’ஜெம் வீரமணி’ விவகாரம்: மின்னம்பலம் சொன்ன ‘தென் மாவட்ட தலைவர்’.. ஜான் பாண்டியன்- ரூ.20 கோடி பேரம் பற்றி ஓபன் டாக்!

Published On:

| By Mathi

Jem Veeramani Case-John Pandian

சிறுமிகளை பாலியல் ரீதியாக சீரழித்த தொழிலதிபர் ’ஜெம் வீரமணி’யிடம் அவருக்கு நெருக்கமான சாந்தியும் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமாரும் ரூ.20 கோடி பணம் பறிக்க முயன்றதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

நமது மின்னம்பலத்தில் ஆகஸ்ட் 30-ந் தேதி டிஜிட்டல் திண்ணையில் ‘ஜெம்’ வீரமணி வழக்கின் பின்னணி குறித்த புதிய தகவல்களை முதன் முதலில் வெளியிட்டிருந்தோம். அந்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதை தொடர்புடையவர்களே உறுதிப்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

“டிஜிட்டல் திண்ணை: சிறுமிகளை சீரழித்த ‘ஜெம் வீரமணி’ சிக்கியது எப்படி? தலையிட்ட ‘தலைகள்’.. தப்ப விட்ட ‘கறுப்பு ஆடுகள்’? பரபர தகவல்கள்!” என்ற தலைப்பில் நாம் வெளியிட்ட செய்தியில் இடம் பெற்றிருந்ததாவது:

”வீரமணிகிட்ட சாந்தி தம்பதி ரூ50 கோடி கேட்டு மிரட்டுனாங்க.. இதுக்கு ஜெம் வீரமணி மறுத்துட்டாரு.. இதுல பிரச்சனையாகிடுது..

ADVERTISEMENT

இங்கிருந்து பிரச்சனை வேறமாதிரி டைவர்சனாகுது.. சாந்தி தம்பதி இந்த விவகாரத்தை காங்கிரஸுல இருந்த ரஞ்சன்கிட்ட கொண்டு போறாங்க.. இவர் காங்கிரஸ் நிர்வாகி.

சாந்தி தரப்புல ஜெம் வீரமணிகிட்ட ரஞ்சன் பேச்சுவார்த்தை நடத்தினாரு.. அந்த பேச்சுவார்த்தையில ரூ.5 கோடிதான் தர முடியும்னு ஜெம் வீரமணி சொன்னார்.. ஆனா சாந்தி தம்பதி இதை ஏத்துக்கலை..

ADVERTISEMENT

இந்த நிலைமையில இந்த வீடியோவை ஒரு ஜேர்னலிஸ்ட் பார்க்க, அது அப்படியே வெளியே பரவலா பேசப்பட ஆரம்பிச்சது.. திடீர்னு இந்த பேச்சும் நின்னு போச்சு.

இதுக்கு இடையில ஜெம் வீரமணி, தென் மாவட்ட ஜாதி கட்சித் தலைவர்கிட்ட போய், “இந்த மாதிரி பிரச்சனை.. இவ்வளவு பணம் கேட்கிறாங்க.. இதுல நீங்க தலையிட்டு முடிச்சு கொடுங்க”ன்னு கேட்டார். அந்த தலைவரும் ரஞ்சன் கிட்ட பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார்.. மிரட்டியும் கூட பார்த்தார்..

ஆனால் சாந்தி- மகேந்திர சிம்கன் தம்பதி ரூ.50 கோடி டிமாண்ட்ல இருந்து இறங்கி வரவே இல்லை.. அந்த ஜாதி கட்சித் தலைவரின் மிரட்டலுக்கும் அவங்க பயப்படலை..” என எழுதி இருந்தோம்.

காங்கிரஸ் ரஞ்சன் பேட்டி

நாம் குறிப்பிட்டிருந்த காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன், ‘தி இந்து’ நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் சாந்தி விவகாரம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். தென் மாவட்ட ஜாதி தலைவர் ஒருவர் தலையிட்டது உண்மை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.

நாம் குறிப்பிட்ட தென் மாவட்ட தலைவர் ஜான் பாண்டியன்

இந்நிலையில் அந்த தென் மாவட்ட ஜாதி தலைவர் ‘ஜான் பாண்டியன்’ (தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர்) என்று புதிய தமிழகம் கட்சியினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதன் பின்னர் ரஞ்சன் குமாரும், “ஜான் பாண்டியன்தான்” தலையிட்டார் என ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

இந்நிலையில் ‘ஜெம் வீரமணி’ விவகாரம் குறித்து ஜான் பாண்டியன் இன்று (செப்டம்பர் 24) திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு விரிவான பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் எழுதி இருந்ததைப் போல ஜெம் வீரமணியிடம் பேரம் பேசப்பட்டது என்பதையும் அவரே உறுதி செய்துள்ளார்.

ஜெம் வீரமணி- சாந்தி- ரஞ்சன்.. என்ன நடந்தது? ஜான் பாண்டியன் விளக்கம்

நெல்லையில் ஜான் பாண்டியன் அளித்த பேட்டி: வீரமணியை எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் தொழிலதிபர் என்ற முறையில்தான் அவர் எனக்குப் பழக்கம். அதைத்தவிர அவருடைய தனிப்பட்ட விவகாரங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

ஒருவருடைய தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நமக்கு எப்படித் தெரியும்? அவர் தனது தனிப்பட்ட விஷயங்களை என்னிடம் பகிர்ந்துகொள்வதற்கும் வாய்ப்பில்லை. அவருடன் எனக்கு சட்டவிரோதமான தொடர்போ, தனிப்பட்ட தொடர்போ எதுவும் கிடையாது.

2024, 2025 காலகட்டத்திலேயே அவருடனான தொடர்பு நின்றுவிட்டது. அதன்பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. அவரை எனது நண்பர் என்று சொல்வதைவிட, தொழிலதிபர் என்ற முறையில் எனக்குப் பழக்கம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

இந்த விவகாரம் தொடர்பாக வீரமணியுடன் நான் எதுவும் பேசியதில்லை. தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறுவதும் உண்மையல்ல.

ஒரு அரசியல் தலைவர் மூலமாகத்தான் ரஞ்சன் என்னைத் தொடர்புகொண்டார். அந்த அரசியல் தலைவரின் பெயரை நாகரிகம் கருதி நான் சொல்ல விரும்பவில்லை.

அந்த அரசியல் தலைவர், “ரஞ்சன் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்” என்று என்னிடம் அனுமதி கேட்டார். நான் வரச் சொல்லுங்கள் என்றேன். அதன் பிறகு ரஞ்சன் என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்தார். அப்போது என்னுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

அதன்பிறகு, “சாந்தி என்ற ஒரு மேடம் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்” என்று ரஞ்சன் என்னிடம் கூறினார். “என்ன விஷயம்?” என்று கேட்டபோது, அவர் தனிப்பட்ட முறையில் பேச விரும்புவதாகக் கூறினார்.

ரூ.20 கோடி பேரம்

அதன்படி ஒரு நாள் முடிவு செய்யப்பட்டு, தாஜ் ஹோட்டலில் சாந்தியை ரஞ்சன் அழைத்து வந்தார். ரூ.20 கோடி வாங்கித் தர வேண்டும் என்று கேட்டார்கள்

அந்தச் சந்திப்பின்போது சாந்தி, வீரமணி தொடர்பாக தனக்கு ஏற்பட்டதாகக் கூறிய பிரச்சினைகளை என்னிடம் தெரிவித்தார். அப்போது, வீரமணியிடமிருந்து தனக்கு ரூ.20 கோடி வாங்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை சாந்தியும் ரஞ்சனும் என்னிடம் வைத்தார்கள்.

இதுபோன்ற விவகாரங்களில் நான் தலையிட மாட்டேன் என்று அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டேன். “இந்த மாதிரியான வேலைகளை நான் செய்ய மாட்டேன்” என்று சொல்லிவிட்டு அந்த விவகாரத்திலிருந்து விலகிவிட்டேன்.

அத்துடன் அந்த விவகாரம் முடிந்துவிட்டது. அதன் பிறகு ரஞ்சனுடனோ, சாந்தியுடனோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. தொலைபேசி அழைப்புகளோ, பேச்சுவார்த்தைகளோ, பழக்கமோ எதுவும் இல்லை.

இந்தச் சம்பவம் நடந்து ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், இப்போது இது எப்படி திடீரென மீண்டும் முளைத்திருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.

சாந்தியை முன்பே தெரியாது

சாந்தியை அதற்கு முன்பு எனக்குத் தெரியவே தெரியாது. ரஞ்சன்தான் அவரை தாஜ் ஹோட்டலுக்கு அழைத்து வந்து என்னிடம் அறிமுகப்படுத்தினார். எனவே சாந்தி ஏற்கெனவே எனக்குப் பழக்கமானவர் என்பது தவறான தகவல்.

நான் மிரட்டியிருந்தால் என்னை ஏன் சந்திக்க வேண்டும்?

சாந்தியை நான் மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் உண்மையல்ல.
நான் அவரை மிரட்டியிருந்தால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? காவல் நிலையத்துக்கோ, காவல் ஆணையரிடமோ சென்று புகார் அளித்திருக்க வேண்டும். மாறாக என்னை ஏன் சந்திக்க வர வேண்டும்? ரஞ்சனும் சாந்தியும் என்னிடம் வந்து பணம் வாங்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். நடந்தது அவ்வளவுதான்.

நான் அவர்களிடம் பணம் கேட்டதாகவோ, மிரட்டியதாகவோ கூறினால் அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். ஆதாரம் இல்லாமல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ரஞ்சன் உண்மையைச் சொல்லட்டும்

ரஞ்சன் என்னைப் பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கேட்கிறீர்கள். அவர் முதலில் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும்.

அவர் என்னை ஏன் சந்திக்க வந்தார்? யார் மூலமாக என்னைச் சந்திக்க வந்தார்? அவர் நேரடியாக என்னிடம் வரவில்லை. ஒரு அரசியல் தலைவர் மூலமாகத்தான் என்னைச் சந்தித்தார். அதன்பிறகு சாந்தியை எதற்காக என்னிடம் அழைத்து வந்தார்?

தாஜ் ஹோட்டலில் நடந்த அந்தச் சந்திப்புக்குப் பிறகு ரஞ்சன் என்னை மீண்டும் சந்தித்தாரா அல்லது என்னிடம் பேசினாரா என்பதையும் அவர் சொல்லட்டும்.

ரஞ்சனும் சாந்தியும் சேர்ந்துதான் என்னிடம் பணம் வாங்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நான் முடியாது என்று கூறியதுடன் அந்த விவகாரம் முடிந்துவிட்டது.

காவல்துறை விசாரிக்கவில்லை

இந்த விவகாரம் தொடர்பாக எந்தக் காவல்துறையும் இதுவரை என்னை விசாரிக்கவில்லை. காவல்துறை என்னை விசாரித்தால் பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். இதில் மறைப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, சில யூடியூபர்கள் தங்களுடைய வீடியோக்களைப் பரவலாக்கி பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எங்களைப் போன்றவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதாக நான் கருதுகிறேன். தங்களுக்கு விருப்பமான வகையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ரஞ்சன் யார் சொல்லிக் கொடுத்து இப்படிப் பேசுகிறார் என்பது எனக்குத் தெரியாது. அதை அவர்தான் விளக்க வேண்டும்.

புதிய தமிழகம் கட்சி மீது குற்றச்சாட்டு

இந்த விவகாரத்தை அதிகமாகப் பரப்பி என்னுடைய பெயருக்கு சேதம் ஏற்படுத்தும் முயற்சியில் புதிய தமிழகம் கட்சி ஈடுபட்டிருப்பதாகவும் நான் கருதுகிறேன். அவர்கள்தான் இதைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். அதையும் நாங்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

சைபர் கிரைமில் புகார்கள்

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் மற்றும் சைபர் கிரைம் வழியாக புகார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொறுப்பாளர்களிடம் சைபர் கிரைமில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறேன். அதன்படி புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எனவே தேவையான இடங்களில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஜான் பாண்டியன் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share