- ரவிக்குமார்
மரண தண்டனைக்கு உலகளாவிய தடை விதிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுக்கு எதிராக இந்தியா வாக்களித்திருக்கிறது. மரண தண்டனை குறித்த அதன் நீண்டகால நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகவே இது உள்ளது. மரண தண்டனை என்பது நாட்டின் இறையாண்மை சார்ந்த முடிவு என்றும், இந்தியாவின் குற்றவியல் நீதிமுறையில் அது அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் ஒன்றிய அரசு இதனை நியாயப்படுத்தி வருகிறது. உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள ‘அரிதிலும் அரிதான’ (Rarest of Rare) கோட்பாடு, அமர்வு நீதிமன்றம் வழங்கும் மரண தண்டனை உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளிட்ட நீதித்துறைப் பாதுகாப்புகளும் இதற்கான நியாயங்களாக ஒன்றிய அரசால் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், அடிப்படையான கேள்வி ஒன்றை எழுப்ப வேண்டியுள்ளது: தவறுகள் நிகழ வாய்ப்புள்ள மனிதர்களால் நடத்தப்படும் குற்றவியல் நீதிபரிபாலன முறைக்கு, ஓர் உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை வழங்குவது எந்த அளவுக்கு நியாயமானது? விசாரணை, சாட்சியம், வழக்குத் தொடர்தல், தீர்ப்பளித்தல் ஆகிய ஒவ்வொரு கட்டத்திலும் தவறுகள் நிகழக்கூடிய ஒரு அமைப்பில், மரண தண்டனையைத் திரும்பப் பெற முடியாத இறுதித் தண்டனையாக வைத்திருப்பது நீதியின் அடிப்படைக் கோட்பாட்டுக்கே முரணானது. ஒரு நிரபராதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டால், பின்னர் அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டாலும் அவருடைய உயிரை மீட்டுத் தர முடியாது.

மரண தண்டனை குறித்த இந்த விவாதத்தைப் புரிந்துகொள்வதற்கு பிரெஞ்சுத் தத்துவஞானி மிஷேல் ஃபூக்கோவின் அதிகாரம் மற்றும் தண்டனை குறித்த ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. தனது புகழ்பெற்ற Discipline and Punish: The Birth of the Prison (1975) என்ற நூலில், மரண தண்டனையை வெறுமனே ஒரு குற்றத்துக்கான தண்டனையாக அவர் அணுகவில்லை. அது இறையாண்மை அதிகாரம் தன்னுடைய வலிமையைப் பொதுவெளியில் வெளிப்படுத்தும் அரசியல் நடவடிக்கை என்பதாக அவர் விளக்குகிறார். மன்னராட்சிக் காலத்தில், மன்னரின் சட்டத்தை மீறுவது மன்னரின் அதிகாரத்தையே எதிர்ப்பதாகக் கருதப்பட்டது. எனவே, குற்றவாளியின் உடலைச் சிதைத்து, பொதுமக்களின் முன்னிலையில் கொலை செய்வதன் மூலம் அரச அதிகாரம் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டியது. மரண தண்டனை என்பது குற்றவாளியைத் திருத்துவதற்கான நடவடிக்கையாக இல்லாமல், அரசின் இறையாண்மையை வெளிப்படுத்தும் அதிகாரச் செயல்பாடாக இருந்தது என்பதே ஃபூக்கோவின் கருத்து.
ஃபூக்கோவின் ஆய்வில் முக்கியமான மற்றொரு அம்சம், நவீன அரசின் தண்டனை முறையில் ஏற்பட்ட மாற்றமாகும். மன்னராட்சிக் காலத்தில் தண்டனை என்பது உடலைத் தண்டிப்பதன் மூலம் அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஆனால் நவீன அரசில் சிறைச்சாலை, கண்காணிப்பு, ஒழுங்குபடுத்துதல், உளவியல் மதிப்பீடு போன்றவற்றின் மூலம் மனிதர்களின் நடத்தையை மாற்றியமைக்கும் அதிகாரம் வளர்ந்தது. இதனை அவர் ‘ஒழுங்குபடுத்தலும் தண்டித்தலும்’ (Discipline and Punish) என்ற நூலில் விரிவாக ஆராய்கிறார். இதிலிருந்து மரண தண்டனை குறித்த ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. குற்றங்களைத் தடுப்பதும், சமூகத்தைப் பாதுகாப்பதும் அரசின் நோக்கமென்றால், ஒருவரின் உயிரைப் பறிப்பதைவிட அவரது நடத்தையை மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவது நவீன தண்டனை முறையின் நோக்கமாக இருக்க வேண்டாமா? அரசின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக மனித உயிரைப் பலியிடுவது நீதியின் நோக்கமாக இருக்க முடியாது.

இந்தியாவின் புள்ளிவிவரங்களே மரண தண்டனையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஸ்கொயர் சர்க்கிள் கிளினிக் (முன்னர் Project 39A) வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மரண தண்டனை குறித்த ஆய்வறிக்கையின்படி, 2016 முதல் 2025 வரையிலான பத்தாண்டுகளில் விசாரணை நீதிமன்றங்கள் 1,279 பேருக்கு எதிராக 1,310 மரண தண்டனைத் தீர்ப்புகளை வழங்கியுள்ளன. ஆனால், உயர் நீதிமன்றங்கள் விசாரித்த 1,085 மரண தண்டனைத் தீர்ப்புகளில் 106 மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. 376 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்; 515 பேரின் மரண தண்டனைகள் ஆயுள் தண்டனையாகவோ அல்லது வேறு தண்டனைகளாகவோ குறைக்கப்பட்டுள்ளன. அதாவது, விசாரணை நீதிமன்றங்கள் வழங்கிய மரண தண்டனைகளில் பெரும்பாலானவை மேல்முறையீட்டு நிலையில் நிலைத்து நிற்கவில்லை.

கவலைக்குரிய செய்தி என்னவென்றால், 2016 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்ட 153 பேரின் வழக்குகளை விசாரித்தபோது, அவர்களில் 38 பேரை விடுதலை செய்துள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும் 10 பேர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2023 முதல் 2025 வரையிலான மூன்று ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் எந்தவொரு மரண தண்டனையையும் உறுதி செய்யவில்லை. 2025 டிசம்பர் 31 நிலவரப்படி, இந்தியாவில் 574 பேர் மரண தண்டனைக் கைதிகளாக இருந்தனர். அவர்களில் 550 பேர் ஆண்கள்; 24 பேர் பெண்கள். இது 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக அதிகமான எண்ணிக்கையாகும். 2025ஆம் ஆண்டில் மட்டும் விசாரணை நீதிமன்றங்கள் 128 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளன.
இந்தப் புள்ளிவிவரங்கள் இரண்டு முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. முதலாவதாக, விசாரணை நீதிமன்றங்கள் வழங்கும் மரண தண்டனைத் தீர்ப்புகள் பலவற்றின் நம்பகத்தன்மை மேல்முறையீட்டு விசாரணையில் கேள்விக்குள்ளாகின்றன. இரண்டாவதாக, மரண தண்டனை உறுதி செய்யப்படுவதற்காகக் காத்திருக்கும் காலத்திலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டியிருக்கிறது. சிலர் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகவும், சிலர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகவும் மரண தண்டனைக் கைதிகளாக வாழ்ந்திருக்கின்றனர். தண்டனை பின்னர் ரத்து செய்யப்பட்டாலும், அவர்கள் அனுபவித்த மன உளைச்சலையும் இழந்த வாழ்க்கையையும் ஈடுசெய்ய முடியாது.

நீதிபதி ஏ.பி.ஷா
மரண தண்டனைக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் முக்கியமான வாதம், அது குற்றங்களைத் தடுக்கும் என்பதாகும். குறிப்பாக, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கொடூரமான குற்றங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கினால் மற்றவர்கள் அத்தகைய குற்றங்களைச் செய்ய அஞ்சுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த வாதத்திற்கு உறுதியான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. 2015ஆம் ஆண்டு நீதிபதி ஏ.பி. ஷா தலைமையில் செயல்பட்ட இந்திய சட்ட ஆணையம் தனது 262வது அறிக்கையில், மரண தண்டனை ஆயுள் தண்டனையைவிடக் கூடுதலான தடுப்பு விளைவைக் கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டது. மேலும், மரண தண்டனை அரசியலமைப்பு அங்கீகரிக்கும் தண்டனையியல் நோக்கங்களை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தது. பயங்கரவாதம் மற்றும் நாட்டுக்கு எதிராகப் போர் தொடுத்தல் தொடர்பான குற்றங்களைத் தவிர மற்ற அனைத்துக் குற்றங்களுக்கும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
இந்தியாவில் மரண தண்டனையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒன்றிய பாஜக அரசின் அரசியல் நோக்கத்தை நாம் கவனிக்க வேண்டும். 2012ஆம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் நாளன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் அதற்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. எனினும், பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டத்தின் மூலம் மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களின் வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பாலியல் வன்முறை தொடர்பான குற்றங்களில் மரண தண்டனையை முன்வைப்பது பொதுமக்களின் கோபத்தைத் தணிப்பதற்கான அரசியல் உத்தியாக மாறியுள்ளது. மாநில அரசுகள் என்கவுண்டர் கொலைகளை இதற்காகப் பயன்படுத்துவது இதைவிடவும் மோசமான அணுகுமுறையாகும். குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து தடுப்பதற்குப் பதிலாக, கடுமையான தண்டனைகளை அறிவிப்பதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற அரசு முயல்கிறது. மோசமான காவல் புலனாய்வு, சாட்சிகளுக்குப் பாதுகாப்பின்மை, குறைந்த குற்றத் தண்டனை விகிதம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் மரண தண்டனையை விரிவுபடுத்துவது குற்றத் தடுப்புக்கு உதவாது.

உலகளாவிய போக்கைப் பார்க்கும்போதும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு வலுப்பெற்று வருவதைக் காணலாம். அம்னஸ்டி இன்டர்நேஷனலின் 2025ஆம் ஆண்டு அறிக்கையின்படி, அந்த ஆண்டில் 17 நாடுகளில் குறைந்தது 2,707 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டின் 1,518 என்ற எண்ணிக்கையைவிட 78 விழுக்காடு அதிகம். இந்த எண்ணிக்கையில் சீனாவில் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கான மரண தண்டனைகள் சேர்க்கப்படவில்லை. அதேவேளையில், 2025 இறுதியில் 113 நாடுகள் மரண தண்டனையைச் சட்டப்படி முழுமையாக ஒழித்திருந்தன; மொத்தம் 145 நாடுகள் சட்டரீதியாகவோ நடைமுறையிலோ அதனை ஒழித்திருந்தன. இதற்கு மாறாக, மரண தண்டனையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பது கண்டனத்துக்குரியது.
மரண தண்டனை என்பது குற்றத்துக்கான தண்டனை மட்டுமல்ல; அரசு ஒரு மனிதனின் உயிரை முடிவுக்குக் கொண்டுவரும் அதிகாரத்தைத் தனக்குள் வைத்திருப்பதன் வெளிப்பாடுமாகும் என்ற ஃபூக்கோவின் அதிகாரப் பகுப்பாய்வு இங்கு மீண்டும் நினைவுகூரத்தக்கது. குற்றவாளியின் உயிரைப் பறிப்பதன் மூலம் நீதி நிலைநாட்டப்படுகிறது என்று கூறுவது, அரசின் தண்டனை அதிகாரத்தையும் நீதியையும் ஒன்றாகக் குழப்புவதாகும். நீதியின் நோக்கம் பழிவாங்குவது அல்ல; குற்றங்களைத் தடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதும், சமூகத்தைப் பாதுகாப்பதற்குத்தான் . இதற்கு காவல்துறை சீர்திருத்தம், திறமையானப் புலனாய்வு, சாட்சிகளுக்குப் பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, அனைவருக்கும் சமமான சட்ட உதவி ஆகியவையே முக்கியமானவை.

எனவே, இந்திய ஒன்றிய அரசு உடனடியாக மரண தண்டனைகளை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் வழக்குகள், விசாரணை நடைமுறைகள், சிறைச்சாலைகளில் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை ஆகியவை குறித்து விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். மரண தண்டனை விதிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்குவதையே இலக்காகக் கொள்ள வேண்டும். ஒரு ஜனநாயக அரசின் பெருமை, எத்தனை பேரைக் கொல்கிறது என்பதில் இல்லை; எத்தனை குற்றங்களைத் தடுக்கிறது, எத்தனை நிரபராதிகளைக் காப்பாற்றுகிறது என்பதில்தான் இருக்கிறது.









