றினார்.

இந்த நிலையில் 1993 அக்டோபரில் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு எம்.எஸ்.கில், ஜி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் தேர்தல் ஆணையர்களாக நியமித்தது. இதை சேஷன் கடுமையாக எதிர்த்தார்.

ஒருபுறம் சேஷன், மறுபுறம் கில் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே மோதல் உருவானது. இரண்டு தேர்தல் ஆணையர்களின் நியமனத்தை எதிர்த்து சேஷன் உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றார்.

சேஷனுக்கும் மற்ற இருவருக்கும் இடையேயான உறவு எப்படி இருந்தது என்பதை எம்.எஸ்.கில் பின்னர் வெளிப்படையாகக் கூறினார்.

1995 ஜூலையில் India Today-க்கு அளித்த நேர்காணலில், சேஷனுடன் இணைந்து பணியாற்றுவதற்காக அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்குப் பலமுறை சென்றபோதும் தங்களுடன் சேஷன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றும், தங்களுக்கு ஆவணங்கள் காட்டப்படவில்லை, கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை என்றும் கில் குற்றம்சாட்டினார்.

தேர்தல் ஆணையத்தில் தாங்கள் இருப்பதே இல்லாததுபோல சேஷன் நடந்துகொண்டார் என்பதே அவரது புகாராக இருந்தது.

இரண்டு கழுதைகள் சர்ச்சை

சேஷன் தனது சக தேர்தல் ஆணையர்களைப் பற்றிப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வார்த்தைகளும் சர்ச்சையாகின.

தேர்தல் ஆணையத்தில் முடிவுகள் பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்படும் வகையில் மத்திய அரசு மாற்றம் செய்ததைப் பற்றிப் பேசும்போது, கில் மற்றும் கிருஷ்ணமூர்த்தியை இரண்டு கழுதைகள் என்று சேஷன் குறிப்பிட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்கா போனபோதும் தொடர்ந்த மோதல்

1995-ல் இந்த மோதல் இன்னொரு கட்டத்தை எட்டியது. ஒரு மாத விடுமுறைக்காக அமெரிக்கா சென்ற சேஷன், தேர்தல் ஆணையர் பொறுப்பை கில் அல்லது கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைக்கவில்லை. அதற்குப் பதிலாக துணைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.பக்காவிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

இதற்கு கில் மற்றும் கிருஷ்ணமூர்த்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியலமைப்பின் கீழ் நியமிக்கப்பட்ட இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருக்கும்போது, அவர்களுக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரியிடம் பொறுப்பை எப்படி ஒப்படைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

இந்த அதிகார மோதலுக்கு 1995-ல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. மூன்று உறுப்பினர் தேர்தல் ஆணைய அமைப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் தலைவர் நிலையில் இருந்தாலும், மற்ற தேர்தல் ஆணையர்களைவிட முடிவெடுக்கும் அதிகாரத்தில் உயர்ந்த நிலையில் இல்லை என்பதும் உறுதியானது.

சக ஆணையரையே நீக்கச் சொன்ன கோபால்சாமி

சேஷன் காலத்துக்குப் பிறகு தேர்தல் ஆணையத்துக்குள் ஏற்பட்ட மற்றொரு பெரிய மோதல் 2009-ல் வெளிப்பட்டது. அப்போது என்.கோபால்சாமி தலைமைத் தேர்தல் ஆணையராகவும், நவீன் சாவ்லா மற்றும் எஸ்.ஒய்.குரேஷி தேர்தல் ஆணையர்களாகவும் இருந்தனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நவீன் சாவ்லா பாரபட்சமாகச் செயல்படுவதாகக் கூறி, அவரை தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கோபால்சாமி பரிந்துரை செய்தார்.

ஆனால் அந்தப் பரிந்துரை ஏற்கப்படவில்லை. கோபால்சாமியின் பதவிக்காலம் முடிந்த பிறகு, அவர் நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்த அதே நவீன் சாவ்லா இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.

பின்னர் சாவ்லா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கோபால்சாமி தன்னை நீக்கப் பரிந்துரைத்த சம்பவத்தையும், 1993-ல் சேஷன் கில் மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் நியமனத்தை எதிர்த்த சம்பவத்தையும் தேர்தல் ஆணையத்தின் சுமுகமான செயல்பாட்டைப் பாதித்த நிகழ்வுகளாகக் குறிப்பிட்டார்.

மோடி விவகாரத்தில் லவாசா அதிருப்தி

2019 மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்துக்குள் மீண்டும் கருத்து வேறுபாடு வெளிப்பட்டது. சுனில் அரோரா தலைமைத் தேர்தல் ஆணையராகவும், அசோக் லவாசா மற்றும் சுஷில் சந்திரா தேர்தல் ஆணையர்களாகவும் இருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் தேர்தல் பிரசாரப் பேச்சுகள் தொடர்பான தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களில், சில முடிவுகளில் பெரும்பான்மை கருத்துடன் அசோக் லவாசா உடன்படவில்லை.

தனது மாறுபட்ட கருத்தும் தேர்தல் ஆணையத்தின் இறுதி உத்தரவுகளில் இடம்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனால் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை முடிவை மட்டும் வெளியிட வேண்டுமா அல்லது மாறுபட்ட கருத்தையும் பொதுவெளியில் பதிவு செய்ய வேண்டுமா என்ற விவாதம் உருவானது.

அருண் கோயலின் மின்னல் வேக நியமனம்

2022-ல் அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விதம் அடுத்த சர்ச்சையானது. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அவர் விருப்ப ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மிகக் குறுகிய காலத்தில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

அவரது நியமனக் கோப்பு நகர்ந்த வேகம் உச்ச நீதிமன்ற விசாரணையிலேயே கேள்விக்குள்ளானது.

இதற்குப் பிறகு 2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அருண் கோயல் திடீரென தனது தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியானாலும், எந்தக் காரணமும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ஞானேஷ் குமார் வருகை

அருண் கோயல் ராஜினாமாவுக்குப் பிறகு 2024-ல் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். 2025 பிப்ரவரியில் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் முடிந்ததும் ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.

ஞானேஷ் குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட Special Intensive Revision எனப்படும் SIR வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை அரசியல் மற்றும் சட்ட விவாதத்தின் மையமாக மாறியது.

இந்த நிலையில்தான் தற்போது தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே பதிவான கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

10 மாதங்களில் 14 ஆட்சேபனைகள்

தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக Indian Express செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய வாக்காளர்களுக்கான Form 6 மாற்றம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், வாக்காளர் பட்டியல் database மற்றும் software கட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த ஆட்சேபனைகளில் இடம்பெற்றுள்ளன.

Form 6-ல் செய்யப்பட்ட மாற்றம் அனுமதியற்றது, சட்டத்துக்கு முரணானது என்று சந்து ஆட்சேபனை பதிவு செய்ததாகவும் Indian Express தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் database படிப்படியாக டெல்லியில் மையப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியையும் இரு தேர்தல் ஆணையர்கள் எழுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் கேபினட் செயலாளருக்கும் அவர்கள் எழுதியதாக அந்த விசாரணை தெரிவிக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் பதில்

இந்த விவகாரங்களுக்கு தேர்தல் ஆணையமும் பதிலளித்துள்ளது. கருத்து வேறுபாடுகள் மற்றும் உள்குறிப்புகள் ஒரு அமைப்பின் முடிவெடுக்கும் நடைமுறையின் இயல்பான பகுதிகள் என்றும், குறிப்பிட்ட சில குறிப்புகளை மட்டும் தனியாக எடுத்துப் பார்ப்பது முழுமையான படத்தை அளிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதேநேரத்தில் Indian Express வெளியிட்ட 14 குறிப்புகளின் இருப்பு, தேதிகள் அல்லது அவற்றின் உள்ளடக்கத்தை தேர்தல் ஆணையத்தின் பதில் மறுக்கவில்லை.

1989-ல் இரண்டு ஆணையர்கள் நியமிக்கப்பட்டபோது தொடங்கிய அதிகார மோதல் இப்போது ஞானேஷ் குமார் காலம் வரை நீடிக்கிறது.. இப்போதும் ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய மக்களுக்கு புரியாத புதிராக இருப்பது ”தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை எடுப்பது 3 ஆணையர்களா… தலைமை தேர்தல் ஆணையரா? அல்லது இவர்களுக்கு அப்பாற்பட்ட ‘சர்வ வல்லமை பொருந்திய ‘அந்த’ சக்தியா? என்பதுதான்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share