5 நாள் பணி.. 30 மாதமாக இழுத்தடிக்கும் மோடி ‘சர்க்கார்’.. 3 நாள் வங்கி ஊழியர் ஸ்டிரைக் ஏன்?

Published On:

| By Mathi

Bank Strike

வாரத்தில் 5 நாள் வங்கிப் பணி தொடர்பாக 2024-ம் ஆண்டு மார்ச்சிலேயே உடன்பாடு ஏற்பட்டும், 30 மாதங்களாக மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை; இதனால்தான் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய 3 நாள் வேலைநிறுத்தத்தை வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIBEA) பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIBEA) பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம் அளித்த பேட்டி: தற்போது வங்கிகளுக்கு வழக்கமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.

ADVERTISEMENT

தற்போது வங்கித் துறையில் பணிச்சுமை பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கடும் மன அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர். எனவே, மீதமுள்ள சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

அதேநேரத்தில், இதனால் பொதுமக்களுக்கான வங்கிச் சேவை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாட்டையும் முன்வைத்தோம். அதன்படி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் கூடுதலாக 40 நிமிடங்கள் வங்கிச் சேவையை நீட்டிக்க ஒப்புக்கொண்டோம்.

ADVERTISEMENT

2024-ல் ஒப்பந்தம்

இந்த அடிப்படையில் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக மாற்றுவது தொடர்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிர்வாகத்துடன் அதிகாரப்பூர்வ உடன்படிக்கை கையெழுத்தானது. ஆனால், அந்த உடன்படிக்கை ஏற்பட்டு 30 மாதங்கள் கடந்த பிறகும் மத்திய அரசு இதுவரை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

அரசின் இந்தத் தாமதத்தால் அதிருப்தி அடைந்த வங்கி தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் அறிவித்தன.

ADVERTISEMENT

மத்திய அரசு பாராமுகம்

கடந்த மார்ச் 25-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, இந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதேபோன்று கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போதும் உறுதியளிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோதும், எங்களது கோரிக்கையை அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

வேலை நிறுத்தம்

ஆனால், அளிக்கப்பட்ட உறுதிமொழிகளின்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வேறு வழியின்றி செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் அகில இந்திய அளவில் முழுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

பேச்சுவார்த்தை தோல்வி

வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, நேற்று டெல்லியில் மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் உள்ள கூடுதல் தலைமைத் தொழிலாளர் ஆணையர் தலைமையில் சமரசக் கூட்டம் நடைபெற்றது.

இதில் நிதியமைச்சக அதிகாரிகள், இந்திய வங்கிச் சங்கத்தின் (IBA) பிரதிநிதிகள், வங்கி நிர்வாகங்களின் பிரதிநிதிகள், தொழிலாளர் ஆணைய அதிகாரிகள் மற்றும் வங்கி தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு எங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு, இந்தப் பிரச்சினையில் உறுதியான, சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய முடியும் என்று எங்கள் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்தோம்.

30 மாதங்களாக இழுத்தடிப்பு

கடந்த 30 மாதங்களாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எங்களது கோரிக்கை மற்றும் ஏற்கனவே ஏற்பட்ட உடன்படிக்கையின் தற்போதைய நிலை என்ன என்பதைக்கூட அரசு தெளிவுபடுத்தவில்லை.

தற்போதைய நிலையிலும் எந்தவித உறுதியையும் அளிக்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே, திட்டமிட்டபடி மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

8 லட்சம் ஊழியர் பங்கேற்பு

அதன்படி, செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அகில இந்திய வங்கி வேலைநிறுத்தம் நடைபெறும். பொதுத்துறை வங்கிகள், பழைய மற்றும் புதிய தலைமுறை தனியார் வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்.

இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பெரும் அசவுகரியம் ஏற்படும் என்பது எங்களுக்குத் தெரியும். அது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.

அரசுக்கும் வங்கி நிர்வாகங்களுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பே முறையான நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவோ, குறைந்தபட்சம் உறுதியான பதிலை அளிக்கவோ முடியவில்லை.

வேலை நிறுத்தம் திணிப்பு

எனவே இந்த வேலைநிறுத்தம் எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். இந்த மூன்று நாட்களிலும் வங்கித் துறை முழுமையாக ஸ்தம்பிக்கும் வகையில், அனைத்து வங்கிகளிலும் வேலைநிறுத்தம் முழுமையாக நடைபெறும்.

இப்போதும்கூட அரசையும் இந்திய வங்கிச் சங்கத்தையும் (IBA) கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளுடன் உடனடியாக முன்வர வேண்டும். இல்லையெனில் திட்டமிட்டபடி மூன்று நாள் வேலைநிறுத்தம் தொடரும். இவ்வாறு சி.எச். வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share