கோவை பெரியார் அறிவுலகத்தில் இரண்டாவது முறையாக இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதல்வர் விஜய் திறந்து வைத்தார். இந்தப் பெரியார் அறிவுலகத்தில் அமைந்துள்ள நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்குவதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியிருந்தார்.
‘அகல் விளக்கு’ என்ற பதிப்பகத்திடமிருந்து பல லட்சம் ரூபாய்க்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தையில் வழக்கமாக ரூ. 300-க்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு, சுமார் ரூ. 1,395 வரை விலை கொடுத்து வாங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இச்சம்பவம் பூதாகரமான நிலையில், தவெக மற்றும் திமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த ‘அகல் விளக்கு’ மற்றும் ‘பீனிக்ஸ்’ ஆகிய பதிப்பகங்களின் புத்தகங்கள் நூலகத்திலிருந்து உடனடியாக அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, 250-க்கும் மேற்பட்ட ஆங்கில நூல்களும் போலியானவை என்று சர்ச்சை எழுந்த நிலையில், அந்தப் புத்தகங்களும் அகற்றப்பட்டன. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நூலகங்களிலும் தரமற்ற, போலியான நூல்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், ஏற்கனவே பெரியார் அறிவுலக நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியபோது முக்கிய ஆவணங்களைப் பார்வையிட்டுச் சென்றிருந்தனர். இந்நிலையில், தற்போது டிஎஸ்பி இம்மானுவேல் சேகரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு இன்று சோதனை நடத்தி வருகிறது.
பெரியார் அறிவுலக நூலகத்தில் தமிழ் நூல்கள் இடம்பெற்றுள்ள நான்காவது தளத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் தொகை, டெண்டர் நடைமுறைகள் மற்றும் அதற்கான ரசீதுகளின் (Bills) உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகள் தீவிரமாகச் சரிபார்த்து வருகின்றனர். மேலும், அனைத்துத் தளங்களிலும் முழுமையான சோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.









