வண்டலூர் மாணவி விவகாரத்தில் காவல்துறை விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

வண்டலூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அத்தகைய சம்பவம் எதுவும் நடந்ததாக விசாரணையில் தெரியவில்லை என தாம்பரம் மாநகரக் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகையில் உள்ள அரசுப் பள்ளியில் மர்ம நபர்கள் சிலர் பள்ளிக்குள் புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவர் வழியாக எகிறி குதித்த ஒரு கும்பல், மாணவிக்கு கைக்குட்டை மூலமாக மயக்க மருந்து கொடுத்து கழிவறையில் வைத்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இது குறித்து தாம்பரம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நேற்று (24.09.2026) குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பானதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டது. புகார் கிடைத்த உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, மூத்த பெண் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில், பெண் காவல் ஆய்வாளர் மூலம் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது. தொடர்புடைய அனைத்து ஆதாரங்களும் உடனடியாக சேகரிக்கப்பட்டு கவனமாக சரிபார்க்கப்பட்டன. பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சாட்சிகளிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. கிடைக்கப்பெற்ற பிற அறிவியல் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும். சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இந்நிலையில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட தகவல்களை கருத்தில் கொண்டு, குழந்தையின் நலன் கருதி, சரிபார்க்கப்படாத தகவல்களைப் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share