8 மாதங்களில் 3 முறை விலை உயர்வு.. மனசாட்சியே இல்லாத தனியார் பால் நிறுவனங்கள்- அன்புமணி

Published On:

| By Mathi

Anbumani-Milk Price

”தமிழ்நாட்டில் தனியார் பால் விலைகள் இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன; ஏழை , நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பால் விலையை தனியார் நிறுவனங்கள் மனசாட்சியின்றி மேலும், மேலும் உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்ட அறிக்கை: 3 சதவீத கொழுப்பு சத்து கொண்ட நீல உறை பாலின் விலையை அரை லிட்டருக்கு ரூ.31-ல் இருந்து ரூ.32 ஆகவும், 4.5 சதவீத கொழுப்பு சத்து கொண்ட பச்சை உறை பாலின் விலையை ரூ.35-ல் இருந்து ரூ.37ஆகவும், 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை பாலின் விலையை ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இது 2026-ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ள மூன்றாம் விலை உயர்வு ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இப்போது வரையிலான 8 மாதங்களில் மட்டும் 3 முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் ஜூலை, செப்டம்பர் என இரு முறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஆவினில் 3 சதவீத கொழுப்பு சத்துள்ள நீல உறை பால் லிட்டருக்கு ரூ.40-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ.24 கூடுதலாக விற்பனை செய்கின்றன. அதேபோல், பச்சை உறை பால் ஆவினில் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தனியார் பால் விலை, ரூ.30 கூடுதலாக ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.60 மட்டும் தான். ஆனால், அதே பாலை தனியார் நிறுவனங்கள் ரூ.84-க்கு விற்பனை செய்கின்றன.

தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடில்லாமல் பால் விலையை உயர்த்துவதற்கு காரணம் தமிழ்நாட்டின் பால் சந்தையை தனியார் நிறுவனங்கள் அவற்றின் கைகளில் வைத்திருப்பது தான். தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கு, 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி வெறும் 16% மட்டுமே. இப்போது அது 12% அளவுக்கு குறைந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அதனால், ஆவின் நிறுவனம் குறைந்த விலையில் பால் விற்பனை செய்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்த நிறுவனத்தால் பால் வழங்க முடியாததாலும், தனியார் நிறுவனங்கள் 84% -88% சந்தையை தங்களிடம் வைத்திருப்பதாலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

ADVERTISEMENT

தனியாருக்கு போட்டியாக தமிழ்நாட்டில் 50% சந்தையை கைப்பற்றும் அளவுக்கு ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்தினால் மட்டும் தான் தனியார் பால் விலையை கட்டுப்படுத்த முடியும். எனவே, ஆவின் நிறுவனத்திற்கு புத்துயிரூட்டவும், தனியார் பால் விலைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்து அதன் விலையை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share