தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விலை இன்று (செப்டம்பர் 26) முதல் உயருகிறது. பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரையும், தயிர் விலை கிலோவுக்கு ரூ.2 வரையும் உயர்த்தப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை: ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 6.00ரூபாய் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட பிறகு தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமின்றி அண்டை மாநில தனியார் பால் நிறுவனங்களும் தங்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
காரணம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் தனியார் பால் நிறுவனங்கள் தங்களுக்கான பால் கொள்முதலை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடி வருகின்ற சூழலில் ஆவினுக்கான பால் கொள்முதல் விலை உயர்வு அந்நிறுவனங்களுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியதால் வேறு வழியின்றி விவசாய பெரு மக்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க தொடங்கின.
அவ்வாறு பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிய காரணத்தால் அந்த நிதியிழப்பை ஈடுசெய்ய தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் (செப்டம்பர்-21) தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களுள் ஆரோக்யா நிறுவனம் தங்களின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00ரூபாய் வரையிலும், தயிர் விற்பனை விலையை கிலோவிற்கு 2.00ரூபாயும் உயர்த்தியது.
இந்த சூழலில் தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களுள் ஆரோக்யாவை தொடர்ந்து அண்டை மாநில தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனாவாசா, வல்லபா, ஜெர்சி உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் சனிக்கிழமை முதல் (செப்டம்பர்-26) பால் விற்பனை விலையை
லிட்டருக்கு 4.00ரூபாய் வரையிலும் தயிர் விற்பனை விலையை கிலோவிற்கு 2.00ரூபாயும் உயர்த்த இருக்கின்றன.
அதன்படி
- 500மிலி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) 31.00ரூபாயில் இருந்து 32.00ரூபாயாகவும்
- நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 35.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும்
- கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Full Gream Milk) 40.00ரூபாயில் இருந்து 42.00ரூபாயாகவும்
- 1000மிலி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) 59.00ரூபாயில் இருந்து 61.00ரூபாயாகவும்
- நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 68.00ரூபாயில் இருந்து 70.00ரூபாயாகவும்
- கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Full Gream Milk) 78.00ரூபாயில் இருந்து 81.00ரூபாயாகவும்
- 500கிராம் (Toned Milk Curd) தயிர் 41.00ரூபாயில் இருந்து 42.00ரூபாயாகவும்,
- Double Toned Milk Curd தயிர் 36.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும் விற்பனை விலை உயர்வு செப்டம்பர் 26ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.
தனியார் பால் நிறுவனங்களின் இந்த விற்பனை விலை உயர்வு காரணமாக ஆவினுக்கும், தனியார் பாலுக்குமான விற்பனை விலை வித்தியாசம்
- 500மிலி சமன்படுத்தப்பட்ட பாலுக்கு (நீலக்கலர் பாக்கெட் – Toned Milk) 7.00ரூபாயும்
- நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கு (பச்சை நிற பாக்கெட் – Standardized Milk) 15.00ரூபாயும்
- கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலுக்கு (ஆரஞ்சு நிற பாக்கெட் – Full Gream Milk) 12.00ரூபாயும்
என சராசரியாக குறைந்தபட்சம் 14.00ரூபாய் முதல் அதிகபட்சமாக 30.00ரூபாய் வரை ஒரு லிட்டருக்கு விற்பனை விலை வித்தியாசம் இருப்பதால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கவனம் ஆவின் மீது திரும்பக் கூடும் என்பதால் தற்போதைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு மேலும் கூடுதலாகும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் பால் கொள்முதல் விலைக்கேற்ப விற்பனை விலையை மாற்றி அமைக்காத காரணத்தால் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தற்போது லிட்டருக்கு 15.00ரூபாய்க்கு மேல் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 4.70கோடி ரூபாய் இழப்பை சந்தித்து கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் ஆவின் நிறுவனம் முடங்கிப் போகும் பேராபத்தில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு ஆவின் பால் விற்பனை விலையில் மாற்றத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பால்வளத்துறை என்பது வெறும் ஆவினுக்கான துறையாக மட்டும் இல்லாமல், போக்குவரத்து, மருத்துவம், கல்வி, மின்சாரம் போன்ற துறைகளைப் போன்று ஒட்டுமொத்த பாலுற்பத்தி, விநியோகம், விற்பனையை கண்காணிக்க, தனியார் பால் நிறுவனங்கள், அவற்றின் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்களுக்குரிய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்து, பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையில் ஒரு சீரான அணுகுமுறையை கடைபிடிக்க பாலமான துறையாக பால்வளத்துறை செயல்படுவதற்கான உத்தரவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பிக்க வேண்டும்.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நலன் சார்ந்து அடிக்கடி விற்பனை விலையை உயர்த்துவதை தனியார் பால் நிறுவனங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
3-வது முறையாக உயர்வு
நடப்பாண்டில் தனியார் பால் விலை உயர்த்தப்படுவது இது 3-வது முறையாகும். கடந்த பிப்ரவரி மாதத்தில் பால் உற்பத்தி குறைவு மற்றும் கொள்முதல் விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் விலையை உயர்த்தின. அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் மீண்டும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை விலை உயர்த்தப்பட்டது. தற்போது செப்டம்பர் மாதத்தில் 3-வது முறையாக விலை உயர்த்தப்படுகிறது.
என்ன நடந்தது இதுவரை?
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் விஜய், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் வழங்கும் 3.16 லட்சத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்துவதாக அறிவித்தார். இதனால் அரசுக்கு மாதம் ரூ.30 கோடி, ஆண்டுக்கு ரூ.360 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியான பிறகும் பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலை உயர்வைக் குறிப்பிட்டு பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து 12 நாட்களில் 2-வது அறிவிப்பு வெளியானது.
இந்த கூடுதல் விலை உயர்வால் ஏற்படும் செலவை ஆவின் நிறுவனத்துக்கு அரசு ஈடு செய்யும் என்றும், இதற்காக மாதம் ரூ.60 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.720 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஆவின் பசும்பால் கொள்முதல் விலை இரண்டு கட்டங்களாக ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆகவும், பின்னர் ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆகவும் மொத்தம் லிட்டருக்கு ரூ.6 உயர்ந்தது.
இதுதொடர்பாக தமிழக அரசு பின்னர் அரசாணை வெளியிட்டது. அதன்படி 4.3 சதவிகித கொழுப்புச் சத்து மற்றும் 8.2 சதவிகித SNF கொண்ட பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.44 கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டது. எருமைப்பாலுக்கான கொள்முதல் விலையும் ரூ.47-ல் இருந்து ரூ.53 ஆக உயர்த்தப்பட்டது. இந்த புதிய கொள்முதல் விலை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டபோதும், நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு டைரீஸ் அசோசியேஷன் வெளியிட்ட அறிக்கையில், ஆவின் கொள்முதல் விலை உயர்வால் தனியார் பால் நிறுவனங்களும் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் கொள்முதல் விலை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும், இதனால் தனியார் பால் விற்பனை விலை உயரக்கூடிய சூழல் உருவாகும் என்றும் தெரிவித்திருந்தது. ஆவின் கொள்முதல் விலையை நிர்ணயிக்கும்போது தனியார் பால் நிறுவனங்களின் நிலைமையையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில்தான் ஆவின் கொள்முதல் விலை உயர்வுக்குப் பிறகு, தனியார் நிறுவனங்களும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் விலையை உயர்த்தியதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 21ஆம் தேதி ஆரோக்யா நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியது. தற்போது டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனிவாசா, வல்லபா, ஜெர்சி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்களின் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
