4 மாதங்களுக்குள் CBSE-க்கு 3-வது தலைவர்… யார் இந்த மன்தீப் பண்டாரி?

Published On:

| By Mathi

CBSE Chairman-Mandeep K Bhandari

சிபிஎஸ்இ (CBSE) புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மன்தீப் கே. பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதற்காக On-Screen Marking (OSM) என்ற டிஜிட்டல் மதிப்பீட்டு முறை முழு அளவில் அறிமுகப்படுத்தபட்டது. மாணவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, கணினி மூலம் ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யும் வகையில் இந்த முறை செயல்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

விடைத்தாள் சர்ச்சை

தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் இந்த முறையில் பல்வேறு புகார்கள் எழுந்தன. விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகள் தெளிவாக இல்லாதது, பக்கங்கள் விடுபட்டதாகக் கூறப்பட்டது, மதிப்பெண் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டு நடைமுறைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் ஆகியவை மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தின. சில குற்றச்சாட்டுகளை சிபிஎஸ்இ மறுத்திருந்த நிலையிலும் மத்திய அரசு விசாரணைக்கும் உத்தரவிட்டது.

சிபிஎஸ்இ தலைவர்கள் அடுத்தடுத்து மாற்றம்

இந்த சர்ச்சைக்கு மத்தியில் சிபிஎஸ்இ தலைவராக இருந்த ராகுல் சிங் ஜூன் 2-ஆம் தேதி மாற்றப்பட்டார். அவருடன் அப்போதைய சிபிஎஸ்இ செயலாளர் ஹிமான்ஷு குப்தாவும் மாற்றப்பட்டார்.

ADVERTISEMENT

ராகுல் சிங்கைத் தொடர்ந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரியான லோகண்டே பிரசாந்த் சிதாராம் சிபிஎஸ்இ தலைவர் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக இருந்த அவர், சிபிஎஸ்இ தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது மன்தீப் கே. பண்டாரி புதிய சிபிஎஸ்இ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது ஜூன் 2 முதல் செப்டம்பர் 25 வரையிலான 4 மாதங்களுக்குள் சிபிஎஸ்இ-க்கு 3-வது தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

யார் இந்த மன்தீப் பண்டாரி?

மன்தீப் பண்டாரி, லூதியானாவின் தயானந்த் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து தங்கப் பதக்கம் பெற்றவர். பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று 2001-ஆம் ஆண்டு IAS அதிகாரியானார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் தனிச் செயலாளராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் முதன்மைச் செயலாளராகவும், ஸ்ரீ அமர்நாத்ஜி கோயில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்த நிலையில் தற்போது சிபிஎஸ்இ புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share