சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷா இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் 11 முதல் 15ஆம் தேதி வரை ஐசிசி நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஐசிசி இயக்குனர்கள் முன்மொழிந்ததை தொடர்ந்து ஜெய் ஷாவின் மறு நியமனத்தை நிர்வாக குழு உறுதி செய்துள்ளது.
தற்போது 38 வயதாகும் ஜெய்ஷா கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐசிசி தலைவராக போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
இதன் மூலம் இளம் வயதில் தலைவரானவர் என்ற பெருமையையும் பெற்றார். அவருக்கு முன்பு கிரேக் கார்கலே இந்த பொறுப்பை வகித்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
முக்கிய இலக்குகள்
ஜெய்ஷா இரண்டாவது பதவி காலத்தில், சர்வதேச அளவில் கிரிக்கெட்டை விரிவுபடுத்துவது, ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, வணிக வாய்ப்புகளை மேம்படுத்துவது, மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் அசோசியேட் நாடுகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவது, கிரிக்கெட் போட்டிகளின் நேர்மை தன்மையை பாதுகாப்பது உள்ளிட்ட இலக்குகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
குறிப்பாக 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உளள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்துள்ள ஜெய் ஷா, நிர்வாக குழு தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி கடன்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.









