‘மனைவி கொடுமை’யால் விவாகரத்து கேட்ட கணவர்… ‘House Husband’ பற்றி ஜி.ஆர். சுவாமிநாதன் பெஞ்ச் கருத்து – பரபர விவாதம்!

Published On:

| By Mathi

House Husband-Madurai High Court

பெண்கள் படித்து, வேலைக்குச் சென்று தங்களது தொழில் வாழ்க்கையில் முன்னேறி வரும் நிலையில், குடும்பத்தை கவனித்துக்கொள்வது பெண்களின் பொறுப்பு மட்டும்தானா? ‘House Wife’ இருக்க முடியும் என்றால் ‘House Husband’-ம் இருக்க முடியும்; இது புதிய இயல்பாக மாறட்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமர்வு தெரிவித்துள்ளது.

என்ன வழக்கு?

கணவன், மனைவி இருவருக்கும் 2011-ம் ஆண்டு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. 2012-ல் முதல் ஆண் குழந்தையும், 2016-ல் இரண்டாவது ஆண் குழந்தையும் பிறந்தனர்.

ADVERTISEMENT

ஏற்கெனவே MD முடித்திருந்த கணவர், திருமணத்துக்குப் பிறகு DM Cardiology படிப்பைத் தொடர்ந்தார். அப்போது மனைவி குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் தங்கினார். கணவர் மாதம் ஒருமுறை வந்து மனைவி, குழந்தையைப் பார்த்துச் சென்றார்.

2017-ல் DM Cardiology முடித்த பிறகு, FNB (Interventional Cardiology) படிப்பைத் தொடர கணவர் விரும்பினார். இந்தக் காலத்திலும் மனைவி இரண்டு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்தார்.

ADVERTISEMENT

கொரோனா காலத்தில் கணவரும் மனைவியின் பெற்றோர் வீட்டில் வந்து தங்கினார். பின்னர் தனது மருத்துவ தொழிலில் முன்னேறிய கணவர், மாமனார் வீட்டிலிருந்து வெளியேறி தனியாக வசிக்க விரும்பினார். அதற்கு மனைவி சம்மதிக்காததால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் உடல் ரீதியான மோதலும் ஏற்பட்டது.

இதையடுத்து மனைவி தாம்பத்திய உரிமையை மீட்டுத் தரக் கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால் மனைவி கொடுமைப்படுத்தியதாகக் கூறி கணவர் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

குடும்பநல நீதிமன்றம் இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்த நிலையில், இருவருமே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமர்வு தெரிவித்த முக்கிய கருத்துகள்:

கணவரின் ‘ஆண் அகங்காரம்’

கணவர் தனது படிப்புகளை முடிக்கும் வரை மாமனார் வீட்டில் இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் வெற்றிகரமான தொழில்முறை வல்லுநராக உயர்ந்த பிறகு அதே ஏற்பாடு அவருக்கு ஏற்றதாக இல்லாமல் போனது.

அப்போது கணவரின் “male ego asserted itself in all its glory” – ஆண் அகங்காரம் முழுமையாக வெளிப்பட்டது.

கணவர் தனது திறமைகளை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தியபோது, மனைவியின் திறமைகள் மழுங்கிப் போயின. குடும்பத்தைக் கவனித்ததுடன் இரண்டு குழந்தைகளையும் வளர்த்த மனைவியின் பங்களிப்பை கணவர் அங்கீகரித்திருக்க வேண்டும்.

பணிபுரியும் பெண்கள் – திருமணம்

பாரம்பரியமாக குடும்பத்துக்குத் தேவையான பொருளாதார வளத்தை ஏற்படுத்துவது கணவரின் பொறுப்பாகவும், வீட்டையும் குடும்பத்தையும் கவனிப்பது மனைவியின் பொறுப்பாகவும் இருந்து வந்தது. இந்த இரண்டு பணிகளும் சமமான மரியாதைக்குரியவை.

கடந்த அரை நூற்றாண்டில் இந்த நிலை மாறியுள்ளது. பெண்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர். இந்த மாற்றம் குறிப்பாக IT துறை மற்றும் பிற தொழில்முறைப் பணிகளில் குடும்ப உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பணிபுரியும் பெண்களுக்கு திருமணம் எல்லா வகையிலும் சாதகமானதாக அமையவில்லை. திருமணம் தங்களது தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகக் கருதும் பெண்கள், திருமணத்தைத் தவிர்க்கத் தேர்வு செய்கிறார்கள். திருமணம் செய்துகொள்ளாத பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

‘House Husband’ புதிய நடைமுறையாகட்டும்

இந்த நிலைக்கு ஒரு தீர்வாக கணவர்கள் Homemaker ஆக இருப்பதைத் தேர்வு செய்யலாம்.

“House Wife இருக்க முடியும் என்றால் House Husband-ம் இருக்க முடியும். இது புதிய நடைமுறையாகட்டும்”.

இது திருமணம் மற்றும் குடும்ப அமைப்பைப் பாதுகாக்க உதவும். Homemaker என்பது பாலினம் சாராத சொல். Oxford Advanced Learner’s Dictionary-யில் வீட்டையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளும் நபர் என்று Homemaker-க்கு பொருள் கூறப்பட்டுள்ளது.

இல்லத்தரசி Homemaker ஆக மேற்கொள்ளும் பணிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார மதிப்பு உள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

‘Just a House Wife’

முன்பு பெண்கள் தங்களை House Wife என்று இயல்பாக அறிமுகப்படுத்திக் கொண்டனர். தற்போது சில பெண்கள் “Just a House Wife” என்று சங்கடத்துடன் கூறுகின்றனர். அதற்காக சங்கடப்படுவதற்கு எதுவும் இல்லை.

(Louisa May Alcott எழுதிய Little Women நூலின் தலைப்பைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இல்லத்தரசிகள் “Little Women” அல்ல என்றனர். நவீன மேற்கத்திய சமூகங்களைப் போல அல்லாமல், இந்திய கலாசாரத்தில் தனிநபரை விட குடும்பமே அடிப்படை என்றும் தெரிவித்தனர்.)

ரூ.2.5 கோடி – விவாகரத்து

கணவன், மனைவி இருவரிடமும் நீதிமன்றம் நேரடியாகப் பேசியது. அவர்களது திருமண உறவு மீண்டும் சரிசெய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்டதாக முடிவுக்கு வந்தது.

மனைவி ஆதரவற்ற நிலையில் விடப்படக்கூடாது என்பதற்காக நியாயமான தொகையை வழங்குமாறு கணவரிடம் கேட்கப்பட்டது. இதையடுத்து கணவர் ரூ.2.5 கோடி வழங்க ஒப்புக்கொண்டார். மனைவியும் அதனை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி மனைவியின் பெயரில் ரூ.1.5 கோடியும், இரண்டு மைனர் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.50 லட்சமும் டெபாசிட் செய்ய வேண்டும். இதை கணவர் செய்து முடித்த பின்னர் விவாகரத்து அமலுக்கு வரும்.

சமூக வலைதளங்களில் விவாதம்

நீதிமன்றத்தின் ‘House Husband’ குறித்த கருத்து சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளர் விநாயக முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அண்மைக்காலமாக ‘House Husband’ எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் ”இதில் ஒருவர்கூட” இந்த வேலையை விரும்பி ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. ஒன்று, அவர்களுக்கு வேலை போயிருக்கும்; அல்லது வேலை கிடைக்காமல் வேறு வழியின்றி ‘House Husband’ ஆக இருக்கிறார்கள்.

மனைவி குடும்பத்தின் பொருளாதாரத்தைக் கவனிக்க, கணவர் வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்கிறார். ஆனால் இது கொஞ்சம் கத்தி மேல் நடப்பது போன்ற விஷயம். ஒருவருக்குத் தாழ்வு மனப்பான்மையோ, இன்னொருவருக்கு ஆதிக்க உணர்வோ ஏற்பட்டாலும் குடும்பத்தில் வெட்டுக்குத்து நடக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

விநாயக முருகனின் பதிவில் கருத்து தெரிவித்துள்ள Karthikeyan Yeskha, பெண்கள் அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெறும்போது, அதற்கேற்ப புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

பெண்கள் வேலைக்குச் செல்வதால் எதிர்காலத்தில் ஆண்கள் ‘House Husband’ ஆக இருக்கும் குடும்பங்கள் அதிகரிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், “பெண்கள் தங்களைவிட அதிகம் சம்பாதிக்கும் கணவரை எதிர்பார்க்கும் சமூகச் சூழலில், வேலைக்குச் செல்லாத கணவரை ஏற்றுக்கொண்டு குடும்பத்தின் பொருளாதாரப் பொறுப்பை முழுமையாக ஏற்க பெண்கள் தயாராக இருப்பார்களா?” என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

வேலைவாய்ப்புகள் குறைவது, வெளிமாநிலத் தொழிலாளர்களின் வருகை உள்ளிட்டவற்றையும் இதனுடன் இணைத்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள அவர், இவற்றை உறுதிப்படுத்துவதற்கான தரவுகள் தன்னிடம் இல்லை என்றும், இவை தனது தனிப்பட்ட observations மற்றும் random thoughts மட்டுமே என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேபோல் Anjani Putra என்ற எக்ஸ் பயனர், “House Husband-களாக இருப்பவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஏற்கெனவே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். ஆனால் அவர்களது மனைவிகள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share