இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையக் குற்றவாளிகளால் திருடப்பட்டதாக வந்த செய்தி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சுமார் 3.75 லட்சம் பதிவுகள் டார்க் வெப்பில் வெளியாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எங்கே நடந்தது, எப்போது நடந்தது?
மும்பையின் CBD பெலாப்பூரில் உள்ள எஸ்பிஐ குளோபல் ஐடி மையத்தின் ஒரு சர்வரில் அடையாளம் தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து தகவல்களைத் திருடியதாகச் சொல்லப்படுகிறது. அக்டோபர் 10 முதல் 15-ம் தேதிக்குள் இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘Siriusim’ என்ற ஹேக்கர் குழுவோடு தொடர்புடையவர்கள் இதன் பின்னால் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
என்னென்ன தகவல்கள் போயிருக்கலாம்?
சுமார் 32 CSV கோப்புகள், ஆயிரக்கணக்கான PDF ஆவணங்கள் திருடப்பட்டதாகச் சொல்கிறார்கள். அவற்றில் இவை இருக்கலாம்:
- வாடிக்கையாளர்களின் பெயர், மொபைல் எண்
- பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி
- வங்கிக் கணக்கு தொடர்பான அடையாள விவரங்கள்
- கடன் விண்ணப்பத் தகவல்கள்
டார்க் வெப்பில் கிடைத்த சுமார் 3.75 லட்சம் பதிவுகளைப் பரிசோதித்ததில், 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாள விவரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் புகார்
இது தொடர்பாக நவம்பர் 12 அன்று எஸ்பிஐ நிர்வாகம் காவல்துறையில் புகார் கொடுத்தது. அதையடுத்து, CBD பெலாப்பூர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. திருடப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக வங்கி சொல்கிறது. ஆனால், அவை ஏற்கெனவே வேறு ஆட்களிடம் பகிரப்பட்டிருக்கலாம் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
வாடிக்கையாளர்கள் என்ன செய்யலாம்?
வங்கிச் சேவைகளுக்கோ வாடிக்கையாளர்களின் பணத்துக்கோ இதனால் நேரடிப் பாதிப்பு இல்லை என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது:
- உங்கள் வங்கிக் கணக்குப் பரிவர்த்தனைகளை அவ்வப்போது பாருங்கள்.
- தெரியாத அழைப்புகள், சந்தேகமான குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் இணைப்புகளைத் திறக்காதீர்கள்.
- OTP, ஏடிஎம் பின், இணைய வங்கிக் கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் சொல்லாதீர்கள்.









