SDPI கட்சியில் இருந்து முன்னாள் மாநில தலைவர் நெல்லை முபாரக் விலகுவதாக அறிவித்துள்ளார்.
SDPI கட்சி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாட்டின் மாநிலத் தலைவராக இருந்த நெல்லை முபாரக் அவர்கள், தனது சொந்தக் காரணங்களால் அப்பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். அவரது ராஜினாமாவை கட்சியின் தேசிய செயலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, SDPI கட்சியின் தமிழ்நாடு மாநில செயல் தலைவராக (இடைக்கால தலைவராக) அச. உமர் பாரூக் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து நெல்லை முபாரக் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தாம் SDPI கட்சியில் இருந்தே விலகுவதாக தெரிவித்துள்ளார்.

நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: நான் கடந்த 31 ஆண்டுகளாக இறைநாட்டப்படி பொதுவாழ்வில் பயணித்து வருகிறேன். அதில் எனது அரசியல் பயணமாக, SDPI கட்சியின் தமிழக முதல் உறுப்பினராகவும், அமைப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கி, முதல் மாநில நிர்வாகப் பொதுச்செயலாளர், மாநிலத் துணைத்தலைவர், அதனைத் தொடர்ந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாநிலத் தலைவர், தேசியச் செயற்குழு உறுப்பினர் மற்றும் தேசியச் செயலக (Secretariat) உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை என்னால் இயன்றவரை சுமந்தேன். இறைநாட்டப்படி மனசாட்சியோடு செயல்பட்டேன்.
ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு நடந்த சில கசப்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து, பலவிதமான அவதூறுகள் தேவையற்ற வகையில் பரவி வருகின்றன. இதனால் மிகுந்த மனவேதனை அடைகிறேன்.
எனவே, இந்தக் கடினமான, கசப்பான சூழலில் தொடர்ந்து என்னால் SDPI கட்சியில் பயணிக்க இயலாத நிலையில் உள்ளேன். ஆகவே, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் இத்துடன் விலகிக் கொள்கிறேன்.
இதுகாறும் எனக்கு அனைத்து வகையிலும் உதவிய, ஒத்துழைப்பு நல்கிய எனது சக மாநிலச் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தேசியச் செயற்குழு உறுப்பினர்களுக்கும், அண்டை மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்டம் முதல் கிளை வரையிலான நிர்வாகிகளுக்கும், துணை அமைப்புகளின் உறவுகளுக்கும் மற்றும் என் இதயம் நிறைந்து நிற்கின்ற சகோதர சகோதரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த ஆயிரமாயிரம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடைந்த, கனத்த இதயத்துடன் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். அல்லாஹ் நம் அனைவரின் நற்பணிகளையும் அங்கீகரிப்பானாக. இவ்வாறு நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.









