டாஸ்மாக்கின் மேம்பாட்டிற்கு மருத்துவத்துறையின் நிதியை பயன்படுத்துவதா? – விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்

By Pandeeswari Gurusamy

|

Published on 16 Nov 2026, 2:41 PM

நோயாளிகளுக்கான மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தத் துப்பில்லாத தவெக அரசு, டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைப்பதில் மட்டும் இத்தனை அக்கறை காட்டுவது ஏன்? என டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்து விநியோகம் செய்துவரும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (TNMSC) மூலம், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கிடங்குகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

ADVERTISEMENT

அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்வது, அவற்றின் தரத்தைப் பரிசோதிப்பது, மருந்துகளின் இருப்பைக் கண்காணிப்பது, உரிய நேரத்தில் விநியோகம் செய்வது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கியப் பொறுப்புகளைக் கொண்ட மருத்துவப் பணிகள் கழகம், தற்போது டாஸ்மாக் கிடங்குகளின் மேற்கூரை அமைப்பது, மழைநீர் கசிவைச் சரிசெய்வது போன்ற பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை அறிவித்துக் கொண்டிருப்பது, மக்கள் நலனைவிட டாஸ்மாக் விற்பனைக்கான கட்டமைப்பைப் பராமரிப்பதற்கே தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு, குடிநீர் முதல் கழிவறை வரையிலான அடிப்படை வசதிகளைக்கூடப் பெற முடியாத அவலநிலை என அரசு மருத்துவமனைகளின் தரம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருவதால் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லவே நோயாளிகளும் பொதுமக்களும் அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

ADVERTISEMENT

இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளைச் சரிசெய்து, அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பையும் மருத்துவச் சேவைகளின் தரத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், படிப்படியாக குறைக்கப்படவேண்டிய டாஸ்மாக்கை மேலும் மேம்படுத்தும் விதமாக அதன் கிடங்குகளுக்கான பராமரிப்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பதவி வகிப்பது மருத்துவத்துறைக்கா அல்லது டாஸ்மாக் துறைக்கா என்ற கேள்வி எழுகிறது.

எனவே, மருத்துவத்துறைக்கென உருவாக்கப்பட்ட மருத்துவப் பணிகள் கழகம் போன்ற நிறுவனங்களின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கும் வகையில், டாஸ்மாக் உள்ளிட்ட பிற துறைகள் சார்ந்த பணிகளை அவற்றின் மூலம் மேற்கொள்ளச் செய்யும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட்டு, மருத்துவப் பணிகள் கழகம் தனது அடிப்படைப் பொறுப்புகளான மருந்துக் கொள்முதல், தரப் பரிசோதனை மற்றும் விநியோகம் ஆகியவற்றில் முழுமையான கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel