55 சவரன் தங்க கிரீடத்திற்கு பதில் போலி கிரீடமா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் பரபரப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

more than a lakh devotees for Sabarimalai New Year darshan

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், சுவாமிக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட சுமார் 55.72 சவரன் எடை கொண்ட தங்கக் கிரீடம் காணாமல் போயிருப்பதாகவும், அதற்குப் பதிலாக போலி கிரீடம் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் 445.78 கிராம் (சுமார் 55.72 சவரன்) எடை கொண்ட தங்கக் கிரீடத்தை சபரிமலை ஐயப்பனுக்குக் காணிக்கையாக வழங்கி உள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ. 70 லட்சம் ஆகும். இந்த விவரங்கள் அனைத்தும் தேவஸ்வம் வாரியத்தின் கோயில் பதிவேடுகளிலும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.சபரிமலை கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலைகள் மற்றும் கருவறை கதவுகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட போது, அவற்றின் எடை குறைந்ததாக ஏற்கனவே சர்ச்சை எழுந்தது.

ADVERTISEMENT

இது தொடர்பான முறைகேடுகள் குறித்து கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.2012-ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய சுமார் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள 55.75 சவரன் கிரீடம் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குப் பதிலாக ஒரு போலி கிரீடம் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆரன்முலாவின் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த 4 சவரன் தங்க மாலையும் மாயமான சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேவஸ்வம் வாரியத் தலைவர் கே. ஜெயக்குமார் கூறும்போது, “ தங்க கிரீடம் தொலைந்து போகவில்லை என்று திருவாபரணம் ஆணையர் கூறுகிறார். அசல் கிரீடமும், அதே மாதிரியான மற்றொரு கிரீடமும் அங்கு உள்ளன.தேவசம் ஆணையருக்கு அளித்த விளக்கத்தில், பல மதிப்புமிக்க பொருள்களுக்காக இதே போன்ற மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளதாக திருவாபரணம் ஆணையர் கூறி உள்ளார்.கிரீடம் தொலைந்து போனது குறித்து செய்திகள் மூலமாகவே தனக்குத் தெரியவந்தது. சபரிமலையில் உள்ள பாதுகாப்பு அறையில் தங்க கிரீடம் இல்லை என்றால், அது ஆரன்முலாவில் இருக்க வேண்டும்.ஆரன்முலாவிலும் தங்க கிரீடம் இல்லை என்றால், கிரீடம் தொலைந்து போயிருந்தது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். என்றார்.

ADVERTISEMENT

முன்னதாக உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில், சபரிமலை ஐயப்பனின் ஆபரணங்கள் சரிபார்க்கும் பணி அண்மையில் நடைபெற்றது. அப்போது, சன்னிதான பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55 சவரன் தங்கக் கிரீடம் மாயமாகி, அதற்குப் பதிலாக போலி கிரீடம் மாற்றி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக ‘சமகாலிக மலையாளம்’ இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தத் தங்கக் கிரீடம் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) இல்லாத பகுதியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐயப்பனின் திருவாபரணங்கள் மற்றும் காணிக்கைப் பொருட்கள் குறித்த விரிவான அறிக்கை விரைவில் கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும்போதே, இந்த தங்கக் கிரீடம் மாயமான விவகாரம் குறித்த கூடுதல் உண்மைகளும், முழுமையான விவரங்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share