உங்க மாவட்டத்துல வடகிழக்கு பருவமழை எவ்வளவு பெய்யும்? மயிலாடுதுறை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ‘சம்பவம்’?

Published On:

| By Mathi

Tamil Nadu Northeast Monsoon 2026

தமிழ்நாட்டில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை 13 சதவீதம் குறைந்துள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும் என்ற முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நிலவிய தெற்கு அலைவு குறியீடு (Southern Oscillation Index – SOI), கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature – SST) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னறிவிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Australian Rainman International V.4.3 மென்பொருளைப் பயன்படுத்தி, 60 சதவீத நிகழ்தகவு அடிப்படையில் வடகிழக்குப் பருவமழை கணிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை 13% குறைவு

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழையில் தமிழ்நாடு மழைப் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது.

ADVERTISEMENT

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழைக் காலத்தில், செப்டம்பர் 22-ம் தேதி வரை தமிழ்நாட்டில் 254 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இயல்பாக 292 மி.மீ. மழை கிடைத்திருக்க வேண்டும்.

இதன்படி தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 13 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்தப் பற்றாக்குறைக்கு வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழை ஓரளவு நிவாரணம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மண்ணின் ஈரப்பதம் அதிகரிப்பதுடன், நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலும் மேம்படும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டில் மொத்தமாக சுமார் 468 மி.மீ. மழை பெய்யக்கூடும். இது நீண்டகால சராசரியான 464 மி.மீ. மழைக்கு நெருக்கமாக உள்ளது.

அதேநேரத்தில், தமிழ்நாடு முழுவதும் ஒரே அளவில் மழை கிடைக்காது. தற்போது நிலவும் எல் நினோ (El Nino) சூழல் காரணமாக மழைப் பரவலில் மாறுபாடுகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் புயல் உள்ளிட்ட காரணங்களால் சில நேரங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், உள்மாவட்டங்களில் மழை இல்லாத வறண்ட நிலை நீடிக்கலாம். குறிப்பாக டிசம்பர் மாதத்தில் இதுபோன்ற வறண்ட நிலை அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

உங்க மாவட்டத்துல எவ்வளவு மழை?

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மாவட்ட வாரியான வடகிழக்குப் பருவமழை முன்னறிவிப்பு:

ஒரே தமிழ்நாடு… மாவட்டத்துக்கு மாவட்டம் மாறும் மழை!

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாவட்ட வாரியான கணிப்பைப் பார்த்தால், வடகிழக்குப் பருவமழை தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை என்பது தெரிகிறது.

இதில் அதிகபட்சமாக மயிலாடுதுறையில் இயல்பான 910 மி.மீ. மழைக்கு பதிலாக 991 மி.மீ. மழை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 9% அதிகம். செங்கல்பட்டில் 720 மி.மீ.க்கு பதிலாக 780 மி.மீ. மழை கிடைக்கலாம்; இது 8% அதிகம். ராணிப்பேட்டையில் 6%, கன்னியாகுமரியில் 5%, நாகப்பட்டினத்தில் 2% அதிக மழை கணிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மற்றொரு பக்கம் மழை குறையும் மாவட்டங்களும் இருக்கின்றன. கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, வேலூர், விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இயல்பைவிட 9% குறைவான மழை கணிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், திருவாரூர், திருப்பத்தூரில் 8% குறைவாகவும்; மதுரை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், விழுப்புரத்தில் 7% குறைவாகவும் மழை கிடைக்கலாம்.

இதற்கு நடுவே திண்டுக்கல்லில் இயல்பான மழையும் கணிக்கப்பட்ட மழையும் சரியாக 400 மி.மீ.; கோயம்புத்தூரிலும் 366 மி.மீ.க்கு 367 மி.மீ. என பெரிய மாற்றமில்லை.

மொத்தமாகப் பார்த்தால், அட்டவணையில் தமிழ்நாட்டுக்கு இயல்பான 434 மி.மீ.க்கு பதிலாக 438 மி.மீ என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டங்களுக்கு இடையே பெரிய வேறுபாடு இருப்பதைத்தான் இந்த அட்டவணை காட்டுகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share