திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை, ”அங்கிள்” என்பது உள்ளிட்ட அடைமொழிகளுடன் முதல்வர் விஜய் விமர்சிப்பதற்கு ஆளும் தவெக அரசை ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
”பெண் குழந்தைகள் மீதும், பெண்கள் மீதும் பாலியல் வன்கொடுமைகள் புரிந்த கிரானைட் அதிபர் ஜெம் வீரமணி, அவரோடு தொடர்புடைய அனைவரையும் நீதியின் முன் நிறுத்தி சட்டபடி கடுமையாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனிடம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் குறித்தும் மு.க.ஸ்டாலினை அங்கிள் என விமர்சித்து பேசுவது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மு.வீரபாண்டியன், ”மு.க.ஸ்டாலினை மாண்புமிகு முன்னாள் முதல்வர் என்று சொல்லலாம். விஜய் பேசுவது புது மொழியாக இருக்கிறது. இது ஒரு பாசப்பிணையோடு நான் சொன்னேன் என்று கூட அவர் சொல்லலாம். ஆனால், அது முறை அல்ல.
முன்னாள் முதல்வர், மாண்புமிகு முன்னாள் முதல்வர் அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன் என்று சொல்வதுதான் அரசியல் உரையாடலுக்கு நல்லது. அவர் முன்னாள் முதல்வர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.
