ஜெம் வீரமணி வீடியோக்கள்… டிஆர்பி ரேட்டிங்… ஊடக விவாதங்களுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Published On:

| By Kavi

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான எந்த ஒரு வீடியோவையும் ஊடகங்கள் வெளியிடவோ அல்லது ஒளிபரப்பவோ கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த சூழலில் அவர் தொடர்பான வீடியோவும் சில புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

இந்த வழக்கில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதுபோன்று தன்னார்வ தொண்டு நிறுவனமான துளிர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அதில் குழந்தைகளைச் சார்ந்த பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான காணொளிகள், பரப்பப்படுவதையும் வெளியிடுவதையும் உடனடியாக தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் மற்றும் விவரங்களை பாதுகாக்குமாறு மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று (செப்டம்பர் 25) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, :இத்தகைய வீடியோ ஆதாரங்களை வெளியிடுவது பாதிக்கப்பட்ட பிற குழந்தைகளிடையே பெரிய பயத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தும். இதனால் அவர்கள் விசாரணைக்கு வர அஞ்சுவார்கள்” என்று வாய்மொழியாக கருத்து தெரிவித்தார்.

”இந்த விவகாரத்தில் ஊடகங்களும் பத்திரிகைகளும், பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். வழக்கு தொடர்பான பாலியல் வீடியோக்களை ஒளிபரப்பாமல் விவாதங்களை நடத்த வேண்டும். வாழ்க்கையில் டிஆர்பி ரேட்டிங்கை விட சில விஷயங்கள் மிகவும் முக்கியம்.

இந்த விவகாரத்தின் தீவிரத்தையும் உணர்வு பூர்வ தன்மையையும் நீங்கள் கவனிக்க மாட்டீர்களா?

இந்த விவகாரம் குறித்து நீங்கள் தாராளமாக விவாதித்துக் கொள்ளலாம், அது விவாதிக்கப்பட வேண்டியது தான் என்றாலும் அந்த வீடியோக்களை பரப்பாமல் உங்களால் விவாதிக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பினார்.

அவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர ஊடகங்கள் செய்யக்கூடாது. ஊடக விசாரணை நடத்துவதற்கு இங்கு அனுமதி அளிக்க முடியாது.

குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கட்டும். தயவு செய்து இந்த விஷயத்தில் கொஞ்சமாவது பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.

இந்த வழக்கின் விசாரணை தற்போது மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே கண்டறியப்பட்ட குழந்தைகளை தவிர மேலும் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்தும் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

இத்தகைய முக்கியமான கட்டத்தில் விசாரணையின் நுணுக்கமான விவரங்களோடு விவாதங்களை நடத்துவதும் புகைப்படங்களை பரப்பி கொண்டிருப்பதும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் காவல்துறைக்கு வாக்குமூலம் அளிக்க முன் வராமல் போவதற்கான சூழலை உருவாக்கி விடும்.

2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது இந்திய பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விபரங்களை ஊடகங்கள் தொடர்ச்சியாக நேரலை செய்ததால் பயங்கரவாதிகள் தப்பிச் செல்ல அதுவே உதவியாக அமைந்தது” என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில் இந்த வழக்கை விசாரிக்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு வாரம் ஒருமுறை செய்தி குறிப்பு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி இதன் மூலம் வழக்கில் காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share